திமுக கூட்டணியில் தேமுதிக !
திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றது முதல், அக்கட்சிக்கான இடங்கள் வழங்குவது குறித்தும், அக்கட்சியின் அரசியல் உறுதிப்பாடு குறித்தும் விவாதங்கள் நடக்கிறது.
பத்திரிக்கையாளர் மணி போன்ற தென்னை மரத்துல ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்து என்ற அறிவு வீங்கிகளின் இடதுசாரிகள், விசிகவின் நிலையைப் பற்றிய பரிதாபப் புண்ணாக்குகள் போன்ற விவாதங்களையும் பார்க்க முடிந்தது இருக்கட்டும்.
2021-2024 ஆகிய தேர்தல்களில் பாஜக அல்லாத அணியில் தான் தேமுதிக போட்டியிட்டுள்ளது என்பதும், 2016 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளர் என முன்னிறுத்தி, இடதுசாரிகள் மற்றும் விசிக,மதிமுக போட்டியிட்டதும் வரலாறு.
சட்டமன்றத்தேர்தல் என்று வருகிற போது சிறுசிறு வாக்கு சதம் கூட முக்கியத்துவம் உடையதாக மாறிவிடுகிறது. கடந்த தேர்தலில் 47 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியும், தோல்வியும் 5000 வாக்குகளுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தால் அக்கூட்டணிக்கு இப்போதுள்ள பலவீனமான தோற்றம் சற்று மாறியிருக்கும். அதை திமுக சாதுர்யமாக தடுத்துள்ளது என்றும் பார்க்க வேண்டியுள்ளது.
மதச்சார்பற்ற கூட்டணியில் ஒரு கட்சியை இணைக்கும் பொழுது, அதன் வாக்கு சதவிகிதம் கூட்டலாக இல்லாமல், பெருக்கலாக மாறும் தன்மையுடனும், அதுவே மதச்சார்புள்ள அணிக்கு கூட்டலாக இல்லாமல், மைனசாக மாறும் தன்மையுமாகவே தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் வாக்குகள் பதிவாகும் தன்மையாக வெளிப்படுகிறது.
வட மாவட்டங்களில் வன்னியர் சமூக வாக்குகள் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்களின் வாக்குகள் எனப் பரவலான வாக்கு வங்கியை தேமுதிக கொண்டுள்ளதாகவே புள்ளிவிபரங்கள் கிடைக்கிறது.

எனவே தேமுதிகவுக்கு அதிக தொகுதிகளா என்ற கேள்விக்குப் பின்னால் திமுக கூட்டணி மேலும் வலுப்பெற்றுவிடக்கூடாது என்ற தன்மையிலேயே கருத்துகளைப் பார்க்க முடிகிறது.
எனது மதிப்பீட்டில் இன்றைய அரசியல் சூழலில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் வரை திமுக கூட்டணியில் கொடுத்தாலும், பிற தொகுதிகளில் சில முக்கியத்துவத்தை அது உருவாக்கும் காரணிகளில் ஒன்றாக நிச்சயம் அமையும்.
அதே நேரத்தில் கொள்கை உறுதிப்பாடுடன் கூடிய இடதுசாரிகள் மற்றும் விசிக கட்சிகளின் பலத்திற்கு ஏற்றவாறு தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு எவ்வித மாறுபாடும் இல்லை.
— சூர்யா சேவியர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.