முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய எஸ்டிபிஐ கோரிக்கை
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை
விடுதலை செய்ய எஸ்டிபிஐ கோரிக்கை!
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக சிறைகளில் வாடும் ஏறத்தாழ 37 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் வீரப்பனின் கூட்டாளிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
மண்டலத் தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஏறத்தாழ 20லிருந்து 30 ஆண்டுகளைக் கடந்து அவர்கள் அனைவரும் சிறைகளில் வாடுகிறார்கள் எனக் குறிப்பிட்டார்.
15 பேர் உடனடியாக விடுதலை செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. அதற்கு ஆதிநாதன் குழு பரிந்துரைக்கிறது என தமிழக சட்ட அமைச்சர் தமிழக சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறார். ஆனால் இதுவரை எருவம் விடுதலை செய்யப்பட வில்லை. அவர்கள் சிறையில் இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் சட்டத்துக்குப் புறம்பானவை என நெல்லை முபாரக் குற்றஞ்சாட்டினார்.
ஓடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு காரணமான அதிகாரிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். ரயில் விபத்துகளைத் தடுக்கக்கூடிய அந்த கவாச் என்ற அமைப்பு இல்லாததால் இவ்விபத்து நடந்திருக்கிறது. இவ்விபத்திற்கு காரணமான அமைச்சர்கள், அதிகாரிகள் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார் நெல்லை முபாரக்.
டெல்லியில் ஏறத்தாழ ஒரு மாத காலத்தைக் கடந்து போராடிக் கொண்டிருக்கிற, வெளிநாடுகளுக்குச் சென்று ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்று நமது இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த மல்யத்த வீராங்கனைகள், மல்யுத்த சம்மேளன தலைவர் பாஜகவின் எம்.பி. பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள்.
அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவரை இதுவரை கைது செய்யவில்லை.
மாறாக, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இப்பிரச்சினையை உணர்வுப்பூர்வமாக அணுகுவதாகச் சொல்லி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை இப்போது கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்.
இந்தியாவின் தங்க மங்கைகளை இந்தியாவின் பெண்களை இதைவிட மோசமாக எந்த அரசும் கொச்சைப்படுத்த இயலாது. ஓலிம்பிக் சம்மேளனம் இதனைக் கண்டித்திருக்கிறது. உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியா ஒரு பெரிய தலைக்குனிவை சந்தித்து இருக்கிறது.
எனவே இவ்விஷயத்தை உணர்வுப்பூர்வமாக அணுகுவதைவிட இதற்கு காரணமான பிரிட்ஜ் பூஷன் சிங்கின் பதவியை ரத்துச் செய்ய வேண்டும். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். எமது கண்ணியத்திற்குரிய வீராங்கனைகளின் மானம் காப்பாற்றப்பட வேண்டும்.
இதை வலியுறுத்தி இந்தியா முழுவதும் எஸ்டிபிஐ கட்சி கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகிறது. அவர்களது போராட்டத்தை நாங்கள் இப்போது ஆதரிக்கிறோம் என்றார் நெல்லை முபாரக்.