திருச்சி மக்களுக்கு சைபர் க்ரைம் அலார்ட்..
திருச்சி மக்களுக்கு சைபர் க்ரைம் அலார்ட்..
வீடியோ கால் மூலம் வரும் வில்லங்கம்…
தெரியாத எண்ணில் வரும் வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளை (Video Call) ஏற்க வேண்டாம்!!! விபரீதத்தை தொடர வேண்டாம்!!!
பொதுமக்கள் தங்களுடைய தொலைபேசியில் வாட்ஸ்அப் செயலியில் தெரியாத எண்ணிலிருந்து வரும் வீடியோ அழைப்புக்களை (Video Call) எக்காரணத்தை கொண்டும் ஏற்க வேண்டாம். அந்த வீடியோ அழைப்பின் மூலம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதனை ஆபாசமாக சித்தரித்து அல்லது அவர்களுடைய ஆபாச பதிவுடன் சேர்த்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் என மிரட்டி பணம் பறிக்கும் (வெளிமாநில அல்லது வெளிநாட்டு) கும்பல் இயங்கி வருகிறது. எனவே நீங்கள் பணத்தையும் நன்மதிப்பை இழக்க நேரிடும்.
மேலும் இத்தகைய இழப்புகளை தவிர்க்க தெரியாத எண்ணில் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை தவிர்த்து விழிப்புடன் இருக்குமாறு மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு ஆன்லைனில் ஆப்பு..
போலியான சலுகை அறிவிப்புகளை நம்பி போலியான செயலிகளில் மூலம் முன்பணம் அல்லது உங்களது வங்கி விவரங்களை கொடுத்து ஏமாற வேண்டாம்.
(எடுத்துக்காட்டாக)
தங்களுடைய A/c XXXXXXXX6596 * என்ற வங்கி கணக்கில் ரூ. 425000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனை * 56n.me/5jask4 * என்ற Link கிளிக் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.} என்ற செய்தியானது தங்களது தொலைபேசி எண்ணிற்கு வந்தால் அந்த link னை திறக்க வேண்டாம். அந்த link னை தொடுவதன் மூலம் உங்கள் தொலைபேசி எண்ணானது ஊடுருவப்பட்டு உங்களது வங்கி கணக்கில் உள்ள விபரங்கள் மற்றும் பணம் அனைத்தும் இணையவழி மூலம் திருடப்படுகிறது. என்று மூத்த குடிமக்களுக்கு சைபர் கிரைம் அலார்ட் செய்துள்ளது.
ஆன்லைன் சந்தை ஆபத்து சந்தை
ஆன்லைன் சந்தையில் மறு விற்பணைசெய்யப்படும் இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கும் போது பார்சல் மூலம் பொருட்களை அனுப்பிவைப்பதாக கூறி முன்பணம் செலுத்துமாறு யாரேனும் கூறினால் கவனமாக செயல்படவும். நீங்கள் ஏமாற்றப்படலாம்.
ஆன்லைனில் கடன் வாங்கியவர்கள் எல்லாம் ஆண்டி..
தனிநபர்கள் / சிறு வணிகங்கள் விரைவாகவும் தொந்தரவில்லாமலும் கடன்களைப் பெறுவதற்கான வாக்குறுதிகள் தொடர்பாக வளர்ந்து வரும் அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் தளங்கள் / மொபைல் செயலிகளுக்கு இரையாக வேண்டாம்.
அதிகப்படியான வட்டி விகிதங்கள் மற்றும் கூடுதல் மறைக்கப்பட்ட கட்டணங்கள் கடன் வாங்குபவர்களிடமிருந்து கோரப்படுகின்றன. இதுபோன்ற நேர்மையற்ற செயல்களுக்கு இரையாக வேண்டாம் என்றும், ஆன்லைனில் அல்லது மொபைல் செயலிகள் மூலம் கடன்களை வழங்கும் நிறுவனம் / நிறுவனத்தின் முன்னோடிகளை நம்பி ஏமாற வேண்டாம். மேலும், நுகர்வோர் ஒருபோதும் அடையாளம் தெரியாத நபர்கள், சரிபார்க்கப்படாத / அங்கீகரிக்கப்படாத பயன்பாடுகளுடன் KYC ஆவணங்களின் நகல்களைப் பகிரக்கூடாது. இதுபோன்ற அங்கிகரிக்கப்படாத செயலிகள் / தளங்கள் பற்றிய புகார் அளிக்க சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தையோ அல்லது ஆன்-லைனில் புகாரை பதிவு செய்ய (https://sachet.rbi.org .in) portal -யை பயன்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கண்ணிமைக்கும் நேரத்தில் மூளைச்சலவை மோசடி
கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.
மருத்துவ உதவிக்கு அல்லது அவசர தேவைக்கு பணம் உதவி செய்யுமாறு அறிமுகம் அற்ற நபர்கள் உங்களை அணுகினால் அவர்கள் தேவையின் உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ளவும். உதவி செய்வதாக எண்ணி மோசடி நபர்களிடம் ஏமாறவேண்டாம்.போலியான தொலைபேசி அழைப்புகளும் செயலிகளையும் கண்டறிந்து அவற்றில் இருந்து விலகி இருங்கள்…
செல்போன் டவர் அமைப்பதாக மோசடி
மொபைல் கோபுரம் அமைப்பதற்கு மத்திய அரசிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக முன்பணம் செலுத்துவதற்கு எந்த ஒரு மின்னஞ்சலோ அல்லது குறுஞ்செய்தியோ தங்களது தொலைபேசிக்கு அனுப்பப்பட்டால் அதை நம்பி ஏமாற வேண்டாம். மத்திய அரசின் TRAI அமைப்பானது தனிப்பட்ட நபருக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதில்லை. இது போன்ற போலி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாமென திருச்சி மாநகர காவல்துறையினரால் கேட்டு கொள்ளப்படுகிறது.
–ஜெ.கே..