“கங்கை அமரன் தான் எனக்கு காட்ஃபாதர்” — ‘ரெஜினா’ டீஸர் ரிலீஸ் சங்கதிகள்!
யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் ‘பைப்பின் சுவற்றிலே பிரணயம்’ மற்றும் ‘ஸ்டார்’ ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர்.. இவர் ஏற்கனவே “SN Musicals” மூலம் பல சுயாதீன பாடல்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே-30ல் ‘ரெஜினா’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்ற நிலையில், நேற்று (ஜூன்-5) மாலை இந்தப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் சத்யம் (PVR) திரையரங்கில் நடைபெற்றது.
நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, அனந்த் நாக், தீனா கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, அப்பாணி சரத், ரஞ்சன், பசுபதி ராஜ், ஞானவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு பவி K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். டோபி ஜான் படத்தொகுப்பை மேற்கொள்ள, விஜி சதீஷ் நடனம் அமைத்துள்ளார். ஆடை வடிவமைப்பை ஏகன் கவனித்துள்ளார்.
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் வெங்கட்பிரபு, எழில், தயாரிப்பாளர்கள் டி.சிவா, சித்ரா லட்சுமணன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், நடிகர் ஜெயபிரகாஷ், சிவஸ்ரீ சிவா, சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், நடிகர் சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கத்தில் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டன.
இந்த நிகழ்வில் கதாநாயகி சுனைனா பேசும்போது,
“2006ல் என்னுடைய குடும்பத்துடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கின்ற ஒரு சின்னப்பெண்ணாக இருந்தேன். அந்த சமயத்தில் சினிமாவிற்கு வருவேனா என்றெல்லாம் தீர்மானித்து இருக்கவில்லை. அப்போது விடுமுறைக்காக ஹைதராபாத்திற்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது நான் பார்த்த படம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படம். அதற்கு முன்பு நடிகை ஆக வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் சந்திரமுகி. தொடர்ந்து கஜினி உள்ளிட்ட படங்களை பார்த்தபோது, நான் ஒரு தென்னிந்திய மொழி நடிகையாகத்தான் ஆகவேண்டும் என முடிவு செய்தேன்.
அந்த சமயத்தில் எனக்குள்ளே சினிமா குறித்த ஆர்வம் சின்சியாரிட்டி, நேர்மை எல்லாம் இருந்தது. இப்போது வரை அது இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ், இயக்குனர் டொமின் டி சில்வா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரிடமுமே இதே போன்ற ஒற்றுமை இருந்தது. இந்த நிகழ்விற்கு வெங்கட் பிரபு சார் வந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. அவருடைய சரோஜா படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகை. எனக்கு எப்போதெல்லாம் மனதில் வருத்தம் தோன்றுகிறதோ அந்த சமயத்தில் சரோஜா படத்தில் வரும் பிரம்மானந்தம் சார் நடித்த காமெடி காட்சிகளை பார்த்து ரசிப்பேன். நான் மட்டுமல்ல.. என் குடும்பமும் சேர்ந்து தான். இந்தப்படத்திற்காக அதிக அளவில் அன்பையும் உழைப்பையும் கொடுத்துள்ளோம்” என்றார்
தயாரிப்பாளர் சதீஷ் நாயர் பேசும்போது,
“இந்த விழாவிற்கு வர முடியவில்லையே என்று என் அப்பா கோவையில் இருந்து கண்கலங்கினார். இந்தியாவில் நம்பர் டூ பிராண்ட் ஆக இருந்த ஒரு கம்பெனியை எங்களது தாத்தா வைத்திருந்தார். பின்னர் கால மாற்றத்தில் அவையெல்லாம் கைவிட்டுப்போக, நான் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என திட்டமிட்டேன். அதை செய்தும் முடித்தேன்.
எனக்கு படம் பண்ண வேண்டும் என்கிற ஆசை எல்லாம் இல்லை. எனக்கு இசை தான் முதலில்.. அந்த வகையில் கங்கை அமரன் அங்கிள் தான் எனக்கு காட் பாதர். இந்த துறையில் நுழைய அவர்தான் காரணம். நானும் வெங்கட் பிரபுவும் கல்லூரி காலத்திலிருந்து நண்பர்கள். என்னுடைய தயாரிப்பு நிறுவனம், என்னுடைய சேனல், படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இதோ படத்தின் மியூசிக் எல்லாமே வெங்கட் பிரபு தான் ரிலீஸ் செய்தார். அந்த வகையில் வெங்கட் பிரபு இந்த படத்தில் எனக்கு அவரது மறைமுக ஆதரவை தொடர்ந்து தனது பிஸியான நேரத்திலும் கொடுத்து வந்தார்.
சக்தி பிலிம் பேக்டரி மூலமாக இந்த படம் வெளியாவதில் மகிழ்ச்சி. இந்த படத்திற்கு நான் இசையமைக்க போகிறேன் என்று கூறியதும் கங்கை அமரன் அங்கிள், விஜயன் என்பவரை எனக்கு உதவியாக கொடுத்தார். இந்த படத்தில் இடம்பெற்ற குத்துப்பாட்டை எழுதியது என் நண்பர் இஜாஸ் தான். இந்த படத்தில் இடம்பெற்ற சூறாவளி பாட்டு சினிமாவிற்க்காக எழுதப்படவில்லை. எனது மகள் நிரஞ்சனா என் மடியில் அமர்ந்தவாறு கம்போஸ் செய்தார். ஆனால் இன்று அவருடைய தோழியின் பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாடுவதற்காக இந்த விழாவில் கலந்துகொள்ள அவரால் வர இயலவில்லை” என்று கூறினார்.
மேலும் தனது நண்பர் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு ஒரு நினைவு பரிசையும் அவரது தந்தை கங்கை அமரனுக்கு ஒரு நினைவு பரிசையும் இந்த நிகழ்வில் வெங்கட் பிரபுவிடம் வழங்கினார் தயாரிப்பாளர் சதீஷ் நாயர்.
இயக்குனர் வெங்கட் பிரபு பேசும்போது,
“நானும் இந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷும் லண்டனில் கல்லூரியில் படிக்கும்போது இருந்தே நண்பர்கள். ஆனால் அவருக்குள் இசை குறித்து இவ்வளவு ஆர்வம் இருக்கும் என எனக்கு ஒருபோதும் தெரிந்ததில்லை. என்னுடைய அப்பாவுக்கு தெரிந்திருக்கும். பெரும்பாலும் சதீஷ் சீனியர் நண்பர்களுடன் தான் அதிகம் பழகுவார். இந்த கோவிட் காலகட்டத்தில் தான் என்னிடம் இப்படி ஒரு டியூன் பண்ணி இருக்கிறேன் என்று முதன் முதலாக கூறினார். உண்மையிலேயே நன்றாக இருந்தது. ஆச்சர்யமாகவும் இருந்தது. உண்மையில் இவர் தான் பண்ணுகிறாரா.. இல்ல வேறு யாரோ எழுதி இவர் பெயர் போட்டுக் கொள்கிறாரா என்கிற சந்தேகமும் கூட எழுந்தது.
ஆனால் தொடர்ந்து இரண்டு மூன்று பாடல்களை இப்படி அனுப்பியதும் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாரே என மிரண்டு விட்டேன். அதேசமயம் என்னுடைய அப்பாவுடன் இணைந்து தான் ஆல்பத்திற்க்காக முதல் பாடலை எழுதினார். ஆனால் படம் பண்ணும்போது அவரை கூப்பிட மறந்து விட்டார். ( சிரித்தார் ) ஆனால் என் அப்பாவுக்கு சதீஷ் தான் செல்லப்பிள்ளை. கோவை செல்லும் போது சதீஷுடன் தான் நேரத்தை செலவிடுவார்.
இந்த படத்தை இயக்கியுள்ள டொமின் டி’சில்வா தான் சதீஷின் முதல் ஆல்பத்தையும் இயக்கி இருந்தார். ஆனால் இவர்கள் இப்படி ஒரு படம் எடுப்பார்கள் என அப்போது நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட வேண்டும் என என்னிடம் கூறியபோது, இதன் போஸ்டரை பிரித்துப் பார்த்ததுமே அது எனக்கே சவால் விடுவது போல இருந்தது.
அதிலும் சுனைனா இந்த மாதிரி போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் அவர் இதற்கு முன் எப்படி நடித்துள்ளார் என்பது நமக்கு தெரியும். இவர் இப்படி எல்லாம் நடிப்பாரா என ஆச்சரியமாக இருந்தது. இந்த படத்தில் அவருக்கு சவாலான, துணிச்சலான கதாபாத்திரம் தான்.
இந்த படம் குறித்து அவ்வப்போது என்னிடம் தொடர்பு கொண்டு பல சந்தேகங்களை கேட்பார் சதீஷ். நானும் படப்பிடிப்பில் இருந்தாலும் கூட நேரம் ஒதுக்கி அவருக்கு விளக்கம் அளிப்பேன். இந்த படம் வெளியாகும் ஜூன் 23ஆம் பெரிய ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.
மேலும் இந்த நிகழ்வில் விஜய் 68 பட அப்டேட் குறித்து வெங்கட் பிரபுவிடம் கேட்கப்பட்டபோது, “லியோ படம் முதலில் வரட்டும். அதன்பிறகு தளபதி 68 தான். அதற்கு முன் ஏதாவது நான் சொன்னால், எதற்கு ஒவ்வொரு பங்ஷனாக போய் படம் பற்றி பேசுகிறாய் என என்னை திட்டுவார்” என்று அப்டேட் கொடுப்பதில் இருந்து ஜாலியாக எஸ்கேப் ஆனார் வெங்கட் பிரபு.
இதை தொடர்ந்து இசையமைப்பாளர் சதீஷ் நாயர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூறாவளி என்கிற பாடலை லைவ் கான்சர்ட் ஆக மேடையிலேயே வாசித்து ஆச்சரியப்படுத்தினார். பாடகி வந்தனா மற்றும் டாக்டர் அபர்ணா ஆகியோர் பாட, பத்மா அருமையான வயலின் இசையை கொடுத்தார்.
இயக்குனர் டொமின் டி’சில்வா பேசும்போது,
“சதீஷ் சாருடன் ஆரம்பத்தில் மியூசிக் வீடியோவில் இணைந்து பணியாற்றி உள்ளேன். ஆனால் என்னை நம்பி எப்படி இந்த படத்தைக் தயாரித்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. படம் குறித்த விவரங்களை ஒவ்வொரு நாளும் அதிகாலைலயே எனக்கு இ மெயில் பண்ணி விடுவார். நாளை என எதையுமே அவர் தள்ளிப்போட மாட்டார். ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல இந்த படத்தை அவர் அழகாக தயாரித்துள்ளார். தமிழில் நான் இயக்குனராக அறிமுகமாகும் படத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபு சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொண்டது எனக்கு பெருமை” என்று கூறினார்.
இந்த படத்தில் சதீஷ் நாயருக்கு இசைப்பணியில் உறுதுணையாக இருந்து பணியாற்றிய, கங்கை அமரன் குழுவை சேர்ந்த விஜயன் பேசும்போது,
“சதீஷ் சாரின் கிரியேட்டிவிட்டிக்கு எல்லையே கிடையாது, இந்த படத்தில் பாடல்கள் டியூன் போட்டது முதல் அனைத்தையும் உருவாக்கியது அவர்தான். நான் அவர் கொடுத்த விஷயங்களை ஒருங்கிணைக்கும் பணியை மட்டுமே செய்தேன். ஒரு பாடலுக்கு டபுள் பேஸ் மியூசிக் வேண்டும் என்பதற்காக சிங்கப்பூர் சென்று அதை செய்தார். அந்த அளவிற்கு இசை மீது ஆர்வம் கொண்டவர்” என்று பாராட்டினார்.
மேலும் நாயகி சுனைனா நடனக்குழுவினருடன் சேர்ந்து மேடையில் ஒலித்த இசைக்கு ஏற்ப நடனம் ஆடி பார்வையாளர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸும அளித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குனர் வெங்கட் பிரபு, படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களுடன் இணைந்து இந்தப்படத்தின் இசை மற்றும் டிரைலரை வெளியிட்டார்.
வரும் ஜூன்-23ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
-மதுரை மாறன்