அரசு உதவிபெறும் கல்லூரிகளை கைகழுவப் பார்க்கிறதா, தமிழக அரசு ?
திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் தாம்பரம் கிளையின் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் பேராசிரியர் பெலிசியா தலைமையில் நடைபெற்றது. இகக் கூட்டத்திற்குச் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் திருச்சி கிளைத் தலைவர் பேராசிரியர் இரவீந்திரன் கலந்து கொண்டார். தாம்பரம் கிளையின் செயலாளர் பேராசிரியர் லாரன்ஸ் மனோகரன் உரையாற்றினார்.
உரையாற்றும்போது,“ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல நல்ல திட்டங்களை அறிவித்துச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. மகளிர் உரிமைத் தொகை, அரசு கல்லூரியில் உயர்கல்வியைத் தொடரும் மாணவ,மாணவியருக்காக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் போன்ற பெண்கள் உரிமை சார்ந்த திட்டங்களைச் சிறப்பாகவே செயல்படுத்தி வருகின்றது. இந்தியாவில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 80%ஐ தாண்டி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது. அரசு கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதனால் குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் உயர்கல்வியைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படிச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மு.க.ஸ்டாலின் அரசு, தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மீது கவனம் கொள்ளாமல் செயல்பட்டு வருகின்றது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணிமேம்பாடு வழங்கப்படவில்லை. இதனால் ஊதிய உயர்வு மறுக்கப்பட்டு வருகின்றது. பணிமேம்பாட்டினால் கிடைக்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையும் வழங்கப்படாத நிலையே உள்ளது. இதற்குக் காரணம் தமிழ்நாடு அரசு, அரசு நிதி உதவிபெறும் கல்லூரிகளுக்கு ஊதியம் மட்டுமே வழங்குகின்றது. அகவிலைப்படி வழங்குகின்றது. மற்றபடி எந்த நிதியையும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு விடுவிப்பதில்லை. இதனால் உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு கொள்ளாமல் தமிழ்நாடு அரசு செயல்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது.
அண்மையில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தனியார் ஒருமைவகைப் பல்கலைக்கழகமாக மாற்றிக் கொள்ளலாம் என்ற ஓர் சட்ட முன்வடிவைச் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுக்கக் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையொட்டி அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் பொறுக்கு குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பது ஆறுதலான செய்தியாகும். தமிழ்நாட்டின் உயர்கல்வியின் வளர்ச்சியில் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் பங்களிப்பு என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரி 180 ஆண்டுகள், புனிதச் சிலுவை பெண்கள் கல்லூரி 103 ஆண்டுகள், தேசியக் கல்லூரி 100 ஆண்டுகள், சீதாலெட்சுமி இராமாசாமி பெண்கள் கல்லூரி 75 ஆண்டுகள் எனப் பழம்பெருமை வாய்ந்தவை.
தமிழ்நாட்டில் சுமார் 60 அரசு கல்லூரிகள் இருக்கும்போது அரசு உதவிபெறும் கல்லூரிகள் 160 எண்ணிக்கையில் இருந்தன. அந்தக் கல்லூரிகள் அரசு கல்லூரிகள் போலவே ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அறிவைப் புகட்டி, பட்டங்களை வழங்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது என்பது மறுக்கமுடியாத வரலாற்று உண்மையாகும். தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்கு இன்றளவும் தொடர்ந்து பாடுபட்டு வரும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் மேம்பாட்டுக்கும், அங்கே பணியாற்றும் ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் பணி மேம்பாட்டுக்கும் தமிழ்நாடு அரசு வழங்கவேண்டிய நிதியைத் தொடர்ந்து வழங்கவேண்டும். அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இந்தப் பணிமேம்பாடுகள் எந்தவிதச் சுணக்கமின்றி வழங்கப்படுகின்றது. அப்படியானால் அரசு உதவிபெறும் கல்லூரிகள் இனித் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகின்றதா? என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சியில் அரசு உதவிபெறும் கல்லூரிகளையும் இணைத்துக்கொண்டால்தான் அது முழுவளர்ச்சியாக இருக்கும் என்பதைத் தமிழ்நாடு அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று உரையை நிறைவு செய்தார்.
நிகழ்வில் பொருளாளர் பேராசிரியர் நெடுஞ்செழியன் 2025 – 26 கணக்குகளை, புதிய பொருளாளர் பேராசிரியர் மகேஸ்வரி அவர்களிடம் ஒப்படைத்தார். இப் பொதுக்குழுக் கூட்டத்திற்கு, சென்னை, பெங்களூர் போன்ற தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் 50க்கம் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விழா இறுதியில் பொருளாளர் பேராசிரியர் நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.