சாப்பாட்டுத் தட்டில் ஒலி எழுப்பி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
சாப்பாட்டுத் தட்டில் ஒலி எழுப்பி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத தமிழக முதல்வரின் காதில் தங்களது கோரிக்கைகள் கேட்க வேண்டும் என்பதற்காக கும்பகோணத்தில் டெல்டா விவசாய சங்கத்தினர் ‘சாப்பிடும் தட்டில்’ ஒலி எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நான்கு மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் வந்திருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார் .
அப்போது விவசாயிகள் தரப்பில் குவிண்டால் நெல்லுக்கு 3500 ரூபாய் வழங்க வேண்டும் ,கரும்புக்கு டன் 4,500 ரூபாய் வழங்கவேண்டும், தோட்டக்கலை விவசாயிகளுக்கு மின் மானியம் வழங்க வேண்டும், விவசாயிகள் மின் இணைப்பு கோரும்போது பொதுப்பணித் துறையினர் தடையில்லாச் சான்றுகளை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது .
கோரிக்கை மனு அளிக்கப்பட்டு 130 நாட்கள் ஆகியும் இது குறித்து இதுவரை வாய் திறக்காத தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் சாப்பிடும் தட்டில் ஒலி எழுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு சாப்பிடும் தட்டில் கரண்டியால் ஒலி எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.