அங்குசம் பார்வையில் ‘டபுள் ஆக்குபன்ஸி’
தயாரிப்பு: ‘பென்ஸ் மீடியா’ ஏசிஎஸ் அருண்குமார், ‘ஆவ்னி மூவிஸ்’ குஷ்பு சுந்தர், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அனந்திதா சுந்தர், டைரக்டர்: அஸ்வின் கந்தசாமி, ஆர்டிஸ்ட்: சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், விடிவி கணேஷ், பக்ஸ், போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன், விச்சு (எ) விஸ்வநாதன், ஒளிப்பதிவு: சாந்தகுமார் சக்ரவர்த்தி, இசை: சாம் சி.எஸ்., எடிட்டிங்: பிரவீன் ஆண்டனி, பிஆர்ஓ: ரியாஸ் அகமது & பாரஸ் ரியாஸ்.
திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கும் தங்களின் ஆண் குழந்தைக்கு [ ரஜினி பிறந்த டிச.12-ல் பிறந்ததால்] ரஜினி என பெயர் வைக்கிறார்கள் போஸ் வெங்கட்டும் வினோதினி வைத்தியநாதனும். ஆனால் பிறந்து சில நிமிடங்களிலேயே அந்த ஆண் குழந்தை இறந்துவிட, கொட்டும் மழையில் வெளியில் தூக்கிவந்து தலைக்கு மேலே குழந்தையைத் தூக்கி, ”ஆண்டவா என்ன சோதனை இது?” என கதறுகிறார் போஸ்வெங்கட். அப்போது வானத்திலிருந்து ஒளிகீற்று வந்து குழந்தை மீது பட்டதும் உயிர் பெறுகிறது. ஆனால் பேரதிர்ச்சியாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆணாகவும் உரு மாறுகிறது. இதனால் ஊரைவிட்டு கிளம்பி கொடைக்கானல் போகிறது போஸ் வெங்கட் குடும்பம். அங்கே சாலைவிபத்தில் போஸ் வெங்கட்டும் வினோதினியும் இறந்துவிட வேலை தேடி பகலில் சென்னை வருகிறார் ரேஷ்மா வெங்கடேஷ். அங்கே மரபணு ஆராய்ச்சி மையத்தில் வேலைக்குச் சேர்கிறார். மாலை 6 மணி ஆனதும் சந்தோஷாக மாறுகிறார். பகல் ரேஷ்மாவை வினோத் கிஷன் லவ் பண்ண, ராத்திரி சந்தோஷை சம்யுக்தா விஸ்வநாதன் லவ் பண்ணுகிறார். அதன் பின் நடக்கும் களேபரங்களும் குமட்டல் சங்கதிகளும் தான் இந்த ‘டபுள் ஆக்குபன்ஸி’.
ஏன்னா ஒரு நாள் சாயங்காலம் ஆறரை மணி ஆனாலும் ஆணாக மாறமாட்டேங்குறார் ரேஷ்மா. ஏன்னா வினோத் கிஷனுடன் செக்ஸ் வச்சுக்கிட்ட பிறகு தான் வயசுக்கு வர்றாராம். யோவ் டைரக்டரே உங்க கற்பனையில தீயவைக்க. இன்னும் விவரித்து எழுதினால் விகாராமகவும் விவகாரமாகவும் போய்விடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்குவோம்.
காஸ்ட்லி காஸ்ட்யூம் ஜவுளிக்கடையான டயாடெம்மின் ஓனராக , ஆளு பார்க்க வாட்டசாட்டமா, செமத்தியான செக்ஸ் எக்ஸ்போஸாக சம்யுக்தா விஸ்வநாதன். ரேஷ்மா வெங்கடேஷைவிட இவருக்குத் தான் அதிகமான சான்ஸ்கள் வரிசைகட்டி நிக்கப் போகுது. இனிமேல் நல்ல கதைகளிலும் கண்டெண்டிலும் கவனம் செலுத்தினால் கோலிவுட்டில் கொஞ்ச காலத்தை ஓட்டலாம் சந்தோஷ்.
சந்தோஷின் நண்பனாக விடிவி கணேஷ் சில சீன்களில் டைமிங் காமெடியில் பின்னிப் பெடலெடுக்கிறார். அதிலும் வினோத் கிஷன், சந்தோஷை முழுசாகப் பார்க்கும் சீனில் அப்ளாஷ் அள்ளுகிறார் விடிவி.
மரபணு ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பக்ஸ். அவருக்கு ஒரு ஃப்ளாஷ் பேக். இவரின் கைத்தடியாக விச்சு என என்னென்னத்தையோ கொண்டு வந்து படத்தை எப்படி முடிப்பதுன்னு தெரியாம கண்ணு முழி பிதுங்கி நம்மையும் பிதுக்கி எடுத்துட்டார் டைரக்டர் அஸ்வின் கந்தசாமி.
அங்குசம் பார்வையில் ‘டபுள் ஆக்குபன்ஸி’ 34/100
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.