”சிந்து முதல் பொருநை வரை” – சிதைத்து திரிக்கப்படும் வரலாறு !
”சிந்து முதல் பொருநை வரை” – சிதைத்து திரிக்கப்படும் வரலாறு !
இந்தியாவின் பூர்வகுடிகளின் மெய்யான வரலாறு மறைக்கப்பட்டு, பன்முகத் தன்மையை சிதைத்து ஒற்றை பண்பாட்டை இந்திய பண்பாடாக நிறுவும் சூழ்ச்சிகளுக்கு மத்தியில், இந்தியாவின் உண்மையான வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக அதன் பன்முகத்தன்மையை பறைசாற்றும் விதமாக, “சிந்து முதல் பொருநை வரை” என்ற பொதுத்தலைப்பின் கீழ் தமிழகமெங்கும் தொடர் கருத்தரங்க நிகழ்வுகளை நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள், வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தினர்.
இந்நிகழ்வின் தொடக்கமாக, வருகிற ஜனவரி-4, வியாழக்கிழமையன்று ஒருநாள் நிகழ்வாக சென்னை மாநிலக்கல்லூரியில் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து, சென்னை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய நான்கு மண்டலங்களிலும் அடுத்தடுத்து கருத்தரங்குகள் நடைபெறும் என்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
இத்தொடர் நிகழ்வின் நோக்கம் குறித்து கல்வியாளரும் வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவருமான பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகையில், “உலகம் முழுக்க தொல்லியல் ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் மூலம் மனிதகுல வரலாறு அறிவியல் அணுகுமுறையில் எழுதப்படுகிறது. கடந்தகால நிகழ்வுகள்தான் எதிர்கால சவால்களை கணிக்க உதவும். வரலாறு இல்லாத இனம் அழியும்.

சமீப காலமாக இந்திய வரலாற்றுத் துறை மிகப் பெரும் சவாலை சந்தித்து வருகிறது. மக்களின் உணர்வுகளை தூண்டி, பல்வேறு குழப்பம் நிறைந்த ஆய்வுக் கட்டுரைகள் மூலம், உண்மையை மறைத்து பொய்யை வரலாறாக பதிய வைக்கும் முயற்சிகள் நடந்துவருகிறது.
இதன் விளைவாக இந்தியாவின் பூர்வகுடிகளின் மெய்யான வரலாறு மறைக்கப்பட்டு, பன்முகத் தன்மையை சிதைத்து ஒற்றை பண்பாட்டை இந்திய பண்பாடாக நிறுவும் சூழ்ச்சி அறிவியல் தொழில்நுட்பம் கொண்டே அரங்கேறி வருகிறது.
வரலாறு இத்தகைய சோதனைக்கு உள்ளாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
மக்களின் வாழ்வில் முறைக்கு வரலாறு உண்டு. இந்திய மக்களின் உண்மையான வரலாற்றை அடுத்தத் தலைமுறை வரலாற்று ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களுக்கு விளக்கி சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்து; தொல்லியல் அறிஞர்கள், வரலாற்று பேராசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பங்கேற்கும் தொடர் கருத்தரங்குகள் இந்திய முழுக்க நடக்க உள்ளது.” என்கிறார்.
தமிழகத்தில் முதல் நிகழ்வாக வருகிற ஜனவரி-4, அன்று சென்னையில், மாநிலக் கல்லூரி வரலாற்றுத் துறையுடன் இணைந்து வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த கருத்தரங்கில், மாநிலக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் க. துரைச்சாமி தலைமையில், மாநிலக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் இரா. இராமன் அவர்கள் தொடங்கி வைக்க, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் எஸ். எஸ். சுந்தரம் அவர்களின் வாழ்த்துரையுடன் பேராசிரியர் அ. கருணானந்தன், தொல்லியல் ஆய்வறிஞர் ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் பணி நிறைவு, இந்திய தொல்லியல் ஆய்வகம் (ASI) கீழடி தொல்லியல் ஆராய்ச்சியாளர் முனைவர் கி. அமர்நாத் இராமகிருஷ்ணா உள்ளிட்டவர்கள் தங்களின் ஆய்வுரைகளை வழங்க உள்ளனர்.
– அங்குசம் செய்திப்பிரிவு.