பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர் ! சிறார்கள் உள்ளிட்ட ஐவர் கைது !
திருச்சி திருவானைக்காவலில் மாற்றுத்திறனாளி ஒருவரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்பவம் நிலைகுலைய செய்திருக்கிறது. கொலையில் தொடர்புடைய ஒருவர் தலைமறைவான நிலையில், ஐந்து பேரை கைது செய்திருக்கிறார்கள் போலீசார்.
திருவானைக்காவல் தாகூர் தெருவில் வசிப்பவர் வேம்படியான் மகன் வினோத்குமார். 35 வயதான இவர் மாற்றுத்திறனாளி. திருவானைக்காவல் கோயிலில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவாராம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாகூர் தெருவில் உள்ள செங்கல் சூலையின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் 3 இளம் சிறார்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் பைவ் (21), ராகுல் (23), ஸ்ரீதர் வயது( 20) ஆகியோர் காவிரியில் குளித்துவிட்டு அந்தப் பகுதியை கடந்த போது முனகல் சத்தம் கேட்டுள்ளது. அங்கே மூவரும் சென்று பார்த்த போது, வினோத்குமார் இளம் சிறாருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதை பார்த்து அவர்கள் மூவரும் வினோத்குமாரை தாக்கி திட்டி உள்ளனர்.
மேலும், அவரிடம் இருந்த ரூபாய் 50 ஆயிரத்தை பிடுங்கி உள்ளனர். இதில் கோபமடைந்த வினோத்குமார் மூவரையும் தகாத வார்த்தைகளில் திட்டி உள்ளார். இதனால் கோபமடைந்த அந்த மூவரும் கையில் இருந்த அரிவாளால் வினோத்குமாரை சராமரியாக வெட்டி உள்ளனர். மேலும், அவரது தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளனர். இந்தக் கொலையை மறைப்பதற்காக, அந்த மூன்று சிறார்களிடம் பெட்ரோலை வாங்கி வருமாறு கூறி அதை வினோத் குமாரின் உடலில் மீது ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் அருகில் பள்ளம் தோண்டி வினோத்குமாரை புதைத்துள்ளனர்.
மேலாக புதைத்து சென்றதால், வினோத்குமார் உடல் மேலே தெரிந்தது. இதை அங்கே சுற்றித்திரிந்து வந்த நாய்கள் இவரது உடலை இழுத்து மேலே போட்டு உள்ளது. அருகிலுள்ள செங்கல் சூளையின் அதிபர் கருணாநிதி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு கடந்த 24 ஆம் தேதி புகார் செய்தார். அங்கே விரைந்து வந்த போலீசார் எலும்புக் கூடாக இருந்த உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் இறந்து போனவரின் தலை உடைந்து இருப்பதாக தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் இறந்து போனவர் அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத்குமார் என்று தெரியவந்தது.
இதனையடுத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில், ஸ்ரீராம், ராகுல், ஸ்ரீதர், ஆகிய மூன்று பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இரண்டு சிறார்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 17 வயது உள்ள ஒரு சிறார் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
– அங்குசம் செய்திப்பிரிவு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.