வாத்தியாருங்களுக்கு வேற வேலையே இல்லையா? குமுறும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!
வாத்தியாருங்களுக்கு வேற வேலையே இல்லையா? குமுறும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!
“கண்ட பணியினை கொடுக்காதே!.. கல்விப் பணியினை கெடுக்காதே! இணையதள இம்சையில் இருந்து விடுதலை செய்! எண்ணும் எழுத்தும் திட்டத்தை மாணவர்களிடம் திணிக்காதே! ஏழை அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி நலனை பாழ்படுத்தாதே!” என்ற கோரிக்கைகளோடு தமிழகம் முழுவதுமுள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி யின் மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி அவர்கள், சமீபத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கைதான் ஆசிரியர் களின் போராட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.
“தேசிய சுகாதார இயக்கம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுடைய உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளை இளம் வயதிலேயே கண்டறிதல் மற்றும் தேவையான மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாக மாணவர்கள் உடல்நலன் சார்ந்த அடிப்படை விவரங்களை தொகுத்து விரைவு நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, வகுப்பு ஆசிரியர்கள் TNSED School App Health and Wellbeing செயலியில் தங்களது EMIS அடையாள எண் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைந்து தங்கள் வகுப்பிற்குரிய மாணவர்கள் உடல்நலன் சார்ந்த அடிப்படை வினாக்களுக்கு உரிய விவரங்கள் பெற்று பதிவு செய்ய வேண்டும்.” என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு போடுகிறது, திட்ட இயக்குநர் ஆர்த்தி அனுப்பிய சுற்றறிக்கை.
“கல்வித்துறையின் நோக்கத்தையோ, ஏழை மாணவர்களின் உடல் நலன் மீதான அரசின் கரிசனத்தையோ நாங்கள் குறை சொல்லவில்லை. மாறாக, மருத்துவ துறை சார்ந்தவர்கள் மேற் கொள்ளப்பட வேண்டிய பணியை, ஆசிரியர்கள் தலையில் சுமத்துவது நியாயமா?” எனக் கேள்வி எழுப்புகிறார்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள். “வாத்தியாருங்கள பாடம் நடத்தவே விட மாட்றாங்க. மாணவர்கள் வருகை, ஆசிரியர் வருகை உள்ளிட்ட பள்ளியின் அன்றாட செயல்பாடுகளை எமிஸ் EMIS இணையதளத்தில் பதிவிட வேண்டும். கல்வித்துறை கோரும், பல்வேறு திட்டங்களுக்கான புள்ளி விபரங்களை அன்றாடம் பதிவிட வேண்டும். கொரோனா காலத்தில் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.
கொரோனா காலம் முடிந்தும், அத் திட்டத்தை விடாமல் பிடித்துக்கொண்டு, பாட்டுப்பாடி ஆடிப்பாடி பசங்களுக்கு கத்துக்கொடுங்கனு சொல்றாங்க. இந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தின்படி பசங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க தேவையான துணைக்கருவிகளை தயாரிப்பதிலேயே ஆசிரியர்கள் சோர்ந்து விடுகிறார்கள். ஓராசிரியர் பள்ளிகளாக இருந்தால் ஐந்து வகுப்பு மாணவர்களையும் ஒரே ஆசிரியர் பார்த்துக் கொள்ள வேண்டும். 1, 2 ,3 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் பணித்திறன் பயிற்சிக்கும் செல்ல வேண்டும். 4,5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிக்கும் அந்த ஆசிரியரே செல்ல வேண்டும். 6, 7, 8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் தனித்தனியாக பள்ளி வேலை நாளில் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு செல்ல வேண்டும். இது இல்லாமல், அவ்வப்போது பயிற்சி கூட்டங்கள் வேறு நடத்துகிறார்கள். மாதம்தோறும் வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்கள் நடத்துகிறார்கள்.
மாநில அரசின் திட்டம், மத்திய அரசின் திட்டம் என்று என்று ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்துவிட்டு, அது ஒவ்வொன்றையும் செயல்படுத்தும் பொறுப்பை ஆசிரியர்கள் தலையிலேயே கட்டிவிடுகிறார்கள். ஆசிரியர்கள் பற்றாக்குறை பற்றி கவலைப்படுவதில்லை. அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு. அதை கண்காணிக்கும் பொறுப்பை, அரசு சாராத தன்னார்வலர்களிடம் வழங்கியிருக்கிறார்கள். பள்ளியின் செயல்பாடுகளை பார்வையிட தொண்டு நிறுவனங்களின் சிறப்பு கருத்தா ளர்கள், தன்னார்வலர்கள் என்று மொத்தத்தில் யார் வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம்; ஆசிரியர்களிடம் எந்தக் கேள்விகள் வேண்டு மானாலும் கேட்கலாம் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். கல்வித்துறையின் இத்தகைய செயல்பாடுகள், ஆசிரியர்களை பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறது. பாதி பேர் இதுபோன்ற சித்திரவதைகளை தாங்க இயலாமல் விருப்ப ஓய்வில் சென்று விட்டார்கள். குறிப்பாக 40, 45 வயதில் பெண் ஆசிரியர்கள் பலர் விருப்ப ஓய்வில் செல்வதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள். பணியிலிருக்கும் ஆசிரியர்கள் நெஞ்சு வலி, மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
கொரோனா காலத்தை விட கல்வித்துறையின் கொடூரகாலத்தில் தற்போது வாழ்ந்து வருகிறோம்.” என ஆசிரியர்கள் சந்தித்து வரும் சிக்கல்களை பட்டியலிடுகிறார், ஐபெட்டோ அமைப்பின் AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) அகில இந்தியச் செயலாளர், வா.அண்ணாமலை. மேலும், ”இந்த இலட்சணத்தில்தான், இருக்கும் சித்திரவதைகள் போதாதென்று, புதியதாக, மருத்துவர் செய்யக்கூடிய பணிகளை ஆசிரியர்களின் தலையில் கட்டியிருக்கிறார்கள். எழுத்து அறிவிக்கும் மதிப்பு வாய்ந்த ஆசிரியர்களை மாணவர்களின் பாதம் தொட்டு, தோள்பட்டை அளவு, இடுப்பு, உயரம், எடை எல்லாவற்றையும் அளவு எடுத்து எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்கள்.
இவைபோன்று, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பட்டியலிட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் என கல்வித்துறை சார்ந்த உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். பார்ப்போம், என்ன முடிவெடுக்கிறார்கள் என்று. அதேசமயம், இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து, தொடக்கப்பள்ளி சார்ந்த 10 சங்கங்களையும் கலந்தாலோசிக்க இருக்கிறோம். கலந்தாலோசனைக் கூட்டத்தில் எட்டப்படும் முடிவைப் பொறுத்து அடுத்தக்கட்ட போராட்ட அறிவிப்பு வெளியாகும்.” என்கிறார், வா.அண்ணாமலை.
– வே.தினகரன்