கிலோ கணக்கில் கொள்ளை போகும் தங்கம் : பின்னணியில் மாஃபியா கும்பல்!
பல கோடி ரூபாய் நகை கொள்ளை 😱 திருசியில் பயங்கரம் 🤯கோல்ட் மாபியா கேங்
தமிழகம் உள்ளிட்டு நாடெங்கிலும் தங்க நகை தொடர்பான பிசினஸில் ஈடுபட்டு வரும் நபர்களை குறிவைத்து கிலோ கணக்கில் நகைகள் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மிக சமீபத்தில், மக்கள் நெருக்கடி மிகுந்த வணிக வீதியும் குடியிருப்பு பகுதியுமான திருச்சியின் பெரியகடைவீதியில் நகை வியாபாரியை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு 1.49 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டியுடன் தப்பியோடிய வடமாநில கும்பலின் பின்னணி பகீர் கிளப்பியிருக்கிறது.
திருச்சி பெரியகடைவீதி, பெரிய செட்டித் தெருவில் வசித்து வரும் 36 வயதான உதய், தங்க நகை மதிப்பீட்டாளராகவும் நகைகளை உருக்கி விற்கும் தொழிலையும் செய்து வருபவர். பூர்வீகம் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். அதே மாநிலத்தை சேர்ந்த 19 வயதான நித்தின் என்பவரை தனது உதவியாளராக வைத்திருந்தார். இரண்டாம் தளத்தில் உதய் குடும்பத்துடன் வசிக்க, முதல் தளத்தில் உதவியாளர் நித்தின் தங்கியிருக்கிறார். தரைதளத்தில் கடைகளை வாடகைக்கு விட்டிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த ஏப்-24 அன்று, நான்கு பேர் வீட்டின் கதவை தட்டுகிறார்கள். நித்தின் விசாரிக்கிறார். உதயுடன் பிசினஸ் டீல் பேச வந்திருப்பதாக சொல்கிறார்கள். உதயுடன் பேசிவிட்டு, மேலே அழைத்து செல்கிறார். அங்கு சென்றதும், உதய் மற்றும் நித்தினை தாக்கிவிட்டு தங்கக்கட்டிகளை அள்ளிச்செல்கிறது அந்த கும்பல்.

பட்டப்பகலில், ஜன நடமாட்டம் மிகுந்த தெருவில் இப்படி ஒரு சம்பவத்தை அரங்கேறிய நிலையில், கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கைப் பதிவு செய்து சிசிடிவி காமெராக்களை ஆய்வு செய்கிறார்கள். ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சீதாராமன் தலைமையில் தனிப்படைகளை அமைத்து துரித விசாரணைக்கு உத்தரவிடுகிறார், கமிஷனர் காமினி. தனிப்படை போலீசாரும் மகாராஷ்டிரா வரை பயணித்து, இரண்டு பேரை தட்டி தூக்கியிருக்கிறார்கள்.
மாஃபியா கிராமம்:
அவர்களிடமிருந்து விசாரித்ததில் தலைகிறுகிறுக்கும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம், புனே-அடுத்த சிதம்கூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள்தான் இந்த கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இவர்களின் இலக்கு, இதுபோன்ற நகை பிசினஸில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள். அதிலும், இந்த பிசினஸில் நெளிவு சுளிவு தெரிந்து சட்டத்தின் சந்து பொந்துகளை அறிந்து அதற்கேற்ற வியாபாரத்தில் இருப்பவர்கள்தான். ஹிந்தி, மராத்தி மற்றும் ஒரு பிராந்திய மொழி என குறைந்தபட்சம் மூன்று மொழிகள் பேசத்தெரிந்த ஒரு டீமை தயார் செய்து, அவர்களை, இவர்கள் இலக்கு வைக்கும் நபர்களிடம் வேலைக்கு சேர்த்துவிடுகிறார்கள். டிரைவராக இருக்கலாம், எடுபிடியாக இருக்கலாம், நம்பகமான உதவியாளராக இருக்கலாம். இவர்கள்தான் இந்த கும்பலுக்கான முக்கியமான சோர்ஸ்.
எத்தனை மணிக்கு எழுந்திரிப்பார் என்பது தொடங்கி எத்தனை மணிக்கு தூங்குவார் என்பது வரையில், நகைகள், பணத்தை எங்கே வைத்திருக்கிறார்? எத்தனை மணிக்கு கொள்ளையடிக்கலாம்? எந்த வழியாக வந்து எந்த வழியாக செல்வது? என்பது உள்ளிட்ட எல்லா தகவல்களும் அந்த கும்பலுக்கு சேர்கிறது. ஒரு நல்லநாள், நல்ல நேரம் பார்த்து அதற்கு முதல்நாள் சம்பந்தபட்ட இடத்திற்கு வந்து தங்குகிறார்கள். அடுத்தநாள் தங்களது திட்டத்தை முடித்துவிட்டு மும்பை திரும்புகிறார்கள். அங்கே தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக்கி சம்பந்தபட்டவர்களிடம் ஒப்படைத்துவிட்டு கிராமத்துக்குத் திரும்பிவிடுகிறார்கள். இதை ஒரு திருடுவதற்கான உத்தியாகவே கையாண்டிருக்கிறார்கள் என்ற தகவல் தற்போது அம்பலமாகியிருக்கிறது.

கடந்த 2022 இல் கள்ளக்குறிச்சியில் 1.5 கிலோ தங்கம் கொள்ளை போன சம்பவத்திலும் இதே புனேவை சேர்ந்த கும்பல்தான் கைவரிசையை காட்டியிருந்தது. கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர்-13 இல் சென்னையிலிருந்து திண்டுக்கல், மதுரை வரையில் நகைகளை சில்லறை விற்பணையாளர்களிடம் கொடுத்துவிட்டு ஊர் திரும்பிய போது திருச்சியில் காரை வழிமறித்து 10 தங்கத்தை தட்டித்தூக்கியதிலும் மகாராஷ்டிராவை சேர்ந்த கும்பலும் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தங்கத்தை உருக்குவதற்கு முன்பாகவே, நான்கு ஸ்டேட்களை கடந்து மொத்தக் கொள்ளைக் கும்பலையும் அப்போது தட்டித்தூக்கியிருந்தார் திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம். தற்போது, சிட்டி லிமிட்டில் சம்பவம் நிகழ்ந்திருப்பதால் கமிஷனர் காமினி தலைமையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.
இயல்பிலேயே மும்பை விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா விளங்கி வருகிறது. கூடவே, இரண்டாம் நெம்பர் பிசினஸின் மையமாகவும் மும்பை இன்றளவும் இருந்து வருகிறது. ஒரு பக்கம் அரபிக்கடல். மறு பக்கம் பெல்காம் – கர்நாடகா, கோவா. வடக்கே ரத்னகிரி மலை என ஒரு மாஃபியா கும்பலுக்கு தோதான மாநிலமாகவும் மகாராஷ்டிரா அமைந்தும் விட்டது.
அதையெல்லாம்விட, மகாராஷ்டிராவை மையப்படுத்தி தொழிற்துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் வருகை தாதாக்களின் ராஜ்ஜியத்தை அதிகரித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். குர்கான், நவி மும்பையின் தொழில் வளர்ச்சிக்கு இணையாக மாஃபியாக்களின் வளர்ச்சியும் எகிறிகிடக்கிறது. ஸ்கிராப் எடுப்பது, டிரான்ஸ்போர்ட், செக்யூரிட்டி, கேண்டீன் காண்ட்ராக்ட் எடுப்பது வரையில் தாதாக்களின் ஆதிக்கப்போட்டி நிலவும் ஒன்றாகவும் இருந்து வருகிறது.
இந்த பின்னணியில்தான், இரண்டாம் நெம்பர் பிசினஸில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்களிடம் பக்கா பிளானோடு கிலோ கணக்கில், கோடி கணக்கில் கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்களை அரங்கேற்றி வந்திருக்கிறார்கள். திருச்சி மாநகர போலீசாரின் வேட்டை இன்னும் முற்றுப்பெறாத நிலையில், இன்னும் பல அதிர்ச்சிகரமான மற்றும் சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லாத திகில் கதைகளை கொண்டிருக்கிறது, இந்த கொள்ளை கும்பலின் பின்னணி. விரைவில் திருச்சி மாநகர போலீசாரே விடை சொல்வார்கள் என்றே எதிர்பார்ப்போம்!
– அங்குசம் புலனாய்வுக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.