துறையூர் பஸ் நிலையம் ‘அவதி’யில் பயணிகள் ‘அலட்சிய’ நகராட்சி!
திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள பஸ் நிலையமானது தற்போது எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி , நெருக்கடியான இடமாகவும், பஸ் நிலையத்தை சுற்றிலும் உள்ள தார்ச்சாலைகள் மரணச் சாலைகளாகவும், இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடமாகவும் மாறி வருவதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
துறையூர் பஸ் நிலையத்திற்குள் அரசு பஸ் , மினி பஸ்கள் உள்ளிட்ட தனியார் பஸ்கள் சுமார் 260 பஸ்கள் தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்று வரும் நிலையில், பஸ் நிலையத்தில் உள்ள தார்ச்சாலையில் அரளைக் கற்கள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டு , பஸ்கள் உள் நுழையும் இடத்தில் மிகவும் அபாயகரமாக விபத்து ஏற்படும் வகையில் காட்சியளிக்கிறது.
சுகாதார சீர்கேடு
மேலும் தனியார் திருமண மண்டபம் , உணவகங்கள் , பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் , உணவுக் கழிவுகள் உள்ளிட்டவை கழிவுநீர்க் கால்வாய் வழியாக முறையாக வெளியேற வழியில்லாத சூழலால் துர்நாற்றம் வீசுகிறது. பகல் நேரங்களிலேயே கொசுத்தொல்லை காரணமாக பயணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தொற்றுநோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. பஸ் நிலையத்திற்குள் உள்ள மேற்கூரையும் பல வருடங்களுக்கு முன்னாள் போடப்பட்டவை என்பதால் அடிக்கடி மழை, காற்று நேரங்களில் பெயர்ந்து விழும் நிகழ்வுகளும் நடந்துள்ளது.
எரியாத டியூப் லைட்கள்
மேற்கூரையில் போடப்பட்டுள்ள 16 டியூப் லைட்டுகளில் இரண்டு அல்லது மூன்று லைட்டுகள் மட்டுமே எரியும், இரவு நேரங்களில் கடைகள் மூடப்பட்டவுடன் குறைவான வெளிச்சத்தைப் பயன்படுத்தி வெளியூர் பயணிகளிடம் பணம், நகை பறிப்பு சம்பவங்களும், பாலியல் குற்றங்களும் நடக்கின்றன.
மூடியே கிடக்கும் காவல் நிலையம்
இங்குள்ள புறக்காவல் நிலையம் பல மாதங்களாகவே மூடி யே கிடக்கிறது. காவல் துறை கட்டுப்பாட்டில் பேருந்து நிலையத்தைச் சுற்றி வைக்கப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமரா அனைத்துமே பழுதானதாலும், புறக்காவல் நிலையம் மூடியே உள்ளதாலும், குற்றச் சம்பவங்கள் துணிந்து நடக்கின்றன.
கண்துடைப்பு ஆக்கிரமிப்பு
ஆக்ரமிப்புகள் அகற்றம் என ஒரு நாள் அறிவித்து, அன்று கண் துடைப்பிற்காக பார்வையிட்டு ஆக்ரமிப்புகளை அகற்றுவது, அதிகாரிகள் அலுவலகம் செல்வதற்குள் மீண்டும் அதே இடத்தில் ஆக்ரமிப்பை தொடருதல், இதுதான் வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக பஸ் நிலையத்தின் முன்புறம் இரண்டு பகுதிகளிலும் கடைகள் மற்றும் ஆட்டோவை நிறுத்தி வைத்து ஆக்ரமித்து , பஸ்கள் திரும்ப முடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்.
குடிநீர் வசதியில்லை
பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் வசதி கூட செய்யப்படவில்லை. தற்போது கோடை காலம் என்பதால் வயதானவர்கள் முதல் குழந்தைகளின் குடிநீர் தேவைக்கு பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடை மற்றும் சிறு உணவகங்களில் சென்று பயணிகள் குடிநீர் கேட்கக் கூடிய பரிதாப நிலை உள்ளது.
இந்நிலையில் சமூக ஆர்வலர் பாண்டியன் என்பவர் , நகராட்சி நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் , பஸ் நிலையத்தில் வந்து செல்லும் பஸ்களில் தனியார் பஸ்சிற்கு மட்டும் நுழைவுக்கட்டணம் வசூல் செய்கிறீர்கள் ? அரசுப் பஸ்சிற்கு ஏன் வசூலிப்பதில்லை எனக் கேட்டதற்கு, பதிலளித்துள்ள நகராட்சி நிர்வாகம் , துறையூர் நகராட்சி பஸ் நிலையம் புதுப்பித்தல் பணி முடிவுறாததால் தனியார் பஸ்களுக்கு மட்டும் வசூல் செய்யப்படுகிறது . அரசு பஸ்களுக்கு மேற்படி பணி முடிந்தவுடன் தொடர்ந்து வசூல் செய்யப்படும் என பதில் அளித்துள்ளது. மேலும் அரசுப் பஸ்கள் வசூல் இல்லாததால் நகராட்சிக்கு எவ்வளவு பணம் நஷ்டம் என கேட்ட அடுத்த கேள்விக்கு பதில் தந்துள்ள நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார், இதனை வருமான இழப்பாக கருத இயலாது. புதுப்பித்தல் பணி முடிந்தவுடன் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்துள்ளார்.
முதல்வரின் புதிய பஸ் நிலையம் அறிவிப்பு
துறையூர் நகருக்கு புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து அதற்கான இடம் தேர்வு செய்வதற்கு துறையூரில் பல்வேறு இடங்களை நகர்ப்புற வளர்ச்சி துறைஅமைச்சர் கே.என். நேரு மற்றும் நகராட்சி நிர்வாக உயர் அதிகாரிகள் பார்வையிட்டும் இதுவரையில் அதற்கான இடம் தேர்வு செய்யப்படவே இல்லை. நகர முன் பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான 12 ஏக்கருக்கும் மேல் உள்ள இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைத்தால் அனைவருக்கும் மிக பாதுகாப்பானதாக இருக்கும்.
அறநிலையத் துறை அமைச்சரான சேகர்பாபு மனது வைத்தால் துறையூர் நகருக்கு புதிய பஸ் நிலையம் மிகவும் சிறப்பானதாக அமையும். தற்போதைய தகவலாக புதிய பஸ் நிலைய பட்டியலில் இருந்து துறையூர் நீக்கப்பட்டு , மேம்படுத்தப்பட்ட பஸ் நிலையப் பட்டியலுக்கு சென்று விட்டதாக தகவல்கள் கசிகின்றன. எது எப்படியோ.. புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் வரை தற்போதைய பஸ் நிலையத்தை துறையூர் நகராட்சி நிர்வாகம் பயணிகளின் நலன் கருதி, மின் விளக்கு, ஆக்கிரமிப்புகள் அகற்றம், குடிநீர், கழிவு நீர்க் கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஜோஸ்