வேட்புமனுவில் தவறான தகவல் விவகாரம்: இ பி எஸ் மீது விசாரணை அறிக்கை தாக்கல் !
வேட்புமனுவில் தவறான தகவல் விவகாரம்: இ பி எஸ் மீது விசாரணை அறிக்கை தாக்கல்
கடந்த 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்புமனுவில் தவறான தகவல் அளித்ததாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீதான வழக்குப்பதிவு குறித்த விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் பி.மிலானி.இவர் சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-க்கு ஆன்லைன் மூலம் , அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது புகார் மனு அளித்தார்.
அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவுகள் 33 மற்றும் 33 ஏ-ன்படி தனது வேட்பு மனுவின்போது பிரமாண பத்திரத்தில் ஆண்டு வருமானம், அசையா சொத்துகள், கடன் விவரங்கள் குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளாகத் தெரிவித்திருந்தார்.
இந்த ஆன்லைன் புகார் மனு குறித்து விசாரித்த சேலம் குற்றவியல் நடுவர் எண் -1 நீதிமன்றம், மனு குறித்து சேலம் மத்தியக்குற்றப் பிரிவு வழக்கை விசாரித்து, போதிய முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும், அதுகுறித்த அறிக்கையை மே 26 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த ஏப்.26 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
வேட்புமனுவில் தவறான தகவலை அளித்ததாக, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ (1), 125 ஏ (2) 125 ஏ (3) ஆகிய பிரிவுகளின் கீழ் சேலம் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் வழக்குப்பதிவு தொடர்பான விசாரணை அறிக்கையை சேலம் மத்தியக் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, சேலம் குற்றவியல் நடுவர் எண் -1 நீதிமன்றத்தில் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் இன்று தாக்கல் செய்தனர்.
-சோழன் தேவ்