தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்… ஒரே வாரத்தில் 4 உயிர்கள் பலி!
சாத்தூர் அருகே மீண்டும் கோரம்… ஒத்தையாலில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
விருதுநகர்: பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து நிகழும் வெடி விபத்துகள் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் இன்று காலை நிகழ்ந்த வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயசக்தி (55) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் அனுமதியுடன் இயங்கி வரும் இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இன்று காலை பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்களை கலக்கும் பணியில் சுமார் 7 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், மூலப்பொருட்கள் கலக்கும் அறை முழுமையாக சேதமடைந்தது. ஆலையில் நிறுத்தப்பட்டிருந்த மினி சரக்கு வாகனமும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சாத்தூர் தாலுகா போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மாடசாமி உயிரிழப்பு
இந்த கோர விபத்தில் ஒத்தையால் கிராமத்தைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி மாடசாமி (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் சாத்தூர் டிஎஸ்பி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விபத்துக்கான காரணம் குறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே வாரத்தில் 4 உயிர்கள்… தொடரும் சோகம்!
இதற்கிடையே, விருதுநகர் மாவட்டத்தில் இந்த வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து பட்டாசு ஆலை விபத்துகள் நிகழ்ந்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 3-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு பட்டாசு ஆலை விபத்துகளில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூனம்பட்டி பகுதியில் பட்டாசு தயாரிப்புக்கான ரசாயனக் கலவை பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
அதே நாளில், சிவகாசி அருகே சுந்தர்ராஜபுரம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஈஸ்வரன் (56) உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஒத்தையால் பட்டாசு ஆலை விபத்தில் மாடசாமி உயிரிழந்துள்ளதால், இந்த வாரத்தில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
பட்டாசு உற்பத்தியில் முக்கிய மையமாக விளங்கும் விருதுநகர் மாவட்டத்தில், தொழிலாளர்களின் பாதுகாப்பு, ஆலைகளில் பின்பற்றப்படும் விதிமுறைகள், அதிகாரிகளின் கண்காணிப்பு ஆகியவை குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.
விபத்துகள் தொடர்கின்றன… உயிர்கள் பறக்கின்றன… இனியாவது பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுமா?
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.