நண்பர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த படம் ! திருச்சியை சேர்ந்த இயக்குநர் பிரகாஷ்பாஸ்கர் கலகல நேர்காணல்
தமிழ் சினிமாவில், காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷன் என பல்வேறு கதைக்களத்தை கொண்டபடங்கள் இருந்தாலும், காதல் திரைப்படங்களுக்கென்று தனி இயக்குநர்களையும், ரசிகர்களையும் தமிழ் சினிமா உருவாக்கி வைத்திருக்கிறது. இதில், பழம்பெரும் இயக்குநரான ஸ்ரீதரில் தொடக்கி கதிர், அட்லீ வரை பட்டியல் நீள்கிறது.

இந்த பட்டியலில், புதியதாக இணைந்தவர்தான் இயக்குனர் பிரகாஷ்பாஸ்கர். திருச்சியை பூர்வீகமாக கொண்ட பிரகாஷ், சிறுவயது முதலே சினிமாவில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதன் காரணமாக, குறும்படம், ஆல்பம் பாடல் என இயக்கிக்கொண்டிருந்த பிரகாஷ்பாஸ்கர், கடந்த ஆண்டு “டியர் ஜீவா” என்னும் படத்தை இயக்கி தனது என்ட்ரியை கொடுத்தார். தற்போது, அடுத்த இன்னிங்ஸை கொடுக்க ரெடியாகி வரும் அந்த சிறிய கியாப்பில், பிரகாஷ்பாஸ்கரை சந்தித்து கலந்துரையாடினோம்.
உங்கள் முதல் படமான “டியர்ஜீவா” படத்தை பார்த்த ரசிகர்களின் பாராட்டு மற்றும் விமர்சனம் என்ன?
டியர் ஜீவாஸ் கிரிப்ட் ரெடியாக இருந்தது. அந்த சமயத்தில் எனது நண்பர்கள் சிலர் டியர் ஜீவாஸ் கிரிப்டை படித்துவிட்டு, தாங்களே தயாரிக்க முன்வந்தானர். நண்பர்கள் ஒன்று சேர்ந்து, சில லட்சத்தில் தயாரித்த படம். அதற்கே நல்ல அவுட்புட் வந்தது. ஓ.டி.டியில் வெளியிட்டோம். படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஃபீல் குட் மூவி என்று பாராட்டினார்கள்.
இது எனக்கு கிடைத்த முதல் வெற்றி. சாரி… எனக்கு மட்டும் இல்லை… எங்கள் டீம்க்கு கிடைத்த வெற்றி என்று சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும். இந்த நேரத்தில், டியர் ஜீவா படத்தில் ஒளிப்பதிவு செய்த அரவிந்த் சஞ்சீவ், இசையமைத்த ரஷாந்த் அரவிந், படத்துல ஹீரோவா நடிச்ச திருச்சி சரவணகுமார் (டி.எஸ்.கே) ஆகியோருக்கு நன்றிகள். மேலும், இவர்களுக்கும் நல்ல பாராட்டும் விமர்சனமும் வந்துச்சு.
தமிழில் வெளியான டியர்ஜீவா, இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இந்தி மொழியிலும் நல்ல வரவேற்புபெற்றது. ஆகையால், கூடுதல் மகிழ்ச்சி. அதன் உத்வேகம் காரணமாக, மிக விரைவில் தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
நீங்கள் இயக்கிய முதல் திரைப்படம் உங்களுக்கு திருப்திகரமாக அமைந்ததா?
டியர் ஜீவா திரைப்படத்தை பொறுத்த வரையில், நான் முன்பே சொல்லியிருந்ததைப்போல், படத்தின் பட்ஜெட் மிகவும் குறைவுதான். கொடுத்த பட்ஜெட்டிற்கு நாங்கள் சமரசம் செய்யாமல், வெறும் 17 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். அடுத்த சிலமாதத்தில், படத்தை ரிலீசும் செய்துவிட்டோம். என்னை பொறுத்தவரையில், மிகபெரிய விஷயமாக பார்க்கிறேன். அடுத்த ஒரு பெரிய படத்தை இயக்க, டியர் ஜீவாதான் அடித்தளமே!
டியர் ஜீவா படத்தில், குறைகள் கண்டிப்பாக இருக்கின்றன. அதைஅடுத்துஇயக்கப்போகும்படத்தில், நிச்சயம் சரிசெய்து கொள்வேன். மற்றப்படி எனக்கு டியர் ஜீவா படத்தை இயக்கியதில் முழு திருப்திதான்.

“டியர் ஜீவா“ படம் ஏன் திரையரங்கில் வரவில்லை?
டியர் ஜீவா படத்தின் தயாரிப்பாளர்களும் எனது நண்பர்களுமான உமர்முக்கதர் மற்றும் சதீஷ் ஆகியோர் படத்தை தியேட்டரில் கொண்டுவர பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். அதே சமயத்தில், ஓ.டி.டி., நிறுவனம் ஒன்று, படத்தை பார்த்துவிட்டு வெளியிட முன்வந்தனர். ஆகையால், மகிழ்ச்சியாக சம்மதித்தோம். மேலும், எனது தயாரிப்பாளர்கள் என்னால் நஷ்டம் அடையகூடாது என்ற முடிவில் நான் தெளிவாக இருந்தேன்.
அடுத்த ஸ்கிரிப்ட் பற்றிபகிர்ந்து கொள்ள முடியுமா?
கதை, திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். (மெல்லிய சிரிப்போடு) அதுவும் ஒரு காதல் கதைதான். சில தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி வருகிறேன். கூடிய விரைவில் நல்லது டக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் படத்தில் இசை தனித்துவமாக இருக்கிறதே அதன் காரணம் என்ன?
சினிமாவைப்போலவே, இசை மீதும் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால்தான் சில பாடல்களைகூட நான் எழுதியிருக்கிறேன். ஒரு காட்சியை, இசை மட்டுமே Elevate செய்கிறது. ஆகையால், எனக்கு பிடித்த பாடல் மற்றும் பின்னணி இசைகளை கேட்டுக்கொண்டேதான் கதை, திரைக்கதையினை அமைப்பேன். திரைக்கதையினை அமைக்க, இசை மிகபெரியபக்க பலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆகையால், நான் இயக்கிய குறும்படத்தில் இருந்து இப்போதுவரை இசை முக்கியத்துவமாக இருக்கும்.
அடுத்த படத்தில் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க திட்டம்?*
இப்போது கதையில் மட்டும் கவனம் செய்து வருகிறேன். நல்லா வந்துருக்கு. ஒரு பெரிய ஹீரோ நடிச்சா நல்லா இருக்கும்னு தோணுது.
உங்களை போன்ற வளரும் இயக்குநருக்கு சினிமாவில் உள்ள சவால்கள் என்ன?*
இப்போது, ஒருபடத்தை எடுத்து விடலாம். ஆனால், அதை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதுதான் மிகபெரிய சவால்களே. அதுபோக, தயாரிப்பளர்களின் எதிர்ப்பார்ப்பு, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு, வியாபாரம், உதவி இயக்குநராக இருந்து, இயக்குநராக ஆகும் காலம் வரையில் இருக்கும் இடைவெளி, மாத வருமானம், பொறுமை, இப்படி எல்லாமே சவால்கள்தான்!
நேர்காணல் – ஜோல்னா ரெங்கா







Comments are closed, but trackbacks and pingbacks are open.