திமுகவின் உள்கட்சி தேர்தல் ; நிர்வாகிகள் அலர்ட் !
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியதை அடுத்து திமுகவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேசமயம் அதிமுகவினர் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததை அடுத்து, அடுத்தகட்ட ஆலோசனைக்கு திட்டமிட்டு தவறுகளை சரிசெய்ய பேச்சுக்களை தொடங்கியிருக்கின்றனர்.
இந்த நிலையில் திமுகவினர் தோல்வியடைந்த இடங்களில் திமுகவினரின் உள்ளடி வேலைகளும் முக்கிய காரணமாக இருந்தது என்று தோல்வியடைந்த வேட்பாளர்கள் தலைமைக்கு கடிதம் எழுதத் தொடங்கி இருக்கின்றனர். அதிலும் திமுக கூட்டணி கட்சியினர் போட்டியிட்ட இடங்களில் தான் அதிக தோல்வி ஏற்பட்டிருக்கிறது.
இதனால் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் திமுக மாவட்ட தலைமைகளுக்கு உள்ளடி வேலை செய்தவர்களின் பட்டியலை தயார் செய்து கொடுக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
அதேநேரம் திமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் உள்ளடி வேலை செய்த திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை அறிவாலய வட்டாரம் முடிவு எடுத்திருக்கிறதாம்.
இதற்கு விரைவில் வர இருக்கிறா திமுகவின் உள்கட்சி தேர்தலைப் பயன்படுத்தி, உள்ளடி வேலை செய்த நிர்வாகிகள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் திறம்பட செயல்பட்ட நிர்வாகிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்க வாய்ப்புள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. இந்த நிலையில் திமுகவின் நிர்வாகிகள் உள்கட்சி தேர்தலுக்கு தயாராக தொடங்கிவிட்டனர்.