அங்குசம் பார்வையில் ‘டியர் ரதி’
தயாரிப்பு : கண்ணதாசன், மோகனா மஞ்சுளா, டைரக்ஷன் : பிரவீன் கே.மணி. ஆர்டிஸ்ட் : சரவண விக்ரம், ஹஸ்லி அமான் [ அறிமுகம் ] ராஜேஷ் பாலசந்திரன், சாய் தினேஷ், சுப்பிரமணியன், பசுபதி ராஜ், சரவணன் பழனிச்சாமி, தமிழ்செல்வன். ஒளிப்பதிவு : லோகேஷ் இளங்கோவன், இசை : ஜோன்ஸ் ரூபெர்ட், எடிட்டிங் : பி.பிரேம், ஆர்ட் டைரக்டர் : ஜாய் திலீப், காஸ்ட்யூம் டிசைனர் : சிந்து, தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் : உத்ரா புரொடக்சன்ஸ், பி.ஆர்.ஓ. : சக்தி சரவணன்.
ஹீரோ சரவண விக்ரமிற்கு பெண்களிடம் பழகுவதென்றாலே கூச்சம், பயம். இதனாலேயே ஒரு லவ் பிரேக்கப் ஆகிறது. இந்த கூச்ச சுபாவத்தை போக்க ஒரு லாட்ஜுக்கு கூட்டிப் போய் பிராஸ்டிடியூட் ரதியிடம்[ ஹீரோயின் ஹஸ்லி அமான்] பழக வைக்கிறார் அவரின் ஃபிரெண்ட் தமிழ்ச்செல்வன். படுக்கையில் பழகி முடித்ததும் கேஷுவலாகும் சரவண விக்ரம் தனது வீக் பாயிண்டையும் லவ் பிரேக்கப்பையும் சொல்லி, ஒரு நாள் முழுக்க தன்னுடன் இருந்தால் எல்லாம் நார்மலாகிரும் என ரதியிடம் அப்ளிகேஷன் போடுகிறார். ரேட் ஃபிக்ஸானதும் ஓகே சொல்கிறார் ரதி. அக்ரிமெண்ட்படி இருவரும் லாட்ஜைவிட்டு வெளியே கிளம்புகிறார்கள்.
மனைவி இல்லாத நேரம் பார்த்து ரதியை வீட்டுக்கு அழைத்து வந்து ராத்திரியில் ஜாலியாக இருக்கிறார் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் பழனிச்சாமி. பொழுது விடிந்து டூட்டிக்கு கிளம்பும் போது தான் தெரிகிறது ரிவால்வரை ரதி ஆட்டையப் போட்டது. இதனால் டென்ஷனாகி ரதியைத் தேடி லாட்ஜுக்குப் போகிறார். இவருக்கு முன்பாகவே தனது மனைவி ரதியைத் தேடி லாட்ஜுக்குப் போய் ரணகளம் பண்ணிக் கொண்டிருக்கிறார் ராஜேஷ் பாலசந்திரன். இந்த இருவரும் சேர்ந்து கொலை வெறியுடன் ரதியைத் தேடிக் கிளம்புகிறார்கள். இவர்களிடம் ரதி சிக்கினாரா? ரதியுடன் போன சரவண விக்ரமின் கதி என்ன? இதான் இந்த ‘டியர் ரதி’.
எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான கதை தான். ஸ்கிரிப்டும் சீன் சீக்வென்ஸும் நல்ல குவாலிட்டியாத் தான் இருந்துச்சு. மலையாளத்தில் இது போன்ற கதைகளில் அங்குள்ள முன்னணி நடிகர்களே தயங்காமல் நடிப்பார்கள். படமும் ஹிட்டடிக்கும். அங்கே ஹிட்டடிச்சா நம்ம ஆளுங்க தமிழ் ரைட்ஸ் வாங்கிவிட்டு வந்து கல்லா கட்ட ட்ரை பண்ணுவார்கள். ஆனால் இந்த ‘டியர் ரதி’யில் எல்லாருமே புதுமுகங்களாக வாய்த்துவிட்டது தான் பலவீனம்.
ஆனால் அனைவருமே தங்களது நடிப்பால் பலமாக்கியுள்ளார்கள். ஹஸ்லியுடன் இருக்கும் போது தனது மாஜி லவ்வரை இன்னொருவனுடன் பார்த்ததும் சரவண விக்ரம் சங்கடப்படும் சீன், அப்போது ஹஸ்லி போடும் பிளானால் நியூ லவ்வர் டென்ஷனாவது, லைப்ரரியில் துப்பாக்கியைத் தூக்குவது, க்ளைமாக்ஸில் சரவண விக்ரமை போகச் சொல்லிவிட்டுத் தவிப்பது என ஹஸ்லி எக்ஸ்பிரீயன்ஸ் ஆர்ட்டிஸ்ட் போல பெர்ஃபாமென்ஸில் ஜெயித்துவிட்டார். முக லட்சணமும் அம்சமாக இருக்கு.
அறிமுக ஹீரோ சரவண விக்ரமும் ஓகே தான். ரதியின் கணவன் ராஜேஷ் பாலசந்திரன் கோஷ்டியும் லாட்ஜ் மேனேஜராக வரும் நடிகரும் அவ்வப்போது காமெடியில் கலக்கியிருக்கிறார்கள்.
ஜோன்ஸ் ரூபெர்ட்டின் பேக்ரவுண்ட் ஸ்கோர் ‘டியர் ரதி’யின் சீன்களை ரசிக்க வைக்கிறது. லோகேஷ் இளங்கோவனின் கேமரா ஆங்கிளில் நல்ல மெச்சூரிட்டி.
“இங்கே பண்பாடு, கலாச்சாரமெல்லாம் ஏழைப் பெண்களுக்கு மட்டும் தான். பஃப்புலயும் ஸ்டார் ஓட்டல்லயும் ஆட்டம் போடும் பணக்காரப் பெண்களுக்கு இல்லை. இதத்தான நீங்க கூப்பாடு போடுறீங்க” இந்த டயலாக்கை செக்ஸ் ஒர்க்கரைப் பேச வைத்து கலாச்சாரக் காவலர்கள், பண்பாட்டு பண்ணாடைகளுக்கு செப்பல் ஷாட் கொடுத்திருக்கார் டைரக்டர் பிரவீன் கே. மணி.
‘டியர் ரதி’—ரசனைக்குரியவள்.
— ஜெடிஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.