எடப்பாடிக்கு வளரி வழங்கிய பிரச்சனை!
நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மன்னர்களில் மருது சகோதரர்கள் பயன்படுத்திய கருவி தான் வளரி. இந்த வளரியை நாம் இருக்கும் இடத்திலிருந்து எதிரியை நோக்கி வீசினால் எதிரி காயம் பெறுவார் இதுதான் வளரியின் சிறப்பு தமிழக அரசியலில் திராவிட கட்சியில் கலைஞர், எம்ஜி ஆர் இருவரும் இணைந்து ஒன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்தபோது இருவருக்குள்ளும் பிரிவினை உண்டாகி திமுக, அதிமுக என இரு கட்சியாக பிரிந்து இருவரும் செயல்பட்டு வந்தனர்.
அதிமுக உதயமான காலத்தில் இருந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலம் வரை நன்றாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் பிரிவினையில் பொதுச் செயலாளர் யார் என்று இருவரும் போட்டி போட்டு நீதிமன்றத்தை அணுகினர். 2023 மார்ச் 31ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள், பொதுச் செயலாளர் எடப்பாடி தான் என அறிவித்தனர். அதையொட்டி தமிழகத்தில் உள்ள அதிமுகவினர் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து கூறி வந்தனர்.
இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் முன்னாள் எம்எல்ஏ., டாக்டர் சரவணன், எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழர்களின் போர் கருவியான வளரியின் மாதிரியை பரிசாக கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதிமுக கட்சியினருக்கு இடையே முனுமுனுப்பு ஏற்பட்டது. மருது சகோதரர்கள் பயன்படுத்திய போர் கருவியை மதுரை டாக்டர் சரவணன் எடப்பாடிக்கு வழங்கி உள்ளார். இந்த கருவி ஆங்கிலேயர் காலத்தில் பல உயிர்களை எடுத்தது. டாக்டர் சரவணனிடம் இது வந்ததால் தான் அரசியலில் அதிக பிரச்னைகளை சந்தித்துள்ளார். அதிமுக கட்சியில் இணைந்ததிலிருந்து சுவரொட்டிகளில் மருது சகோதரர்கள் உருவமில்லாமல் சுவரொட்டிகள் ஒட்டுவதில்லை இவர் என கூரலாம்.
ஆங்கிலேயர்களை எதிர்த்த தீரன் சின்னமலை
டாக்டர் சரவனனிடம் இதைப் பற்றி அங்குசம் சார்பில் விளக்கம் கேட்க., அவர் நம்மிடம் கூறியது: சார் 1799 முதல் 1805 வரை ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற தீர்த்தகிரி கவுண்டர் என்ற தீரன் சின்னமலை ஈரோடு மாவட்டத்தில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் 1786ம் ஆண்டு பிறந்தார். 1799ம் ஆண்டு திப்பு சுல்தான் மரணம் அடைந்தபோது கோவை பகுதியை கைப்பற்ற வந்த கர்னல் மேக்ஸ் தலைமையிலான ஆங்கில படையை எதிர்த்து தீரன் சின்னமலை வெற்றி பெற்றார்.
பின்னர் கொங்கு நாட்டில் ஓடாநிலை எனும் ஊரில் ஒரு கோட்டையை கட்டி படையை திரட்டி ஆங்கிலேயர்களிடம் போராடினார். தீரன்சின்னமலை இந்திய விடுதலைப் போர் வீரர். தமிழகத்தில் பிரிட்டானியா கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை அதாவது ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து கருப்பசேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களில் இவரும் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டையும் கட்டியுள்ளார்.
ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி
சின்ன மலையை போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்து ஆங்கிலேயர் அவரை சூழ்ச்சியால் வெல்ல முயன்றனர். சின்ன மலையின் சமையல்காரர் ஆங்கிலேயர்களுக்கு உதவிட சின்னமலை சாப்பிடும்போது அவரை காட்டிக் கொடுத்தார். தமிழக விடுதலைப் போரில் கட்டபொம்மன், ஊமைத்துரை சகோதரர்கள் ஆகியோரை ஆங்கிலேயர் எதிர்த்த பின் கொங்கு நாட்டில் தீர்த்தகிரி என்ற வீரர் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார். ஆங்கிலேயர்களால் போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று சூழ்ச்சி செய்வதற்காக சின்ன மலையை கைது செய்ய வேண்டும் என்று சங்ககிரி கோட்டைக்கு கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி , 1805ம் ஆண்டு தூக்கிலிட்டு விட்டார்கள். தீரன் சின்னமலையுடன் அவருடைய படைத்தலைவராக இருந்த கருப்பு சேர்வையையும் தூக்கிலிட்டார்கள்.
ஒரிஜினல் அல்ல…
நான் கொடுத்தது ஒரிஜினல் வளரி அல்ல. திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை ஊர் திருவிழாவில் அங்குள்ள மக்கள் எனக்கு பரிசளித்தார்கள். அதைத்தான் நான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு இந்த வளரியை பரிசாக வழங்கினேன், அன்று தீரன் சின்னமலைக்கு உறுதுணையாக இருந்த மருது சகோதரர்கள் போல் தென் மாவட்ட முக்குலத்தோர் மக்கள் எடப்பாடியாருக்கு துணை இருப்போம் என்றார்.
டாக்டருக்கு ஏறுமுகம்தான்..
அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், டாக்டர் சரவணன் மதுரையில் கடந்த ஜனவரி 4ல் உறுப்பினராக சேர்ந்ததும் எடப்பாடிக்கு யோகம்தான். பிப்-10ல் மதுரை இணைப்பு விழா நடத்தி மதுரையில் உள்ள கட்சியினரையும் பொதுமக்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் . கடவுளின் அறுபடைவீடு பெயர் கொண்ட டாக்டர். அதிமுகவில் இணைந்த நேரம் ஏறுமுகம் தான். எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததும், நீதிமன்ற தீர்ப்பில் நிரந்தர பொதுச்செயலாளர் ஆனதும் பெருமையாகத்தான் உள்ளது என்றார். டாக்டர் சரவணன், எடப்பாடிக்கு வளரி பரிசாக கொடுத்தது பிரச்னை பெரிசாகும் என்று எதிர்பார்த்த கட்சியினருக்கு வளரி வளைந்து கொடுத்தது ஆச்சரியம்தான்.
-ஷாகுல், படங்கள் – ஆனந்த்