அதிகாரிகளின் உத்தரவை மதிக்காத அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் !
அதிகாரிகளின் உத்தரவை மதிக்காத அரசு பேருந்து ஓட்டுநர்கள்!
தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலாகவே, அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில், திருச்சி – பெரம்பலூர் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்துகள் நின்று செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பல ஆண்டுகளாகவே தொடரும் சிக்கலாகவே இருப்பதாக குறிப்பிடுகிறார்கள், பயணிகள்.
திருச்சி – பெரம்பலூர் மார்க்கத்தில், சாதாரண நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. முழுக்க புறநகர் பேருந்து சேவை மட்டுமே. மேலும், இந்த வழித்தடம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால், எதிர்வரும் பேருந்து வழக்கமான பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும் பேருந்துதானா? என்பதை அடையாளம் காணுவதிலேயே சிக்கல் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

மேலும், அவ்வாறு அடையாளம் கண்டுவிட்டாலும் அந்த பேருந்து சாதாரண வகை பேருந்தா, எக்ஸ்பிரஸ் வகை பேருந்தா என்பதை அடையாளம் காணுவதிலும் அடுத்த சிக்கல் இருப்பதாக குறிப்பிடுகிறார்கள். ஏனெனில், பேருந்தின் முகப்பில் எக்ஸ்பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி இருந்தாலும், பல நேரங்களில் சாதாரண பேருந்து செல்லும் நேரத்தில் அந்த பேருந்துகள் சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, எக்ஸ்பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலும் அவை சாதாரண வகை பேருந்தாக இயக்கப்படுவதும்; சாதாரண வகை பேருந்துகள் எக்ஸ்பிரஸ் வகை பேருந்துகளாக இயக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், அந்த குறிப்பிட்ட பேருந்து எந்த வகை பேருந்து என்பதை சாலையில் நிற்கும் பயணிகளால் முன்னரே கணிக்க முடியாத சிக்கல்தான் நீடிக்கிறது.
இதையெல்லாம் கணித்து கை நீட்டினாலும், அரசுப் பேருந்தின் ஓட்டுநர்கள் பயணிகளை நிறுத்தி ஏற்றிச் செல்வதில்லை. அதற்கு அடுத்ததாக வரும் தனியார் பேருந்துக்காக, அரசு பேருந்து வழிவிட்டு செல்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
அதே மார்க்கத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நின்று புளி மூட்டையை போல, பயணிகளை திணித்துக் கொண்டு செல்கிறார்கள். ஆனால், ஒரு சில அரசு பேருந்து ஓட்டுநர்களோ பயணிகளை கண்டும் காணாமல் கடந்து போகிறார்கள்.

புறப்படும் இடத்தில் வழக்கமான நேரத்தில் பேருந்தை எடுத்திருந்தாலும், வரும் வழியில் தனக்கு முன்னே செல்லும் பேருந்து மற்றும் தனக்கு பின்னால் வரும் பேருந்தின் நேரத்தை கணக்கிட்டு அதற்கேற்ப ஒவ்வொரு பேருந்து நிறுத்தமாக நிதானமாக நிறுத்தி தனியார் பேருந்துகள் ஏற்றிச் செல்கின்றன. ஆனால், இதே இடத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்களோ நேரத்துக்கு வண்டியை எடுத்து நேரத்துக்கு அடுத்த பாயிண்டில் நிறுத்தினால் போதும் என்ற மனநிலையில் இயங்கிவருகிறார்கள் என்பதுதான் இதில் மையமான சிக்கலாகவும் இருந்து வருகிறது.
திருச்சி – பெரம்பலூர் மார்க்கத்தில் அடிக்கடி நிகழும் இந்த வகையான சிக்கல் ஒரு உதாரணம் தான். தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக பல்வேறு இடங்களில் இது வேறு வகைகளில் வெளிப்படலாம். அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களின் அலட்சியம் பயணிகள் குறித்த பார்வைதான் மையமான சிக்கலாக இருக்கிறது.
இதற்கு முன்பு ஒருமுறை நமது அங்குசம் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சி மண்டலத்தின் நிர்வாக இயக்குநர் சதீஷ்குமாரின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தோம்.
அதனைத் தொடர்ந்து, அவரது உத்தரவின் அடிப்படையில்
“காலை மற்றும் மாலை நேரங்களில் பீக் ஹவர்சில், எக்ஸ்பிரஸ் வகை பேருந்தாக இருந்தாலும் சரி பயணிகள் கை காட்டினால், பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் காத்திருந்தால் நிறுத்தி ஏற்றிச்செல்ல வேண்டும் என்று அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாக” குறிப்பிடுகிறார், பெரம்பலூர் கிளையின் மேலாளர்.

இன்னும் சொல்லப்போனால், தற்போதைய நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு மாறாக, களத்திற்கு செல்கிறார். காலை 8 மணிக்கும் இரவு 10 மணிக்கும் கூட அவர் பல்வேறு இடங்களில் ஸ்பாட் விசிட் செய்வதை அறிய முடிகிறது.
இதுபோன்று, இந்த விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி, உரிய வழிகாட்டுதல்களை வழங்கிய நிலையிலும் தொடர்கதையாக தொடர்வதை எவ்வாறு புரிந்து கொள்வது?
இதுபோன்ற ஒரு சில அரசு பேருந்து ஓட்டுநர்களால், போக்குவரத்து கழகத்திற்கே அவப்பெயர் ஏற்படுவது மட்டுமல்ல; இதன்வழியே ஆளும் அரசிற்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிடுகிறார்கள் என்பதே உண்மை.
இது வெறுமனே, மெமோ கொடுத்து தண்டனை கொடுப்பதால் தீரும் பிரச்சினை அல்ல. போக்குவரத்து அதிகாரிகளின் அதிகாரத்தால் தீர்த்துவிடக்கூடிய விவகாரமும் அல்ல.
அரசு பேருந்து ஓட்டுநர்கள் – நடத்துநர்கள் மத்தியில் செயல்படும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த சங்கங்களின் ஒத்துழைப்பு இல்லாமல், அவர்களது பங்களிப்பு இல்லாமல் இந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட முடியாது என்பதுதான் நடைமுறை யதார்த்தமாக அமைந்திருக்கிறது.
— வே.தினகரன்
மேலும் படிக்க :
ஒரு அடி வேணாலும் அடிச்சிக்கோங்க – நெகிழ வைத்த அரசு பேருந்து டிரைவர் ! அமைச்சரே தயவு செய்து கவனிங்க….
பொதுத்தேர்வு எழுத தனிப் பேருந்து வசதியா? நன்றி கூறிய அரசு பள்ளி மாணவா்கள்
பொதுத்தேர்வு எழுத தனிப் பேருந்து வசதியா? நன்றி கூறிய அரசு பள்ளி மாணவா்கள்
திருச்சி – பெரம்பலூர் மார்க்கத்தில் … கை காட்டியும் நிற்காமல் பறந்து செல்லும் புறநகர் பேருந்துகள் !
திருச்சி – பெரம்பலூர் மார்க்கத்தில் … கை காட்டியும் நிற்காமல் பறந்து செல்லும் புறநகர் பேருந்துகள் !








Comments are closed, but trackbacks and pingbacks are open.