அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் படித்தவர் என்றால் நம்ப மறுக்கிறார்கள் !
எங்கள் மகளை LKG UKG வகுப்புகளில் சேர்க்காமல் குழந்தைப் பருவத்தை முழுமையாக வாழ அனுமதித்தோம். பின்னர் ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்த நேரத்தில் மாலத்தீவு செல்ல நேரிட்டு விட்டது. அங்கு தமிழ் கிடையாது. பிரிட்டன் ஆங்கிலப் பாடத் திட்டம். சுனாமி தாக்குதலால் மீண்டும் இங்கு திரும்ப நேரிட்டபோது வேறு வழியின்றி அதன் தொடர்ச்சிக்காக ஆங்கில வழிக் கல்வி. ஆனால், தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்திருந்ததனால் வீட்டிலேயே ஓராண்டு நன்கு தமிழ் பயிற்றுவிட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் தாய்மொழிவழிக் கல்வி கற்க அனுப்பினோம். துணைவியார் அரசுப் பள்ளி ஆசிரியர் என்பதால் அதுவே நேர்மையான செயல் என்று நம்பினோம்.
ஆங்கில வழிக்கல்வி மோகம் முழுமையாகத் தன் ஆதிக்கத்தைத் தொடங்கியிருந்த நேரம் அது. ஆதலால், உறவினர்களும் குடும்ப நண்பர்களும் எங்களைப் பெரும் குற்றவாளிகள் போல நோக்கினர். ஆனாலும், ஆறாம் வகுப்பிலேயே மகள் சுட்டி விகடன் இதழில் முதல் செட் குழந்தை நிருபராக தேர்வாகி இருபதுக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்து தன் தாய்மொழி திறமையை மெய்ப்பித்தார். பின்னர் மேல்நிலைப் பள்ளி வரை தாய்மொழியிலேயே கல்வி பயின்று முடித்தார்.
கல்லூரியில் அவர் விருப்பப்படி முதலில் ஆங்கில இலக்கியம் பின்னர் MBA பயின்றார். தற்போது பெங்களூரில் IBM நிறுவனத்தில் Digital AI and Content Specialist ஆக பணிபுரிகிறார். ஆங்கில மொழிப் புலமையில் நிறைந்துள்ளார். மகள் பணிபுரியும் நிறுவனத்தில் அவர் தமிழ்வழிக் கல்வியில் பயின்றவர் என்பதையோ அதுவும் அரசுப் பள்ளியில் படித்தவர் என்பதையோ நம்ப மறுக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படுகையில் நானும் துணைவியாரும் பெருமிதமாக உணர்கிறோம்.
நான், ‘தமிழ், தமிழ்’ என்று நரம்பு புடைக்க முழங்கியவன் இல்லை. அவ்வாறு முழங்கி கொண்டே கமுக்கமாக குழந்தைகளைப் பிற மொழிவழிப் பள்ளியில் படிக்க வைத்தவனும் வைப்பவனும் இல்லை. சொல்லும் செயலும் ஒன்றே.
**
என் மகள் ஓவியாவை சாதி மத அடையாளங்களுக்குள் அடைக்காமல் சுதந்திரமாகவே வளர்த்தேன். வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்ளும் உரிமையையும் வழங்கியிருந்தேன். ஆனால், அது கட்டாயமாக சாதி மறுப்பு திருமணமாக அமைய வேண்டும் என்பதே என் நிபந்தனையாக இருந்தது.
ஆனால், மகள் ஓவியா சாதி மட்டுமன்றி, மதம் – இனம் – மொழி – நிலம் ஆகிய அனைத்து எல்லைகளையும் கடந்து போர்ச்சுகீஸ் – மலையாள மரபுவழியைச் சார்ந்த ஜான் என்பவரை தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்துள்ளார்.
வைக்கத்திலுள்ள தந்தை பெரியார் நினைவகத்தின் பெரியார் சிலை முன்பாக மணமக்கள் இருவரும் எளிய முறையில் தம் வாழ்க்கை ஒப்பந்தத்தைத் தொடங்கினர். இவ்விடத்தில் நடைபெற்ற முதல் இணை ஏற்பு விழாவாக இது அமைந்தது.
— எழுத்தாளர் நக்கீரன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.