தேமுதிக இதுவரைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாகவோ, அதிகாரப்பூர்வமாகவோ பேசவில்லை – பிரேமலதா விஜயகாந்த
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் அவர்களுக்கும், சமீபத்தில் மறைந்த கழகத்தினருக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலியோடு தொடங்கிய கூட்டம் கூட்டத்தில், தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்திற்கு வழங்குவது; தினந்தோறும் அன்னதானம் மற்றும் உதவிகள் செய்திட வள்ளல் விஜயகாந்த் நினைவு அன்னதான அறக்கட்டளை (VALLAL VIJAYAKANT MEMORIAL ANNATHANA TRUST) உருவாக்கியதற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்டு பத்து தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
”புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை அறிவித்த பாரத பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் இந்த கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. கேப்டனின் இறுதி ஊர்வலத்தில் வழிநெடுக்க மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்தி பிரியா விடை கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்றும் நெஞ்சம் மறவாத நன்றியை தேமுதிக தெரிவித்துக்கொள்கிறது.
ஜாதி, மத, பேதமின்றி எல்லா அரசியல் தலைவர்களோடு இணக்கமாக வாழ்ந்து மறைந்த கேப்டன் அவர்கள் மறைவிற்கு ஜாதி. மத. அரசியலுக்கு அப்பால் அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து தமிழகம் முழுவதும் அமைதிப் பேரணி மற்றும் புகழஞ்சலி செலுத்திய அனைவருக்கும் தேமுதிக நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
தேமுதிக தலைமைக் கழக வளாகத்தில் சந்தன பேழையில் உறங்கிடும் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் உறைவிடத்தை கேப்டன் கோவிலாக மாற்றி தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்குமாறு கழக பொதுச்செயலாளரிடம் இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.
பசியோடு வரும் அனைத்து மக்களுக்கும் உணவு படைத்து அவர்களின் பசியாற செய்து அந்த மகிழ்ச்சியில் வாழ்ந்து மறைந்த பத்மபூஷன் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்கள் சன்னதியில் தினந்தோறும் அன்னதானம் மற்றும் உதவிகள் செய்திட வள்ளல் விஜயகாந்த் நினைவு அன்னதான அறக்கட்டளை (VALLAL VIJAYAKANT MEMORIAL ANNATHANA TRUST) உருவாக்கிய கேப்டன் குடும்பத்தினருக்கு இந்த கூட்டம் நன்றி செலுத்துகிறது.
தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வருவதற்கு முன் கேப்டன் புகழை எடுத்துரைக்கும் வகையில் அனைத்து மாவட்டத்திலும் கிராம சபை கூட்டங்கள், தெரு முனை பிரச்சாரங்கள், சிறிய அளவிலான கூட்டங்கள் மூலம் கேப்டன் அவர்களின் புகழ் மக்களுக்கு சென்றடையும் வகையில் கூட்டங்கள் நடத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் தேமுதிகவின் நான்கு மண்டலங்களில் கேப்டன் அவர்களின் நினைவேந்தல் புகழஞ்சலியை மாபெரும் பொதுக்கூட்டமாக நடத்திட தேமுதிக இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.
தேமுதிக இதுவரைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாகவோ, அதிகாரப்பூர்வமாகவோ பேசவில்லை. ஊடகங்களில் வரும் செய்திகள் யூகமாகவே கருதப்படுகிறது. மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு கூட்டணி பேச குழு அமைத்திடவும், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை மரியாதைக்குரிய கழக பொதுச் செயலாளர் திருமதி அண்ணியார் அவர்களுக்கு வழங்கி இந்த கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.” என்பது உள்ளிட்டு 10 தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பதாக, தேமுதிகவின் தலைமைக் கழக செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.