பூஜையறை படமாக அல்லாமல், அம்பேத்கரை ஆயுதமாகவும் கேடயமாகவும் மாற்றி மாணவர்களுக்கு பரிசளித்த பள்ளி !
தேசியக் கொடி ஏற்றி வைத்தும் பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கலாச்சார விழாக்களை நடத்தியும் சம்பிரதாயமான முறையில் குடியரசு தின விழாவை கொண்டாடும் பள்ளிகளுக்கு மத்தியில், குடியரசு தினம் அனுசரிக்கப்படுவதன் நோக்கத்தை அதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் முற்றிலும் வித்தியாசமான முறையில் அனுசரித்திருக்கிறது, சென்னை தியாகராயா நகரில் இயங்கிவரும் நவபாரத் மெட்ரிகுலேஷன் பள்ளி.
”நாம், இந்திய மக்கள், உறுதி கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசாக கட்டமைத்திட, மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி; எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன்செயலுரிமை; படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம் ஆகியன உறுதிசெய்திட; மற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை ஊக்குவித்திட இந்த 1949, நவம்பர் இருபத்தி-ஆறாம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்று, சட்டமாக்கி நமக்கு தருகிறோம்.” என்பதாக அமைந்த அண்ணல் அம்பேத்கர் – இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை தாங்கிய (Photo Frame with images of Dr. B. R. Ambedkar and the Preamble) படத்தினை மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
பள்ளி முதல்வர் பா. லலிதா தேவி உள்ளிட்ட ஆசிரியர்களும் பங்கேற்ற இந்நிகழ்வில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்களோடு, பள்ளி நிர்வாகத்தினரே எதிர்பாராதவிதமாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பங்கேற்று பள்ளி மாணவ – மாணவியருக்கு நினைவு பரிசினை வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள்.
இத்தகையதொரு தனிச்சிறப்பான, தமிழகத்தின் மற்ற பள்ளிகளுக்கெல்லாம் முன்மாதிரியான செயல்வடிவத்தை அறிமுகப்படுத்திய பள்ளியின் நிர்வாகிகள் தரப்பில் பேசினோம். “சென்னை 600 017 தியாகராயா நகரில் 1989-ம் ஆண்டு பள்ளியில் இருந்து விடுபட்டவர்களுக்கான பள்ளியாக தொடங்கப்பட்டு, 1996 முதல் தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற பதின் நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
மழலையர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் பெரும் பகுதி பள்ளியைச் சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் குழந்தைகளே படிக்கின்றனர்.
ஒரு குழந்தையை நல்ல மனிதராக, சிறந்த சமூக மனிதராக வளர்த்தெடுப்பதே பள்ளிக் கல்வியின் நோக்கம் என்ற புரிதலுடன் செயல்படும் இப்பள்ளி பல்வேறு நிகழ்வுகள் மூலம் மாணவர்களும், பெற்றோரும் சமூக உரையாடல்கள் நிகழ்த்த வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்திய இறையாண்மை என்பதை எவ்வாறு புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற உரையாடலின் விளைவாக 76வது இந்திய குடியரசு தின விழாவில் அனைத்துக் குழந்தைகளுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையுடன் அண்ணல் அம்பேத்கர் உருவத்தை இனைந்த படத்தை உருவாக்கி மாணவர்கள் அனைவருக்கும் வழங்கியது. படத்தை தங்களின் இல்லங்களில் வைத்திருக்கும் போது அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் உள்ள தொடர்பை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் உரையாட முடியும்.
சமூகச் சமத்துவத்தை வலியுறுத்திய பாபாசாககேப் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் பெயர் மீண்டும் மீண்டும் அனைவராலும், அனைத்து நிகழ்வுகளிலும் உச்சரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துக் கொள்ள வீடு தோறும் நடக்கும் உரையாடல் உதவும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அனைவரும் உணர வேண்டும்.
மக்களிடம் இறுதி இறையாண்மை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த, சமயச் சார்பற்ற சமதர்ம ஜனநாயக குடியரசாக, இந்தியாவை, நமது இந்திய அரசமைப்புச் சட்டம் வடிவமைத்துள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்தை தெளிவுபட விளக்கும் ஆவணமே அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை – The Preamble.
இந்திய இறையாண்மை இந்திய மக்களிடம் இருக்கிறது. மக்கள் தாங்கள் அளிக்கும் வாக்கின் வாயிலாக, தாங்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதி மூலம் அரசிற்கு இறையாண்மையை தருகின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை, இந்திய அரசியல் சாசன நிர்ணய சபையில் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களால் முன்மொழியப்பட்டது.
இதில் இடம் பெற்றுள்ள மிக முக்கியமான அம்சம். சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற பிரகடனம். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சகோதரத்துவம் இல்லாமல் சுதந்திரமும் சமத்துவமும் மெய்யாலுமே அனைவருக்கும் உறுதி செய்ய இயலாது என்பதை தெளிவுபட விளக்கினார். நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்று நம்மை பிணைக்கும் ஆவணமே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை.
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை முன் வைக்கும் நோக்கத்தை நிறைவேற்ற, தேவையான அனைத்துக் கூறுகளையும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில், தன்னால் இயன்றவரை இடம் பெறச் செய்ததாலேயே, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுத் தலைவர் பாபாசாககேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
பாபாசாககேப் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்களையும் இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் பிரித்துப் பார்க்க இயலாது என்பதனாலேயே முகப்புரையுடன் அண்ணலின் படத்தையும் இணைத்து மாணவ – மாணவியர் அனைவருக்கும் இன்றைய தினத்தில் வழங்குகிறோம்.
நம் ஒவ்வொருவரின் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் அரணாக இந்திய அரசமைப்புச் சட்டம் விளங்குகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. 75 ஆண்டுகளில் இந்திய நாடு பலவகையிலும் முன்னேறி உள்ளது.
மக்களிடம் இறுதி இறையாண்மை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த சமயச் சார்பற்ற சமதர்ம ஜனநாயக குடியரசாக இந்தியா நீடித்து நிலைக்கச் செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது. அடுத்தத் தலைமுறைத் தலைவர்களான இன்றைய மாணவர்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது.” என்பதாக தெரிவிக்கிறார்கள்.
வழிபாட்டு வகையிலான பூஜையறை படமாக அல்லாமல் ; ஒரு உரையாடலை நிகழ்த்தவல்ல அம்பேத்கரை ஆயுதமாகவும் கேடயமாகவும் மாற்றி மாணவர்களுக்கு பரிசளித்திருப்பது கவனத்தை பெற்றிருக்கிறது.
— இளங்கதிர்.