துணை மேயர்செலக்ஷன் அதிருப்தியும் சலசலப்பும்
சென்னை மேயர் பதவி பெண்களுக்கு, அதுவும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு என முடிவான பிறகு, துணை மேயர் பதவியாவது கிடைக்கும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்தார் உதயநிதி ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவரும் சென்னை மேற்கு மா.செ.வுமான சிற்றரசு. இதே போல் 2016 சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் 1,800 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றவரும், 2021 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காமல், அண்ணா அறிவாலயம் முன்பாகவே ஆர்ப்பாட்டம் செய்தவருமான திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரான கே.கே.நகர் தனசேகரனும் துணை மேயர் பதவி கிடைக்கும் என பெரிதும் நம்பியிருந்தார்.
ஆனால் ஸ்டாலினோ, இவர்கள் இருவருக்கும் கொடுக்காமல் சைதை மு.மகேஷ் குமாரை துணை மேயராக்கியுள்ளார். ஐந்து வருடம் எம்.எல்.ஏவாக இருந்த மகேஷ்குமாரை துணை மேயராக்கியது உ.பி.க்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் துணை மேயராக எம்.பி.யும், கல்விக்கூடங்களின் அதிபரும் மிகப்பெரிய கோடீஸ்வரருமான ஜெகத்ரட்சகனின் மைத்துனர் காமராஜ் செலக்ட்டாகியுள்ளார். “மேயர் வசந்தகுமாரியை தனது பிடிக்குள் வைத்துக் கொண்டு காமராஜ் ஆட்டம் போடாமல் இருந்தால் கட்சிக்கும் நல்லது, ஆட்சிக்கும் நல்லது” என்கிறார்கள் தாம்பரம் மாநகர உ.பி.க்கள்.
நெல்லை துணை மேயரான கே.ஆர்.ராஜு, புளூமெட்டல் கம்பெனி, டிரான்ஸ்போர்ட், கல்குவாரி, கந்து வட்டி என பல தொழில்களில் வளம் கொழிக்கும் அதிரடி-தடாலடி பார்ட்டி. இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து, “மேயருக்கு துணை மேயர் சப்போர்ட்டாக இல்லாட்டியும் பரவாயில்ல. குடைசல் கொடுக்காம இருந்தாலே போதும்” என்கிறார்கள் மாநகர உ.பி.க்கள்.
மதுரையில் மு.க.அழகிரியின் சாம்ராஜ்யம் இருந்த போதே, ஸ்டாலினின் அதிதீவிர ஆதரவாளராக இருந்தவர் ஜெயராமன். எம்.எல்.ஏ.சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தார், கிடைக்கவில்லை. இப்போது துணை மேயர் பதவியும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் மிகவும் மனமுடைந்து போயுள்ளார் ஜெயராமன்.