சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 14 ஆண்டுகாலமாக போராடும் இடைநிலை ஆசிரியர்கள் !
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 14 ஆண்டுகாலமாக போராடும் இடைநிலை ஆசிரியர்கள் ! 2009-ஆம் ஆண்டிற்கு பிறகு இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் சுமார், 20,000 அதிகமான ஆசிரியர்களுக்கு அதற்கு முன் பணியில் சேர்ந்த மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளத்தைப் போன்றே தங்களுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக தற்போது, ”சமவேலைக்கு சம ஊதியம்” வழங்கக்கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் சென்னையில் தொடர்ந்து நான்கு நாட்களாக டி.பி.ஐ. அலுவலக முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அலை அலையாக ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்று கைதாகியிருக்கும் சூழலிலும் நான்கு நாட்களாக தொடர்கிறது, இந்த முற்றுகைப் போராட்டம்.
![14 ஆண்டுகாலமாக போராடும் இடைநிலை ஆசிரியர்கள்14 ஆண்டுகாலமாக போராடும் இடைநிலை ஆசிரியர்கள்](https://angusam.com/wp-content/uploads/2024/02/14-ஆண்டுகாலமாக-போராடும்-இடைநிலை-ஆசிரியர்கள்.jpeg)
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுருந்தும் தமிழகம் திரும்பிப் பார்க்கும் வகையிலான முற்றுகைப் போராட்டமாக அமைய வேண்டுமென்ற கோரிக்கையோடு அறிக்கையினை வெளியிட்டிருக்கிறார்கள், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர். அவர்களது அறிக்கையில், “14 ஆண்டுகால கண்ணீரை தீர்க்க நாளை 23.02.2024 தலைநகர் கொள்ளாத மட்டும் அணி திரளு எம் இடைநிலை ஆசிரியரினமே…!!
நான்கு நாட்களாக தொடர் முற்றுகை போராட்டத்தை ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சென்னையில் நடத்தி வருகின்றனர். தினமும் அவர்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் என சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நான்காம் நாளாக பள்ளி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அரசு மூன்று நாட்களாக எங்கள் போராட்டத்தை செவிமடுக்காத காரணத்தால் நான்காம் நாளான இன்று முற்றுகை போராட்டத்துடன் கூடிய உண்ணாவிரத போராட்டத்தையும் அறிவித்துள்ளோம். பள்ளியை புறக்கணித்து உள்ள அத்தனை ஆசிரியர்களும் நாளை சென்னையில் ஒன்றுகூடி நமது உரிமை முழக்கத்தை விண்ணுக்கு எழுப்புவோம்.
அரசிடம் எங்கள் ஒற்றைக்கோரிக்கையான “சம வேலைக்கு சம ஊதியம்” பற்றி கேட்கும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் தமிழக நிதி பற்றாக்குறை, குழு அமைத்திருக்கிறோம் என ஏதாவது ஒரு சாக்கு போக்குகளை சொல்லி அரசு தரப்பில் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். தற்போது சாக்கு போக்குக்கு இடமில்லை.
மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்களும் மதிப்புமிகு நிதித் துறை செயலாளார் அவர்களும், “தமிழகத்தில் நிதிச் சுமை இல்லை. நிதி மேலாண்மை சிறப்பாக கடைபிடித்திருக்கிறோம்” என்று பேட்டியும் தமிழக சட்டமன்றத்திலும் தெரிவித்துள்ளார்கள். நிலைமை இதுபோன்று இருக்க நமக்கு செய்வதற்கு மட்டும் மனம் இல்லாமல் தொடர்ந்து இதுபோன்று சாக்குப் போக்கு சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. 14 ஆண்டு கால போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக ஆங்காங்கே வீடுகளில் இருக்கும் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த ஆசிரியர் இனமும் நமது போராட்டத்தில் இணைந்து இன்னும் மிகத் தீவிரமாக அறவழியிலான போராட்டத்தை முன்னெடுப்போம்.
நான்கு நாட்களுக்கு பின்னர் தற்போது நமது மூத்த ஆசிரியர் அமைப்புகளிலும் சமூக வலைதளங்களிலும் அனைத்து செய்தி ஊடகங்களிலும் நமது செய்தி முக்கிய இடம் பெற்று வருகிறது. இந்த வாய்ப்பை சரியாக நாம் பொது மக்களுக்கு கொண்டு சென்று நமது தரப்பு நியாயங்களையும் கொண்டு சென்று முதல்வர் அவர்களிடம் “சம வேலைக்கு சம ஊதியம்” அவர்கள் கொடுத்த வாக்குறுதியை பெற்றே தீர வேண்டும். இதை இறுதி யுத்தமாக மாற்ற வேண்டியது நம் ஒட்டுமொத்த பாதிக்கப்பட்ட அத்தனை ஆசிரியர்களின் தலையாய கடமையாகும்.
ஒரு சில நாட்கள் வேதனையை பார்க்காமல் இனி வரும் காலங்களில் நாம் சந்தோஷமாக வாழ்வதற்கான ஒரு முடிவு கிடைப்பதற்கு நாம் தான் தற்போது களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளி வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் முற்றுகை போராட்ட களத்திற்கு நாளை முதல் வருமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்பதாக இடைநிலை ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப் பிரிவு.