கிரெடிட் கார்டை நிர்வகிப்பது ஒரு கலை
கிரெடிட் கார்டை நிர்வகிப்பது ஒரு கலை. பலருக்கு இது வாய்ப்பதில்லை. சிலர் இரண்டு மூன்று கிரெடிட் கார்டு வாங்கி வைத்து எப்ப பில்லிங் தேதி வரும் என்று குழம்பி நாள் தவறி பணம் கட்டி வட்டி அபராதம் கட்டி, ஒரு கார்டின் கடனை அடைக்க இன்னொரு கார்டில் கடன் வாங்கி என்று மாட்டிக்கொள்வதுண்டு. நான் இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரே கிரெடிட் கார்டுதான் வைத்துள்ளேன். பலமுறை எனது கிரெடிட் கார்டு உச்ச வரம்பை உயர்த்திக்கச்சொல்லி வங்கியில் இருந்து அழைப்பு வந்தும் நான் மறுத்துவிட்டேன்.
எனது பில்லிங் தேதி மாதத்தின் 21-ஆம் தேதி. வீட்டின் எல்லா செலவுகளுக்கும் நான் கிரெடிட் கார்டைதான் பயன்படுத்துகிறேன். மளிகைச்செலவு முதல் அலைபேசி, இண்டர்நெட் செலவு வரை கிரெடிட் கார்டுதான். எனது கிரெடிட் கார்டில் மாதத்துக்கு ஐநூறு ரூபாய் வரை சினிமா டிக்கெட் இலவசமாக வாங்கிக்கொள்ளலாம். சில கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு சலுகை உண்டு. பெட்ரோல் நிலையத்தில் சலுகை உண்டு.
மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் பங்குச்சந்தையில் பங்குகளின் விலை குறைவாக இருப்பதால் நான் பெரும்பாலும் அந்த பங்குகளை வாங்க கையில் இருக்கும் பணத்தை பயன்படுத்துவேன். மாதத்தின் மூன்றாவது வாரம் சின்ன ஸ்விங் டிரேடிங் செய்து அந்த லாபத்தை எடுத்து கிரெடிட் கார்டு பில் கட்டிவிடுவேன். இதனால் அபராதம் கட்டாமல் வட்டி இல்லாமல் ஒவ்வொருமாதமும் கிரெடிட் கார்டை திறமையாக பயன்படுத்துகிறேன்.
தவிர வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்லும்போது கிரெடிட் கார்டில் இருக்கும் ஏர்போர்ட் லவுன்ஞ் , ஹோட்டல் சலுகை வசதியை பயன்படுத்துகிறேன். ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டில் சேரும் சிறப்புப்புள்ளிகளின் எண்ணிக்கையை வைத்து டாமினோ பீட்சா, கே.எப்.சி, பேட்டா ஷோரூம் வவுச்சர்களை வாங்கி வைத்து அதில் பொருட்கள் வாங்கி வைத்துக்கொள்வேன். அல்லது நண்பர்களின், உறவினர்களின் விசேஷங்களுக்கு செல்லும்போது அந்த வவுச்சுர்களை கொடுத்துவிடுவேன். ஒரு சில நேரங்களில் இந்த புள்ளிகளுடன் வெறும் நூறு ஐநூறு ரூபாய் கூட சேர்த்து கொடுத்தால் நல்ல பிராண்டட் மின்னணுப்பொருட்கள் (ஹேர் ட்ரையர் முதல் அயர்ன் பாக்ஸ் வரை ) அல்லது அழகுசாதனப் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.
பாய்ஸ் படத்தில் அன்னவெறி கண்ணையன் செந்தில் ஒரு டேட்டாபேஸ் வைத்திருப்பார். அதுபோல இணையத்தில் அவ்வப்பொழுது என்னோட கிரெடிட் கார்டுக்கு எங்கெல்லாம் டிஸ்கவுண்ட் தர்றாங்க, ஆபர் தர்றாங்க என்று கவனித்துக்கொண்டே எல்லாவற்றையும் குறித்துவைத்துக்கொள்வேன். எனக்கு சராசரியாக மாதத்துக்கு முப்பதாயிரம் வரை கிரெடிட் கார்டு பில் வரும். எனது கிரெடிட் கார்டு பில் உச்ச வரம்பு ஒரு லட்சம். ஆனால் நான் எப்போதும் எனது கிரெடிட் கார்டு உச்சவரம்பில் 33% மட்டுமே ஒரு மாதத்துக்கு பயன்படுத்துவேன். இந்த இருபத்தைந்து வருடங்களில் அபூர்வமாக இரண்டொரு சந்தர்ப்பங்களில் மட்டும் உச்ச வரம்பில் 50%க்கு மேல் கிரெடிட் கார்டு பயன்படுத்தியுள்ளேன். அதுவும் தங்க நகைகள் வாங்க. வாழ்க்கையில் ஒருமுறை கூட கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுத்தது இல்லை.
வெளிநாடு சென்றால் கிரெடிட் கார்டு இண்டர்நேஷனல் வசதியை பயன்படுத்தமாட்டேன். அதற்கு டிராவல் கார்டு தனியாக வைத்துள்ளேன். அதில் டாலர் லோடு செய்துக்கொள்வேன். நான் மாசத்துக்கு முப்பதாயிரம் வரை கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறேன். ஆனால் ஐந்தாயிரம் முதல் எட்டாயிரம் வரை எனக்கு அதில் சிறப்பு சலுகைகள் கிடைத்துவிடுவதால் இதுவரை கிரெடிட் கார்டு எனக்கு பிரச்சினையாக இருந்ததே இல்லை.
— விநாயக முருகன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.