உயிர் வளர்ப்போம்- (கதை வழி மருத்துவம்) மனித உடலில் சிறந்தது எது? -1

-ராச ஈசன்

0

உயிர் வளர்ப்போம்- (கதை வழி மருத்துவம்)

மனித உடலில் சிறந்தது எது? தொடர்- 1

 

இறையருள் துணையோடு உயிர் வளர்க்கும் உயர்கலையை உலகுக்கு உரைத்திடு கிறேன். இக்கலையை அளித்து அருளிய இறைவனுக்கு நன்றிகள் கோடி உரித்தாகுக. உயிரின் கதை வேறு… உயிரோட கதை வேறு.

நவீன யுகத்திலும் புரதான மன்னர் ஆட்சி நடைபெற்று வரும் அழகிய நாடு அழகாபுரி. அழகாபுரியின் அரசன் அருள்செல்வன். மக்கள் அனைவரும் ஆனந்தமாக வாழும் படி நல்லாட்சி புரிந்து வந்தான். அவனது ஆட்சியில் நாடு மிகுந்த சுபிட்சமாகவும், நவீனமயமாகவும் விளங்கியது.

அன்றைய தினம் அரசவைக்கு வந்த அரசனின் மனதில் ஒரு கேள்வி துளைத்துக் கொண்டு இருந்தது. இன்று அந்த கேள்விக்கு எப்படியும் விடை காண வேண்டும் என உறுதியுடன் அரியணையில் வந்து அமர்ந்தான். மன்னரின் முகத்தில் தெரிந்த சந்தேகத்தின் ரேகையை கண்ட அமைச்சர் அறிவுமதி அதன் காரணத்தை கூறுமாறு மன்னனிடம் வேண்டினார்.

மன்னன் அவையோர் முன் பேசலானான். மேன்மை பொருந்திய அவையோர்களே இன்று காலை என் மகள் சந்திரவதி என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள். “அப்பா நமது உடலில் அனைத்தையும் விட சிறந்தது எது?” என்பதே அக்கேள்வி. எவ்வளவோ கலைகளில் தேர்ச்சி பெற்ற நானே பதில் கூற இயலாமல் வாயடைத்துப் போனேன்.

கள்ளம் கபடமற்ற ஒரு பிஞ்சு உள்ளத்தின் ஞானம் நிறைந்த கேள்விக்கு முன் என் கல்வியறிவு மௌனம் சாதித்தது. மாலை கூறுகிறேன் என பதிலுரைத்து வந்துள்ளேன். பேரறிவு கொண்ட அவையோர்கள் நிறைந்த இச்சபை இக்கேள்விக்கான விடை பகர வேண்டுகிறேன். என் ஐயம் நீக்குவோருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கப்படும். இதைக்கேட்ட அவையோர்கள் மத்தியில் சலசலப்பு. ஒருசிலர் தலையே சிறந்தது என்றனர். வேறுசிலர் கண்கள் தான் என்றனர். இன்னும் சிலரோ இருதயம் தான் என்றனர். மூளை, கைகள், கால்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போனது. ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை வலுப்படுத்த தம் வாதங்களை அடுக்கினார்கள்.
மூளைதான் யாவற்றையும் இயக்குகின்றது என்பது நவீன மருத்துவம் கண்டறிந்த உண்மை என்றார் ஆய்வாளர் ஆனந்தன். இருதயம் தான் உடலுக்காக ஓயாமல் துடித்து இரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்கிறது என்றார் மருத்துவர் மார்க்கண்டேயன்.

நுரையீரல்தான் சுவாசத்தின் வாயிலாக உடலில் பிராணவாயுவை சேர்த்து நம்மை வாழவைக்கிறது என்றார் யோகி மயூரன். சிறுநீரகம் தான் உடலில் உள்ள கழிவுகள் யாவையும் சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது என்றார் ஆசிரியர் ஆதிமூலம்.

இவ்வாறாக பலரும் தம் கருத்தை முன்வைக்க, இவை எதிலும் திருப்தி கொள்ளாமல் கவலை யுற்றான் மன்னன். இவ்வளவு சான்றோர்கள் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மாமேதைகள் நிறைந்த இந்த அவையில் ஒரு சிறுமியின் கேள்விக்கு பதில் கூற முடியவில்லையே என்று வருந்தினான். மன்னரின் கவலை தோய்ந்த முகத்தை கண்ட அமைச்சர் அறிவுமதி, மன்னரிடம் மன்னா நமது நாட்டின் மந்திர மலை அடிவாரத்தில் ஒரு குகை உள்ளது அங்கே மௌனயோகி ஒருவர் வாழ்ந்து வருகிறார். அவர் உடலில் தோன்றும் எல்லா பிணிகளையும் உடனே நீக்கும் வல்லமை உடையவர். அவர் தொட்டால் போதும் நோய்வாய்ப்பட்டவர்கள் உடனே குணமடைகிறார்கள் என கேள்வியுற்றேன்.

உடலை பற்றிய நல்லறிவும் உயர்ந்த ஞானமும் கொண்ட அந்த யோகியை நாம் சந்தித்தால் தம் ஐயத்திற்கு தக்க பதில் கிட்டும் என ஆலோசனை கூறினார். இதைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் தன் பரிவாரங்களுடன் மௌன யோகியை காண விரைந்தான். அந்த மலையடிவார குகை அமைதியுடன் அழகான இயற்கை காட்சிகளுடன் அடர்ந்த குளிர்ச்சியான மலையடிவாரத்தில் ரம்மியமாய் விளங்கியது.

குகைக்குள் யோகி தவத்தில் ஆழ்ந்திருந்தார். பார்க்க ஒரு 25 வயது மதிக்கத்தக்க தோற்றத்துடன் நல்ல உடன்கட்டுடன் ஒளி பொருந்திய முகத்தோடு திகழ்ந்தார் அந்த யோகி. மன்னர் பணிவுடன் அவர் முன்னிலையில் சென்று அமர்ந்து கொண்டார். சிறிது நேரம் கழித்து மெல்ல கண்திறந்தார் யோகி. மன்னன் அவரை பார்த்து வணங்கினான். சிரஞ்சீவியாய் வாழ்க. என வாழ்த்திய யோகி மன்னரிடம் தன்னை காண வந்த நோக்கத்தை அமைதியான குரலில் கேட்டார். யோகியின் குரல் தெய்வீகமாக விளங்கியது.

மன்னன் தான் வந்த காரணத்தையும், தன் மகளுடைய கேள்வியையும் யோகியிடம் விளக்கினான். “நம் உடலில் சிறந்தது எது? மூளையா? இருதயமா? நுரையீரலா? கல்லீரலா? கைகளா? கண்களா எது மிக சிறந்தது என கேட்டு முடித்தான்.

இதைக்கேட்டு புன்முறுவல் பூத்த யோகி, மன்னா தாங்கள் கூறிய அனைத்தும் உருவமுள்ள உறுப்புகள். இவை அனைத்தையும் இயக்கும் அச்சாணியாக ஒரு பொருள் நம்மிடம் உள்ளது அது இருக்கும் வரைதான் நமக்கு பெயர் விளங்கும். அது விலகினால் இவ்வுடல் சடமாய் மண்ணில் சாயும். அது என்னவென்று அறிவீரா? என்றார். அறியேன் அய்யனே அப்பொருளை விளக்கி, உணர்த்துமாறு பணிவுடன் வேண்டுகிறேன். மன்னர் உடலுடன் அருவமாய் விளங்கும் உயிர்தான் உடலில் உள்ள அனைத்திலும் மிகச் சிறந்தது என விளக்கினார்.

இவ்விளக்கத்தை கேட்ட மன்னனின் அறிவுக்கண்கள் திறந்து கொண்டன. உயிருக்கு உன்னதத்தை உணரத் தொடங்கிய மன்னனின் மனதில் அடுத்த ஐயம் உருவானது. உயிரினை அச்சாணியாய் கொண்டு வாழும் மனிதன் தன் வாழ்நாளில் உயிரினை உணராமலேயே மாண்டு போகிறான். நான் உட்பட. அனைத்து மனிதர்களும் உயிரை உணரும் உயர்யத்தை கூறுங்கள் பெருமானே என பணிவுடன் வேண்டினான்.

மௌன யோகி, விளக்கத்தை எதிர்நோக்கி நின்ற மன்னரின் விழிகளை நேரே பார்த்தபடி பேசத் தொடங்கினார். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் உயிரை உணர்ந்து கொள்ள வழி அவனுக்குள்ளேயே உள்ளது. மனிதனுடைய மனதின் உணர்வே உயிரை உணரும் உன்னத வழி ஆகும். ஒவ்வொரு நாளும் மனிதனுக்கு இரண்டு வாய்ப்புகள் இயல்பாகவே உள்ளன. அன்றாடம் உறங்கச் செல்லும் பொழுது விழிப்பு நிலையில் இருந்து உறக்கநிலைக்கு செல்லும்பொழுது மனதின் உணர்வை உறக்க நிலையை நோக்கி செலுத்தும் பொழுது எந்த நிலையில் விழிப்புணர்வு மறைந்து மனம் ஒடுங்கி உறக்கம் ஏற்படுகிறதோ அதுவே உயிர் நிலை.

அவ்வாறே காலை விழித்து எழும் பொழுது உறக்க நிலையில் இருந்து விழிப்புணர்வுக்கு மாறும் மார்க்கத்தில் மனதின் உணர்வை செலுத்த எந்த இடத்தில் உறக்கம் நீங்கி மனம் இயக்கத்தை தொடங்குகின்றதோ அதுவே உயிர் நிலை. இதுதான் சாமானிய மனிதர்கள் தன் உயிரினை உணர்ந்து கொள்ளும் எளிய வழிமுறை என கூறி முடித்தார் யோகி.

இந்தமுறை அமைச்சர் அறிவுமதியின் மனதில் உயிரை பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் உண்டானது. அவர் யோகியிடம், அய்யா எங்கள் அனைவருக்கும் உயிரின் தன்மைகளை விளக்கி உயிரின் தத்துவத்தை தெளிவுபடுத்திட வேண்டுகிறேன் என கை கூப்பினார்.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.