உயரப் பறக்கும் வருணாசிரமக்கொடி – டீ போடவும், பக்கோட சுடவும் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி ! தொடர்ச்சியாகப் பாலங்கள் இடிந்து விழுதல், காப்பி அடித்து எழுதும் தேர்வு முறை, சாமியார் சொற்பொழிவு நெரிசல் சம்பவ உயிரிழப்புகள் போன்ற அவலங்களைத் தொடர்ந்து, நமது நாட்டின் வட மாநிலம் ஒன்றில் இன்னொரு அவலமும் அரங்கேறி இருக்கிறது.
அது வேறு ஒன்றும் அல்ல; பிரபல சாமியாரான யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் உத்திரபிரதேச மாநிலத்தில் தான். அங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பக்கோடா சுடவும், டீப்போடுவதற்கும் அளிக்கப்படும் பயிற்சி பலரையும் பேச வைத்திருக்கிறது.
உத்திரபிரதேசம் என்றாலே தரமற்ற கல்வி முறையைக் கொண்ட மாநிலம் என்பது அனைவரது நினைவுக்கும் வந்துவிடும்; அதனை மீண்டும் மெய்ப்பிக்கும் விதமாக அங்குள்ள அரசு பள்ளிகளில், ஆறு முதல் எட்டு வரை பயிலும் மாணவர்களுக்கு டீப்போடுவதற்கும், பக்கோடா சுடுவதற்கும், டயர் பஞ்சர் போடுவதற்கும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
முதல் கட்டமாக 26 அரசுப்பள்ளிகளில் இந்தப் பயிற்சி திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதற்கு மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருந்தால் மாநிலம் முழுவதும் இருக்கும் அனைத்து அரசு பள்ளிகளிலும் இதனைக் கொண்டு வருவதற்கு யோகி ஆதித்யநாத் திட்டமிட்டு இருக்கிறார்.
இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் அரசுப் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் தலா 28,770 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. டீப்போடுவதற்கும் பக்கோடா சுடுவதற்கும் தேவையான பாத்திரங்கள், கரண்டிகள் போன்ற 50 வகையான உபகரணங்கள் வாங்குவதற்கு இந்தப் பணம் பயன்படுத்தப்படும்.
இதைப் படிப்பவர்கள் உத்திரபிரதேச அரசின் இந்தத் திட்டத்தை விளையாட்டாக நினைத்து விட வேண்டாம்; சிரித்து விடவும் வேண்டாம். 100% நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு தான் இங்கே பதிவு செய்யப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கு “கற்றுப்பார்” என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. டீ, பக்கோடா மற்றும் பஞ்சர் ஒட்டுதல் பயிற்சியுடன் சேர்த்து பழச்சாறு தயாரித்தல், தச்சுத்தொழில், விவசாயம் ஆகியவை பற்றியும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்து இருக்கிறது.
இதே பாஜக ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற ஒரு கல்லூரி திறப்பு விழா நிகழ்ச்சியில், அத்தொகுதியின் பாஜக எம்எல்ஏ பன்னாலால் என்பவர் பங்கேற்று பேசினார். மாணவர்கள் படித்துப் பட்டம் வாங்குவதால் எந்தப் பலனும் கிடைக்காது; சாலை ஓரங்களில் பஞ்சர் கடை வைத்துப் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் எனக் கற்றுத் தேர்ந்த அறிவு ஜீவி போல் பேசினார்.
தனது கட்சி எம்எல்ஏ வின் இந்தப் பேச்சில் மயங்கியோ அல்லது அதனை அப்படியே கொள்கை சார்ந்து உள்வாங்கியோதான் யோகி ஆதித்யநாத், பள்ளி சிறுவர்களுக்குப் பஞ்சர் போடும் பயிற்சியைத் தொடங்கியிருக்கிறார் போலும்.
இதேபோல் நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருக்கும் மோடி அவர்கள் தனது சிறு வயதில் டீ விற்பனையில் ஈடுபட்டதால் அதனை கவுரவப்படுத்தும் விதமாகவும், மோடியின் மீதான பற்று, பாசம் காரணமாகவும் உத்தரபிரதேச அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அதற்கான பயிற்சியை வழங்குகிறது என்று கூட நாம் எண்ணிக் கொள்ளலாம்.
மேலும் பிரதமர் மோடி ஏற்கனவே ஒரு முறை பக்கோடா விற்பதும் ஒரு வகையான வேலை வாய்ப்பு தானெனப் பேசியதாலும், அவரது சகா அமித்ஷா அதில் வெட்கப்பட ஒன்றும் இல்லையென அதற்கு ஒத்து ஊதியதும் கூட உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் செவிகளில் வேதவாக்காக ஒலித்து விட்டது போலும்.
அதனால்தான் அவர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரைச் சம்பாதிக்கும் நோக்கத்தோடும், காவி சித்தாந்தத்தை உயர்த்தி பிடிக்கும் சிந்தனையோடும் அரசு பள்ளிகளில், இந்தத் திட்டத்தை அவர் கொண்டு வந்திருக்கிறாரோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
ஆனால் பாவம் அதற்கு அப்பாவி அரசுப் பள்ளி மாணவர்கள் தானா பலியாக வேண்டும்.!?
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்; இங்கு நாம் எந்தத் தொழிலையும் குறைத்து மதிப்பிடவில்லை; அதன் சிறப்பைத் தாழ்த்திடவும் இல்லை; ஆனால் பள்ளிக்கூடத்தில் தொடக்கநிலை, நடுநிலை என்பதெல்லாம் மிகவும் கவனமுடன் கையாளப்பட வேண்டிய கட்டமாகும்.
ஆனால் அதை மறந்து விட்டு ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு வடை சுடவும், போண்டா சுடவும் கற்றுத் தருவது கல்விக்கூடத்திற்கு அழகா என்பதற்கு உத்தரபிரதேச ஆட்சியாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்; ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் படிக்கும் 90% மாணவர்கள் ஏழ்மை நிலையில், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருப்பவர்கள். உயர் வகுப்பினரோ, மேம்பட்ட பிரிவினரோ அல்லது பொருளாதார வசதி படைத்த வீட்டு பிள்ளைகளோ அரசு பள்ளிகளில் படிக்கவில்லை. இதை நன்கு தெரிந்து கொண்டு தான் வருணாசிரமத்தின் கோர முகமாக. வருணாசிரமத்தின் அப்பட்டமான வெளிப்பாடாக உத்தரபிரதேச அரசு இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை வெட்கமே இல்லாமல் நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
ஆறு முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் டீப்போடும் இந்தப் பயிற்சி திட்டத்தைத் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இதே உத்தர பிரதேச அரசு நடைமுறைப்படுத்துமா? அதற்கான துணிச்சல் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கோ அல்லது அவர் சார்ந்த இந்துத்துவா சித்தாந்த கூட்டத்திற்கோ இருக்கிறதா?
கடந்த ஆண்டு மத்திய அரசு, பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்தைக் கொண்டு வந்ததையும், உத்தரபிரதேச அரசின் இந்தப் பள்ளிக்கூட டீப்பயிற்சி திட்டத்தையும் சேர்த்தே பார்க்க வேண்டி இருக்கிறது. பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டு வந்தவர்கள் வேறு எந்தத் தொழிலுக்கும் சென்று விடாத வகையில், அவர்களுக்குக் கடன் உதவி, பயிற்சி போன்றவற்றை வழங்கும் வகையில் விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டம் மத்திய பாஜக அரசால் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்படி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் உடனே இந்தத் திட்டத்தில் சேர தகுதியானவர்கள்; (இதன் மூலம் பள்ளிக் கல்விக்குப் பிறகு ஒருவர் உயர்கல்விக்கு செல்வது முற்றிலுமாகத் தடுக்கப்படுகிறது என்பதை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும்) தந்தை வழி, பாட்டன் வழியெனப் பரம்பரை பரம்பரையாகச் செய்து வரும் தச்சுத்தொழில், நெசவுத் தொழில், மண்பாண்டத்தொழில், பொற்கொல்லர் என 18 வகையான பாரம்பரிய தொழில் தெரிந்தவர்களுக்காக மட்டும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன் மறைமுக நோக்கமே இப்படிப்பட்ட தொழில்களைக் கொண்ட குடும்பத்தினரின் வீட்டுப் பிள்ளைகள் ஒரு மருத்துவராகவோ, பொறியாளராகவோ, வழக்கறிஞராகவோ நிபுணத்துவம் பெற்று விடக் கூடாது என்பதுதான். அதாவது ஆரம்பகால குலத்தொழில் முறையை அப்படியே மீண்டும் புகுத்தும் வருணாசிரமத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டம்.
அந்தத் திட்டத்திற்கும் உத்தரபிரதேச பாஜக அரசு தற்போது கொண்டு வந்திருக்கும் பள்ளிக்கூட பக்கோடா பயிற்சி திட்டத்திற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. நாம் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரதேச அரசை உற்று நோக்கும்போது, அங்கு வருணாசிரமக் கொடி உயர பறக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
கட்டுரையாளர் – முனைவர்.இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.திருச்சி கிழக்கு தொகுதி