தமிழ்நாடு : ஆளுநர் Vs முதல்வர் தொடங்கியது அதிகாரப் போர் – வெற்றி யாருக்கு?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாடு : ஆளுநர் Vs முதல்வர்  தொடங்கியது அதிகாரப் போர் – வெற்றி யாருக்கு?

உலகில் எல்லாப் பிரச்சனைகளுக்கும் குறுகிய கால, நீண்ட காலத் தீர்வுகள் என்பது உண்டு. இந்தியாவில் மட்டும் மாநில ஆளுநர்கள் முதல்வர்கள் இடையே பிரச்சனை வந்தால் எந்தத் தீர்வும் கிடையாது. பிரச்சனை அனுமார் வாலாக நீண்டு கொண்டே போகும் என்பதுதான் இதுவரை வரலாறாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆளுநர் இரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் இடையே அதிகாரப் போர் தொடங்கியுள்ளது. இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதை யாராலும் அறுதியிட்டு உறுதியாகக் கூறமுடியாது. காரணம் அதிகாரம் இல்லாத ஆளுநர்கள் அதிகாரம் இருப்பதாக எண்ணிக்கொள்வதே இதற்கு அடிப்படையாகும்.

அங்குசம் இதழ்..

ஆளுனர் - தமிழக முதல்வர்
ஆளுனர் – தமிழக முதல்வர்

உச்சநீதிமன்றம் பல நேரங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்துத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளன. “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல் அமைச்சரின் பரிந்துரையின்பேரில் மட்டுமே ஆளுநர்கள் செயல்பட வேண்டும்” என்று தீர்ப்பு கூறியுள்ளன. ஆளுநர்களின் அதிகார அத்துமீறல் செயல்பாடுகளால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல்பட முடியாத வண்ணம் ஆளுநர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என்பது தொடர்கதையாகவே உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அண்மையில் அமலாக்கத்துறை சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை செய்தார் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஓமாந்தூரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பொறுப்பில் இருந்த மின்சாரத் துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத மந்திரியாகச் செயல்படுவார் என்றும் குறிப்பிட்டப்பட்டிருந்தது. இந்தக் கூடுதல் பொறுப்பு மற்றும் இலாக்கா இல்லாத மந்திரி போன்ற தகவல்கள் தமிழ்நாடு அரசால் ஆளுநர் ஆர்.என்.இரவிக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டது தொடர்பான ஒப்புதல் வழங்க மறுத்து, கோப்பினைத் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்தார். “அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து உண்மை நிலையைத் தமிழக அரசு தெரிவிக்கவில்லை” என்பதே திருப்பி அனுப்பி வைத்ததற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

செந்தில்பாலாஜி மீதான ரைடு
செந்தில்பாலாஜி மீதான ரைடு

திருப்பி அனுப்பிய கோப்பைப் பெற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்,“எந்தப் அமைச்சர் எந்த பொறுப்பை வகிக்கவேண்டும் என்பது முதல் அமைச்சரின் விருப்பம் என்று இந்திய அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ளது. ஆளுநர் இதில் கருத்து தெரிவிக்க அரசியல் சாசனத்தின்படி உரிமை கிடையாது” என்ற குறிப்புடன் ஆளுநருக்குக் கோப்பு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. ஊடகங்களில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,“ஆளுநர் அனுமதி மறுத்தால் தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் பொறுப்புகள் குறித்து அரசாணைகள் வெளியிடப்படும்” என்றார். இதனை அறிந்த ஆளுநர் மாளிகை அவசரஅவசரமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டது. “செந்தில் பாலாஜியின் துறைகள் மற்ற அமைச்சர்களுக்குக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டமைக்கு ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளார். மத்திய அமலாக்கத் துறையின் சார்பில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் கைதியாக உள்ள செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத மந்திரியாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் தார்மீக அடிப்படையில் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்யப்படவேண்டும் என்பதை ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்” என்று கூறப்பட்டிருந்தது.

அமிர்ஷா -கைது
அமிர்ஷா -கைது

குஜராத் மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த தற்போதைய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டபோது, அவர் மந்திரி பதவியிலிருந்து விலகி இலாக்கா இல்லாத மந்திரியாக இருந்தார். வாஜ்பாய் அவர்கள் தலைமை அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது ஒன்றிய அமைச்சர் பொறுப்பிலிருந்த திமுகவின் முரசொலி மாறன் நீண்டநாள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

முரசொலி மாறன்
முரசொலி மாறன்

மரணம் அடையும் வரை முரசொலி மாறன் இலாக்கா இல்லாத மந்திரியாகவே இருந்தார் என்ற வரலாற்று செய்திகளைப் பத்திரிக்கையாளர் கார்த்திகேயன், எஸ்.பி.இலட்சுமண சுட்டி காட்டுகின்றார்கள். “ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை ஏன் இலாக்கா இல்லாத மந்திரியாக வைத்திருக்கவேண்டும். தார்மீக அடிப்படையில் நீக்கச் செய்யவேண்டும்”என்ற கேள்வியை ஊடகங்களில் வலதுசாரி சிந்தனையாளர் இரமேஷ் சேதுராமன் முன்வைத்தார். “செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் குற்றவாளி என்று இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. குற்றவாளி என்று தீர்ப்பு வரும்வரை அவரை அமைச்சர் பொறுப்பில் வைத்திருக்க முதல் அமைச்சருக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜென்ராம்
ஜென்ராம்

தார்மீகம் பற்றி பேச வலதுசாரிகளுக்கு அடிப்படையில் எந்த உரிமையும் கிடையாது. அண்மையில் நடைபெற்ற ஒடிசா இரயில் விபத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று இரயில்வே அமைச்சர் பதவி விலகினாரா? பிரதமர் பதவி நீக்கம் செய்தாரா? எதுவும் நடக்கவில்லை. ஆனால் செந்தில் பாலாஜி மட்டும் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதில் என்ன அறம் இருக்கின்றது” என்று பத்திரிக்கையாளர் ஜென்ராம் பதிலடி கொடுத்தார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இரமேஷ் சேதுராமன்
இரமேஷ் சேதுராமன்

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவைப்படாத, மாநில அரசின் சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவேண்டும். காலம் தாழ்த்தினால் மாநில அரசு அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிட்டுக் கொள்ளலாம் என்ற நடைமுறை உள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது 15% இடங்கள் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, மாநில ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புரோகித் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கைக்கு அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

பத்திரிகையாளர் ஷியாம்
பத்திரிகையாளர் ஷியாம்

ஆளுநரைச் சந்தித்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்,“15% அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அப்போதும் புரோகித் ஒப்புதல் தரவில்லை. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கிய நேரத்தில், ஆளுநர் ஒப்புதல் தர மறுத்த சட்டத்திற்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருந்த அரசு, அதற்கான அரசாணையை வெளியிட்டது. மாணவர் சேர்க்கைக்கு 15% நடைமுறைக்கு வந்தது. அடுத்தநாள் ஆளுநர் புரோகித் வேறு வழியில்லாமல் 15% இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் தந்தார் என்ற வரலாற்றை மதிமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா தி.சாக்ரடீஸ் அங்கும் செய்தி இதழிடம் பகிர்ந்துகொண்டார்.

ஜெ. சசிகலா
ஜெ. சசிகலா

அமைச்சர் நியமனத்தின்போது வேண்டுமானால் மாநில முதல்வரின் கருத்துகளோடு ஆளுநர் முரண்படலாம். பதவி பிரமாணம் செய்து வைக்கமுடியாது என்று ஆளுநர்கள் முரண்டு பிடிக்கலாம். இதற்கும் அரசியல் சாசனத்தில் இடம் இல்லை என்றாலும், கிராமப்புறத்தில் “வாதத்திற்கு மருந்துண்டு, பிடிவாதத்திற்கு மருந்தில்லை என்பார்கள். அதைப்போல ஆளுநர்கள் சில விஷயங்களில் நடந்துகொள்வார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அதிமுக சட்டமன்றக் குழுக் கூட்டத்தில் தலைவராகத் திருமதி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். தான் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தன்னை முதல்வராக நியமனம் செய்து பதவி பிரமாணம் செய்து வைக்கவேண்டும் என்று ஆளுநர் மாளிகை சென்று வேண்டுகோள் கடிதம் கொடுத்தார்.

சி.வித்தியாசாகர் - ஆளுனர்
சி.வித்தியாசாகர் – ஆளுனர்

அந்தக் கடிதத்தை வாங்குவதற்கு மராட்டிய மாநில ஆளுநர் தமிழ்நாட்டின் கூடுதல் ஆளுநர் பொறுப்பில் இருந்த சி.வித்தியாசாகர் ஆளுநர் மாளிகைக்கு வரவில்லை. தொடர்ந்து ஆளுநர் 2 வாரக் காலம் தமிழ்நாட்டிற்கு வருகை தரவேயில்லை. இடையில் உச்சநீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியது.

இதனால் சசிகலா முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்கமுடியாமல் சிறை சென்றார். ஆளுநர் பொறுப்பிலிருந்த சி.வித்தியாசாகர் அரசியல் சாசனத்திற்கு எதிராகச் செயல்பட்டார் என்று அப்போதைய ஊடகங்களில் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டார் என்ற வரலாற்றைத் திருச்சி தி.அன்பழகன் சுட்டிக்காட்டுகின்றார்.

செந்தில் பாலாஜி விஷயத்தில் ஆளுநர் வரம்பு மீறிச் செயல்படுகின்றார் என்ற குற்றச்சாட்டை வலதுசாரிகள், பாஜக, அதிமுக தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் பத்திரிக்கையாளர்களும் வலுவாகக் கூறிவருகின்றனர். கடந்த மே 31ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.இரவி தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடிதத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியைக் கைது செய்ய உள்ளது. சிறையில் தள்ள உள்ளது என்ற அமலாக்கத்துறையின் செய்திகள் எப்படி ஆளுநருக்குத் தெரிந்தது. அப்படியானால் ஆளுநர் அரசியல் சாசனத்தின்படி செயல்படாமல் பாஜக அரசின் ஏஜெண்டாகவே செயல்படுகிறார் என்று பத்திரிக்கையாளர் ஷ்யாம் கூறியுள்ளார்.

அதிமுக அமைச்சர்கள்
அதிமுக அமைச்சர்கள்

மேலும், “ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சென்னா ஆளுநராக இருந்தபோது இருவருக்கிடையேயும் இதுபோன்ற முறுகல் நிலை இருந்தது. ஆளுநர் சென்னாரெட்டி, அப்போதைய அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் உட்பட 8 அமைச்சர்களின் துறை மாற்றங்களுக்கு ஒப்புதல் தராமல் காலம் கடத்தி வந்தார். பொறுத்துப் பார்த்த ஜெயலலிதா அமைச்சர்களின் துறை மாற்றங்களுக்கு அரசாணை வெளியிட்டுச் சென்னாரெட்டியின் முகத்தில் கரியைப் பூசினார்” என்ற கூடுதல் வரலாற்றையும் பத்திரிக்கையாளர் ஷ்யாம் குறிப்பிடுகின்றார்.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் அத்துமீறிச் செயல்படுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். இந்த மோதல் போக்கு எதிர்காலத்தில் தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புண்டு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரம் மிக்க மாநில முதல்வரோடு ஆளுநர் மோதல் போக்கைக் கைவிடவேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறைவேற்றி மாநிலத்தில் அமைதிக்கு வழி செய்வாரா? என்ற எதிர்பார்ப்பே பொதுமக்களிடம் மேலோங்கியுள்ளது.

-ஆதவன் 

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.