IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது – தொடர் 3
மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் போட்டியின்போது சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் திரண்டிருந்த மொத்த கூட்டமும் தோனிக்காக ஆரவாரம் செய்தபடியே சூர்யகுமார் யாதவை தோனி ஸ்டம்ப்பிங் செய்தபோது அரங்கம் தெறித்தது. ரன் எடுக்காமல் தோனி பேட்டிங் செய்தாலும் கூட்டம் ஆரவாரம் செய்தது.
ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக தோனியைப் போற்றிய நேரத்தில், தோனி பாராட்டியது, கேரளாவின் விக்னேஷ் புத்தூர் என்ற இளம்வீரரை. கிரிக்கெட்டில் இதற்கு முன் பெரிய போட்டிகள் எதிலும் விளையாடாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத்தேர்வாகி,முதல் ஆட்டத்திலேயே சி.எஸ்.கே.வின் 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார் புத்தூர். இதுதான் கிரிக்கெட்.எந்தநொடியில் என்ன திருப்பம் ஏற்படும் என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு கிரிக்கெட் தனித்துவமானது.
கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணியும், காளிச்சரண் தலைமையிலான வெஸ்ட் இன்டீஸ் அணியும் ஆடிய பெங்களூர் டெஸ்ட்டின் ஐந்தாவது நாளில் ஏற்பட்ட திடீர் திருப்பம் என்பது பவுலிங்கிலோ, பேட்டிங்கிலோ அல்ல, இந்திய அரசியலில்.
அப்போது பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா ஆட்சி. உரிமை மீறல் பிரச்சினையில் இந்திராகாந்தியை கைது செய்து டெல்லி திகார் ஜெயிலில் அடைத்துவிட்டார்கள்.
நாடெங்கும் பரபரப்பு. இந்திரா காந்தியும் அவரது இந்திரா காங்கிரசும் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தபிறகு, கர்நாடக மாநிலம் சிக்மகளூ சிக்மகளூரில் நடந்த இடைத்தேர்தலில் போ போட்டியிட்டு வென்று, மீண்டும் நாடாளுமன்றத்தில் நுழைந்திருந்தார் இந்திரா. கைது நடவடிக்கையால் கர்நாடக மாநிலமும் அதன் தலைநகர் பெங்களூரும் கலவரமாக, சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்தியாவெஸ்ட் இன்டீஸ் இடையிலான இரண்டாவது டெஸ்ட் மேட்ச்சின் ஐந்தாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் யாருக்கும் வெற்றியில்லை.
மூன்றாவது டெஸ்ட் மேட்ச் கல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்தியா கிட்டதட்ட வெற்றி பெறும் நிலை. வீட்டில் கமென்ட்ரி கேட்டுக்கொண்டிருந்தவனை அம்மா சாப்பிட கூப்பிட்டார். “காலையிலிருந்து பச்ச தண்ணிகூட குடிக்காம அப்படி என்னதான் அந்த எழவு ரேடியோவுல இருக்கோ?” என்ற அம்மாவின் கோபம்கூட பையன் காதில் விழவில்லை.
ஜெயித்துவிடலாம் என்ற நினைத்த நேரத்தில், வெளிச்சம் குறைந்துவிட்டதை வெஸ்ட் இன் டீஸ் டீம் சுட்டிக்காட்ட, ஆட்டத்தை முடிவுக்குகொண்டு வந்துவிட்டார்கள் நடுவர்கள். ஸ்டேடியத்தில் ஒரே களேபரம்.கெட்டவார்த்தயால் திட்டிக் கொண்டிருந்தான் கமென்ட்ரி கேட்ட பையன்.
“யாரைத் திட்டுறான் இவன் கிறுக்குப் புடிக்கிறதுக்கு முன்னாடி ஒருமுறை கோயிலுக்கு அழைச்சிட்டுப்போயி மந்திரிச்சிட்டு வரணும்’ என்று சொல்லிக்கொண்டே அவனுடைய துணிகளை மடித்துக்கொண்டிருந்தார் அம்மா.
மூன்றாவது டெஸ்ட்டும் யாருக்கும் வெற்றிதோல்வியின்றி முடிந்தது. டிரான்சிஸ்டர் ரேடியோவை ஆஃப் செய்துவிட்டு, சாப்பாட்டு தட்டை எடுத்து வைத்து உட்கார்ந்த பையனிடம்,”என்னடா.. இந்தியா டீம் ஜெயிச்சிடிச்சா?”என்று சோறு போட்டபடியே அம்மா கேட்டார்.
“இல்லம்மா.. ட்ரா ஆயிடிச்சி” “இதையேதான் எப்பவும் சொல்ற.. 5 நாள் விளையாடியும் யாரும் ஜெயிக்க முடியாத அளவுக்கு அப்படி என்னடா விளையாட்டு அது?” “நானே செம கடுப்புல இருக்கேன். வாயை கிளற வேணாம். நீ ரசத்த ஊத்து”
கெர்ரிபாக்கர் தன் பிசினஸ் கூட்டாளிகள், கிரிக்கெட் ப்ளேயர்களின் வாயைக் கிளறிக் கொண்டுதான் இருந்தார். அவர்களும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
“ஃபாஸ்ட் பவுலர்ஸ் நியூ பாலை யூஸ் பண்ற வரைக்கும் கேம் விறுவிறுப்பா போகுது. ஸ்பின்னர்ஸ் வந்துட்டா ஆட்டமே மாறிடுது.”
“பிட்ச் ரெடி பண்ணும்போது ஃபாஸ்ட் பவுலர் ஸ்க்கு வசதியா இருக்கிற மாதிரி அமைக்கணும்.”
“பேட்ஸ்மேன் அடிச்சி ஆடணும். இல்லேன்னா அவுட்டாகணும். டொக்கு வச்சிக்கிட்டே இருக்கக்கூடாது”
“ஓவர் மிச்சமிருக்கும் போது வெளிச்சமில்லைன்னு சொல்லி மேட்ச்சை முடிக்கிறதெல்லாம் அநியாயம்”
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஒவ்வொருவரும் கருத்துகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பாக்கரின் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.
“பிரபலமான ப்ளேயர்ஸோடு புதுசா திறமையுள்ள ஃபாஸ்ட் பவுலர்களையும் சேர்க்கலாம்ல? இந்தியாவுல யாராவது இருக்காங்களா?” பாக்கர் கேட்டதும் மற்றவர்கள் யோசித்தனர். “இந்தியாவில் பேட்ஸ் மென்னைவிட ஸ்பின் பவுலர்ஸ் அதிகம்”
“பாகிஸ்தான்?””அங்கே திறமையான ஒரு பையன் இருக்கான்”
“தூக்கிடலாமா?”.
(ஆட்டம் தொடரும்)
கோவி.லெனின், மூத்த பத்திாிகையாளா்