திருச்சி மாநகராட்சி துணை மேயர் யார் ; மல்லுகட்டும் கவுன்சிலர் வேட்பாளர்கள் !
திருச்சி மாநகராட்சி துணை மேயர் யார் ;
மல்லுகட்டும் கவுன்சிலர் வேட்பாளர்கள் !
நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி பொருத்தவரை அதிக இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றும் என்று அங்குசம் செய்தி இதழ் கருத்துக் கணிப்பில் தெரிய வருகிறது.
இதன் அடிப்படையில் திருச்சி மாநகராட்சியை திமுக கைப்பற்றுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு இருந்தே மேயர் பதவியை கைப்பற்ற திமுகவின் நகரச் செயலாளர் அன்பழகன் தீவிர முயற்சி எடுத்து வந்தார். மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட அமைச்சர் கே என் நேரு பல்வேறு இடங்களில் பேசுகையில் அன்பழகனை மேயராக்க வேண்டுமென்று முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம், முதல்வர் எங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுவார். மேலும் முதல்வர் தான் மேயர் மற்றும் துணை மேயரை தேர்வு செய்வார் என்று பேசியிருந்தார். இதனடிப்படையில் திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் பொறுப்பேற்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அடுத்த நகர்வாக துணை மேயர் பதவி யாருக்கு என்ற பேச்சு தற்போது சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. திருச்சி மத்திய மாவட்ட திமுக தலைமையின் கீழ் மாநகராட்சியின் 27 வார்டுகள் வருகின்றன, தெற்கு மாவட்ட திமுகவின் தலைமையின் கீழ் 38 வார்டுகள் வருகின்றன. இந்த நிலையில் தெற்கு மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே கே.என்.சேகரனுக்கு மேயர் பதவி கேட்டு கடைசி நேரத்தில் விடுக்கொடுத்தால், துணை மேயர் பதவிக்கு ஆதரவாளர் மதிவாணன் வரவேண்டுமென்று ஒருபுறம் வேலை நடந்து வருகிறது.
மறுபுறம் திமுகவின் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர் கவுன்சிலர்களான விஜயலெட்சுமி கண்ணன், கிராப்பட்டி கவிதா செல்வம், விஜயா ஜெயராஜ், முத்து செல்வம், என துணை மேயர் பதவிக்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முத்து செல்வம் தனக்கு 14-வார்டு கவுன்சிலர்களின் ஆதரவு இருப்பதாகவும், கட்சியினர் இடையே பேச்சு எழுந்துள்ளது.
அதேநேரம் கூட்டணி கட்சிகளுக்கு ஏதேனும் ஒரு பதவி வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் காங்கிரசுக்கு துணை மேயர் பதவி ஒதுக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. ஆனாலும் காங்கிரஸ் மேயர் பதவியை கைப்பற்றுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறதாம். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், 22வது வார்டு வேட்பாளர் சோபியா பேட்ரிக் ராஜ்குமார், முன்னாள் மேயர் சுஜாதா உள்ளிட்டோர் இடையே துணை மேயர் அதற்கான போட்டி நடந்து வருகிறது.
அதேநேரம் முன்னாள் மேயர் சுஜாதா தேர்தல் பிரச்சாரத்தின்போதே தான் மேயர் வேட்பாளர் என்று கூறி பிரச்சாரம் செய்ததாக சொல்லப்படுகிறது, இதனால் கடைசி நேரத்தில் திமுகவினர் இடையே அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறதாம். ஒரு வேளை அவர் வெற்றி பெற்றால் முழுகாரணம் திமுகவினர் தான்…
அதே நேரம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை திருச்சிக்கு வரவழைத்து தனது வார்டிற்கு மட்டும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியிருப்பது காங்கிரஸார்களிடமுமே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த முறை மேயராக ஆனாது போலவே சுஜாதா தனக்கு உள்ள மேலிட செல்வாக்கின் மூலம், மேயர் அல்லது துணைமேயர் பதவியை வாங்கி விடலாம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்.
மேலும் திருச்சி மாநகராட்சியின் 4 கோட்டங்கள் 5 மண்டலங்களாக மாறி உள்ள நிலையில் ஐந்து மண்டலத் தலைவர் பதவியைக் கைப்பற்றவும் தீவிர போட்டி நடைபெற தொடங்கிவிட்டது.