மதுரை – சாதி சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் !
பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என மதுரையில் பழங்குடியின சாதி சான்றிதழ் கேட்டும் போராடும் போராட்ட குழுவினர் திட்டவட்டமாக அறிவிப்பு !
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காட்டு நாயக்கன் சமூகத்தை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட மக்கள் 2 ஆம் கட்ட காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மதுரை பரவை சத்திய மூர்த்தி நகரில் 2,000 க்கும் மேற்பட்ட இந்து காட்டு நாயக்கன் சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
தங்களின் குழந்தைகளுக்கு இந்து காட்டு நாயக்கன் எனும் பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பள்ளி கல்லூரியை புறக்கணித்து கடந்த நவம்பர் மாதத்தில் 13 நாட்களாக முதல் கட்ட காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டக்குழுவிடம் அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்து காட்டுநாயக்கன் பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்குவதற்க்காக விசாரணை குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் மூலம் நேரடியாக விசாரணை நடத்தி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு எடுக்கப்பட்டதால் அப்போது போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது, ஆனால் மாவட்ட ஆட்சியர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 700 க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் இன மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இதனையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லிபாபு, சிபிஎம் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பரவை காட்டு நாயக்கன் இன கிராமத் தலைவர் வீராங்கன் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதாவிடம் 2 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் தமிழ்நாடு மலைவாழ் சங்க மாநிலத் தலைவர் டில்லிபாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “சாதி சான்றிதழ் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழு விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார், விண்ணப்பித்த 32 விண்ணப்பங்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அரசானை எண் 104 இன் படி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம், ஆய்வு கமிட்டி 15 நாட்களில் விசாரணை நடத்த உள்ளதாக ஆட்சியர் கூறியுள்ளார், காத்திருப்பு போராட்டம் தொடரும், சாதி சான்றிதழ் கிடைக்கும் வரை போராட்டம் நடைபெறும், சாதி சான்றிதழ் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் மற்றும் மத்திய அரசிடம் புகார் தெரிவிக்க முடிவு செய்துள்ளோம் என்றும் இது தொடர்பாக நீதிமன்றத்தையும் நாட உள்ளோம்” என கூறினார்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காட்டு நாயக்கர் இன மக்கள் பாரம்பரிய பாடல்களுக்கு ஏற்றவாறு நடனம் ஆடி வருகிறார்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மத்தியில் நடனமாடி வருகிறார்கள். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.