எந்நேரமும் எதுவும் நடக்கலாம் – அமோனியா பீதியில் எண்ணூர் கிராம மக்கள் !

0
கோரமண்டல் உரத்தொழிற்சாலை
கோரமண்டல் உரத்தொழிற்சாலை

சென்னை கடற்கரையோர பகுதியான எண்ணூரில் இயங்கிவரும், கோரமண்டல் உரத்தொழிற்சாலையில், கடந்த டிச-26 அன்று அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதையடுத்து ஆலை தற்காலிகமாக மூடபட்டது. இப்போது என்றில்லை ஆலை தொடங்கிய நாள் முதலாகவே, ஆலையைச் சுற்றியுள்ள பொதுமக்கள் சுவாசப் பிரச்சனை, தோல் அரிப்பு, கண் எரிச்சல் உள்ளிட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும்; ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்றும் கடந்த 40- நாட்களுக்கும் மேலாக, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

இதற்கிடையில், பொதுமக்களின் பலத்த எதிர்ப்பையடுத்து அமோனியா வாயுக்கசிவு குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஆர்.கண்ணன், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த பி.எம்.பூர்ணிமா, ஐஐடி பேராசிரியர் சங்கர் நரசிம்மன், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன மூத்த விஞ்ஞானி எஸ்.வி.சீனிவாசன் உள்ளிட்டு ஏழு பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவை நியமித்திருந்தது, தமிழக அரசு.

கோரமண்டல் உரத்தொழிற்சாலை எதிரா மக்கள் போராட்டம்
கோரமண்டல் உரத்தொழிற்சாலை எதிரா மக்கள் போராட்டம்

- Advertisement -

கப்பல்களில் கொண்டு வரப்படும் ஆலைக்குத் தேவையான மூலப்பொருளான அமோனியா வாயுவை, கடலுக்கு அடியில் ஏற்கெனவே பதிக்கப்பட்டிருக்கும் குழாய் வழியாக, கடற்கரையில் அமைந்திருக்கும் கொரமண்டல் உரத்தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வந்திருக்கிறது.

சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் தாக்கத்தால் கடலுக்கு அடியில் பதித்த குழாய்களுக்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்த கிரானைட் கற் பாறைகள் விலகியதால் குழாயில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வுக்குழு கணித்திருக்கிறது. கடலுக்கு அடியில் அம்மோனியா கொண்டு செல்லும் குழாயிலிருந்துதான், அமோனியா வாயு கசிவு ஏற்பட்டிருப்பதையும் உறுதி செய்திருக்கிறது.

* சேதமடைந்த குழாய்களுக்கு மாற்றாக, தானியங்கி கட்டுப்பாடு மற்றும் விபத்து தடுப்பு சாதனங்களுடன் கூடிய புதிய குழாய்களை அமைக்க வேண்டும்;

* குழாய் பதிக்கப்பட்டிருக்கும் வழித்தடத்தில் பொதுமக்கள் அணுகாத வகையில் உரிய பாதுகாப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்;

* கப்பலிலிருந்து உரத்தொழிற்சாலைக்கு அம்மோனியா வாயுவை கொண்டு செல்வதற்கு முன்பாக, குழாயின் உறுதித்தன்மை முறையாக சோதித்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்;

* ஒருவேளை அசம்பாவிதம் ஏற்பட்டால், ஆலையைச் சுற்றியுள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை வழங்கும் வகையில் சென்சார் அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்;

* முக்கியமாக, அமோனியா வாயு காற்றில் நேரடியாக வெளியேற்றப்படுவதை தவிர்த்து, அதற்கு முன்பாகவே அவை எரிக்கப்பட்டுவிடுவதை உறுதி செய்ய வேண்டும்;

* அம்மோனியா வாயுக் கசிவின் வீரியத்தை குறைக்கும் வகையில் தானியங்கி நீர் தெளிப்பான்களை அமைக்க வேண்டும்;

* கசிவை கண்டவுடன் நிறுத்தும் வகையிலான தானியங்கி தடுப்பு முறைகளை நிறுவ வேண்டும் – என்பன உள்ளிட்டு 18 பரிந்துரைகளை முன் வைத்திருக்கிறது, அரசு அமைத்த ஆய்வுக்குழு.

4 bismi svs

ஆய்வுக்குழுவின் அறிக்கை வெளியான பின்னரும்கூட, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையில் உறுதியாக நிற்கின்றனர், அப்பகுதி மக்கள்.

கோரமண்டல் உரத்தொழிற்சாலை எதிரா மக்கள் போராட்டம்
கோரமண்டல் உரத்தொழிற்சாலை எதிரா மக்கள் போராட்டம்

போராட்டக்களத்தில் இருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த க.தமிழ்ச்செல்வனிடம் அங்குசம் சார்பில் பேசினோம். “இந்த ஆய்வுக்குழு அறிக்கையின் மூலமா, ஆலையை தொடங்கினதுல இருந்து இப்போ வரைக்கும் எந்த பாதுகாப்பு விதிகளையும் அந்த கம்பெனி கடைபிடிக்கவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இதெயெல்லாம் சரிபண்ணிட்டா, கம்பெனிய திறந்துக்கலாம்னு அவங்க சொல்றாங்க. மிக்ஜாம் புயல் வந்தப்பவே, குறைந்தபட்சம் குழாய் எல்லாம் சரியா இருக்கானு செக் பன்னியிருந்தாலே, இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம். அதைக்கூட செய்யாதவங்க, இனி ஒழுங்கா விதிப்படி நடந்துப்பாங்கனு நாங்க எப்படி நம்புறது சொல்லுங்க?” என கேள்வி எழுப்புகிறார், எடுத்த எடுப்பிலேயே.

”1963-ல ஓப்பன் பன்னின கம்பெனி இது. அப்போதிலிருந்து இப்போது வரைக்கும் பிரச்சினைதான். சத்தியவாணி முத்துநகர்தான் ரொம்ப பாதித்த ஏரியா. இந்த பகுதியில இருக்க பெரும்பாலானவங்களுக்கு கை, கால்ல ஏதோ ஒரு ஊணம் இருக்கும். பல் கறை படிஞ்சிருக்கும். இந்த பகுதி நிலத்தடி நீர்ல ப்ளோரைடு கலந்திருச்சி.

துணி துவைக்கவோ, பாத்திரம் கழுவவோ லாயக்கு இல்லாத தண்ணீர்னு கிங்ஸ் இன்ஸ்டியூட்டே டெஸ்ட் பண்ணி சொல்லிட்டாங்க. அப்போ முதலமைச்சரா கலைஞர் இருந்தாரு. அமைச்சர் பொன்முடி ஏற்பாட்டில கார்ப்பரேஷன் தண்ணிய லாரியில கொண்டு வந்து கொடுத்தாங்க. இப்போ வரைக்கும் அதுதான் நிலைமை.

கோரமண்டல் உரத்தொழிற்சாலை எதிரா மக்கள் போராட்டம்
கோரமண்டல் உரத்தொழிற்சாலை எதிரா மக்கள் போராட்டம்

ஆரம்பத்துல, 2000 டன் அளவுக்குத்தான் அமோனியாவ இங்க இருப்பு வச்சிருந்தாங்க. இப்போ, 12,500 மெட்ரிக் டன் அளவுக்கு இருப்பு வைக்கிறாங்க. அதுக்காக, ராட்சச டாங்க் நிறுவியிருக்காங்க. அதுவும் கடல்ல இருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில இருக்கு.

டிச-26 அன்னைக்கு மட்டும் 67.54 டன் அமோனியா வெளியாகியிருக்கிறதுனு இப்போ கண்டுபிடிச்சிருக்காங்க. அவ்வளவும் கடல்ல கலந்திருக்கிறது. அதுவே, வெளியில் கசிந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்னு சொல்ல முடியாது.

இந்த நிலைமையில 12,500 மெட்ரிக் டன் இருப்பு வைக்கிறத எப்படி அனுமதிக்க முடியும்? எந்த நேரத்துல எதுவேனாலும் நடக்கலாம். பெரிய அளவுல அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக உரிய நடவடிக்கை எடுக்கனும்தான் நாங்க போராடிகிட்டிருக்கிறோம்.” என்கிறார், க.தமிழ்ச்செல்வன்.

கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியோர் இப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், உயர் அதிகாரிகள், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் போராடும் மக்களுடன் தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.

ஒன்று ஆலையை மூட வேண்டும்; அல்லது, குறைந்தபட்சம் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ள 12,500 மெட்ரிக் டன் அமோனியா இருப்பு வைக்கும் ராட்சச டேங்கையாவது அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக நின்று 40 நாட்களை கடந்தும் போராட்டத்தை தொடர்கின்றனர், அப்பகுதி மக்கள்.

– வே.தினகரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.