திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களை பதம் பார்த்த ஃபெஞ்சல் புயல் !
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 30 மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் அடை மழையால், பெரும் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகிறது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால், விழுப்புரம், திருவண்ணாமலையை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே அடை மழை போல் நாள்முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கிறது , இங்கு இடைவிடாத மழை பெய்து வரும் நிலையில், நெடுஞ்சாலை குடியிருப்பு மற்றும் கோவில் , காவல்நிலையம் போன்ற இடங்களில் மழைநீர் புகுந்ததால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிக அளவில் மழை (50 செமீ) பொழிந்ததால் சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி, உபரி நீர் நகருக்குள் புகுந்ததின் காரணமாக சேலம் – வாணியம்பாடி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி ஊத்தங்கரை பஸ்நிலையம் அருகில் பரசனேரி நிரம்பி வெளியேறிய உபரிநீரால், அங்கே ஏரி கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் டூரிஸ்ட் வாகனங்கள் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
இதனால் சேலம் வாணியம்பாடி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், போச்சம்பள்ளி சுற்றுவட்டாரங்களில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 25 செ.மீட்டர் (250 மில்லிமீட்டர்) மழை பெய்துள்ளது. போச்சம்பள்ளி அருகே உள்ள கோணணூர் ஏரி நிரம்பி ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது இதன் காரணமாக போச்சம்பள்ளி காவல் நிலையம் மழைநீரால் சூழப்பட்டுள்ளது .
இதே போல், திருவண்ணாமலை மாவட்டம் , மலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சில வீடுகள் மண்ணில் புதைந்துள்ள நிலையில், ஒரு வீட்டில் இருந்த 7 பேர் மண்ணுக்கடியில் சிக்கியுள்ளதாக பேரிடர் மேலாண்மை மீட்புப் குழுவினர் தெரிவித்துள்ளனர்..மேலும், திருவண்ணாமலை ஆட்சியர் வீட்டின் சுற்றுச்சுவரையும் மழைநீர் சேதப்படுத்தியிருக்கிறது ,
அண்ணாமலையார் கோயில் பே கோபுரத் தெரு, சின்னக்கடை தெரு, போளூர் சாலை, வேலூர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொது மக்கள் கடும் இன்னலுக்குள்ளாகினர். ஊசாம்பாடி ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, உபரிநீர் அளவுக்கு அதிகமாக வெளியேறியதால் திருவண்ணாமலை – போளூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகில் உள்ள பாம்பாறு அனை நிரம்பிய நிலையில் அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது. அணைக்கு வரும் 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இவ்விரு அனைகளையோட்டி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்ட மழை பாதிப்புகளை அந்தந்த மாவட்ட பேரிடர் மீட்பு குழு தீயணைப்பு வீரர்கள் மற்றும் மின்சார துறை காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர்கள் பாஸ்கர பாண்டியன் மற்றும் சரயு அவா்கள் தெரிவித்துள்ளார்கள்.
-மணிகண்டன்.