திமுகவின் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் செங்கோட்டை நோக்கி புறப்பட்டது !
திருச்சி என்றாலே திருப்புமுனை என்பதுதான் திமுகவின் அசைக்கமுடியாத நம்பிக்கைகளுள் ஒன்றாக இன்றளவும் நீடித்து வருகிறது. வலுவான இந்தியா கூட்டணியை கட்டியமைத்து செங்கோட்டை நோக்கிய வெற்றிப் பயணத்தை திருச்சி மலைக்கோட்டையிலிருந்து தொடங்கியிருக்கிறது, திமுக.
திமுகவின் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் செங்கோட்டை நோக்கி புறப்பட்டது !
2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தை திருச்சி சிறுகனூரில் நடைபெறும் என்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் ராஜ்பவனில் இருந்து ஆரம்பித்திருக்கிறார், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழாத குறையாக மன்னிப்புக் கேட்ட கையோடு, மாலை 3.30 மணிக்கெல்லாம் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
பதவிப்பிரமாண சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, திருச்சி, பெரம்பலூர் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மதிமுக தலைவர் வைகோ, மாநிலங்களவை உறுப்பினர் சிவா, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், ரகுபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், திருச்சி பாராளுமன்ற வேட்பாளராக துரை.வைகோ, பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளராக அருண் நேருவையும் அறிமுகப்படுத்தி உரையாற்றினார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.
“நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் பா.ஜ.கவிடம் இருந்து காப்பாற்ற நம் முதல்வர் வலுவான கூட்டணியை உருவாக்கி உள்ளார். முதல்வர் கொடுத்துள்ள தேர்தல் அறிக்கை மிக மிக வரவேற்கதக்கது. கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எண்ணற்ற நல்ல திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி உள்ளார். தேர்தலில் இந்த கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும்” என்றார், திருச்சி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் துரை.வைகோ.
”திருச்சி மண்டலத்தில் நடைபெற்ற எத்தனையோ கூட்டத்தை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால், இன்று மேடையில் நின்று பேசுவேன் என்று எண்ணி கூட பார்த்ததில்லை.” என்பதாக நெகிழ்ந்த பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும் அமைச்சர் கே.என்.நேருவின் புதல்வருமான அருண்நேரு, “முதல்வர் எனக்கு முதலாவதாக வாக்கு சேகரிக்க வருகை தந்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத விஷயம்.” என உணர்ச்சிகள் மேலிட பேசினார் அருண் நேரு.
“நேற்று இரவு டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பா.ஜ.கவின் தோல்வி பயம் தான் காரணம். அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை இது. தனக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை கூட்டி விட்டனர் என்கிற பயம் பா.ஜ.கவிற்கு.
சென்னையிலிருந்து நான் கிளம்பும் போது அமைச்சர் பொன்முடிக்கு பதவி பிரமாணம் நடைபெற்றது. ஆளுநர் அவராக கூப்பிடவில்லை. விடுவோமா நாங்கள். நாங்கள் திமுக காரர்கள். ஒரு மரியாதைக்கு பொக்கே கொடுத்து விட்டு, ராஜ் பவனில் இருந்து பிரச்சாரத்தை துவக்கி இருக்கிறேன் என ஆளுநரிடம் கூறிவிட்டு வந்தேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது எழுந்த கரவொலி அடங்க நிறைய நேரம் பிடித்தது.
“350 கோடி மதிப்பீட்டில் பேருந்து முனையம். 110 கோடியில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம். புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் – என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆத்தூர் முதல் பெரம்பலூர் வரை அகல ரயில் பாதை உருவாக்கப்படும். திருச்சி பால்பண்ணை சாலையில், உயர்மட்ட சாலை அமைப்பதோடு, அலகு சாலையும் அமைக்கப்படும்.” என்பதான தொகுதி சார்ந்த வாக்குறுதிகள் பலவற்றை பலத்த கரவொலிகளுக்கிடையே அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
”பா.ஜ.க ஊழலை நாம் அல்ல நாடு முழுவதும் கூறும். தேர்தல் பத்திர ஊழல் மிக பெரிய ஊழல். நம் நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் ஊழல். 8 ஆயிரம் கோடி ரூபாய் வரை பா.ஜ.க வசூல் செய்துள்ளனர். துவராக கட்டுமான ஊழல். ஆயூஸ்மான் பாரத் திட்ட ஊழல் – என பாஜகவின் ஊழல்கள் அத்தனையும் இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் அடுத்தடுத்து அம்பலத்திற்கு வரும்.” என்ற எச்சரிக்கையையும் விடுக்கத் தவறவில்லை முதல்வர்.
“தி.மு.க.,வினருக்கு தூக்கம் வரவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தோல்வி பயத்தில் அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை. தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்திலே பிரதமர் தமிழகம் வருகிறார். 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த பிரதமர் மோடியால் தமிழகத்திற்கு செய்த ஒரு திட்டத்தை கூட சொல்ல முடியுமா? தமிழ்நாட்டிற்கான சிறப்புத்திட்டங்கள் எதையாவது பிரதமர் மோடி பட்டியலிட முடியுமா? பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயம் அவரது கண்களிலும் முகத்திலும் தெரிகிறது. பிரதமர் மோடியால் தான் செய்த சாதனைகளை சொல்ல முடியவில்லை.
மக்களின் பிரச்சினைகளை மறைக்கவே தேவையில்லாததை பேசி பிரதமர் திசை திருப்புகிறார். பா.ஜ.க. அரசின் தோல்விகளை மறைக்கவே தேவையில்லாத விஷயங்களை மோடி பேசுகிறார். பா.ஜ.க.,வின் தேர்தல் தோல்வி பயத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. 10 ஆண்டுகால பா.ஜ.க. அரசுக்கு தேர்தல் பத்திர ஊழல்தான் எடுத்துக்காட்டு. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பாஜக அரசின் ஊழல்கள் வெளியே வரும். ஜூன் – 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி வெற்றி என்கிற அறிவிப்பு வர போகிறது. அது உங்களுக்கு தூக்கம் இல்லாமல் போக போகிறது. நாற்பதுக்கு நாற்பதையும் நிச்சயம் வெல்வோம்!” என்பதாக தனது அரசியல் உரையை நிறைவு செய்தார் முதல்வர்.
திருச்சி என்றாலே திருப்புமுனை என்பதுதான் திமுகவின் அசைக்கமுடியாத நம்பிக்கைகளுள் ஒன்றாக இன்றளவும் நீடித்து வருகிறது. 1956 – இல் இதே திருச்சியில் அண்ணா தலைமையில் நடைபெற்ற திமுகவின் இரண்டாவது மாநில மாநாட்டில்தான், திமுகவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் அந்த கேள்வி தொண்டர்களிடம் வாக்களிப்புக்காக முன் வைக்கப்பட்டது.
தி.க. வழியில் பயணிப்பதா? தேர்தல் பாதையில் பங்கேற்பதா? என்ற கேள்விக்கு 95 சதத்திற்கும் அதிகமான தொண்டர்களின் விருப்பம் தேர்தல் பங்கேற்பு என்பதாகவே அமைந்தது. அடுத்த ஆண்டில் (1957) நடைபெற்ற தேர்தலில் களமிறங்கிய திமுக தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 15 சட்டமன்ற உறுப்பினர்களையும், 2 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வென்றெடுத்தது. அடுத்த பத்தே ஆண்டுகளில் (1967) ஆட்சியையும் பிடித்தது திமுக.
அன்று முதலாக, பல்வேறு அரசியல் சூழல்களில் திருச்சியில் திமுக மாநாடுகள் பல நடைபெற்றிருக்கின்றன. 1996-இல் திருச்சி மாநாடு வழங்கிய உத்வேகம்தான் ஜெ.வை ஆட்சியிலிருந்து வீழ்த்தியது. 96 – தொடங்கி தொடர்ந்து பத்தாண்டுகளையும் நிறைவு செய்தார் முத்தமிழறிஞர் கலைஞர். 2006 – இல் சோனியா காந்தி தலைமையிலான மாநாட்டையும் நடத்தினார் கலைஞர். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை முதல்வராக்கிய சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தையும் திருச்சியிலிருந்துதான் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய வரலாற்று பின்புலத்திலிருந்து, வலுவான இந்தியா கூட்டணியை கட்டியமைத்து செங்கோட்டை நோக்கிய வெற்றிப் பயணத்தை திருச்சி மலைக்கோட்டையிலிருந்து தொடங்கியிருக்கிறது, திமுக.
டெல்டாக்காரன்.