மூதாட்டியை கொ*ற பேரன் ! CCTV யில் சிக்கிய ஆதாரம் !
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியத்திருக்கோணம் கிராமத்தில் கடந்த 20.03.2026 அன்று ராஜலட்சுமி (வயது 72) க/பெ துரைசாமி என்பவர் வீட்டிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.மேலும் அவர் கையில் இருந்த வளையல் ஒன்று மற்றும் பீரோவில் இருந்த நகைகள் என 17 1/2 சவரன் நகைகள் கொள்ளை போனது. இச்சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் 20.03.2026 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., உத்தரவின்படி, ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் தினேஷ்குமார் மேற்பார்வையில், விக்கிரமங்கலம் காவல் ஆய்வாளர் கருணாகரன் , ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையின் அடிப்படையில் இறந்து போன ராஜலட்சுமிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். தனது கணவர் இறப்புக்கு பின்னர் ராஜலட்சுமி கடந்த 25 ஆண்டுகளாக உள்ளூரில் உள்ள தனது அண்ணன் ராஜாஜி வீட்டில் வசித்து வந்த நிலையில், 20.03.2026 சம்பவத்தன்று தன் பாட்டி ராஜலட்சுமியை தவிர மற்ற அனைவரும் திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் என்பதை அறிந்த,மேலப்பழூவூர் கிராமத்தில் வசித்து வரும் ராஜலட்சுமி இரண்டாவது மகளான சரோஜாவின் மகன் தினேஷ்குமார் (வயது 29) மற்றும் அவருடைய நண்பர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சடையன் மகன் சசிக்குமார் (வயது 27) என்பவருடன் இணைந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டி பெரியதிருக்கோணத்தில் உள்ள தன் பாட்டி ராஜலட்சுமி வசிக்கும் வீட்டிற்கு வந்து, தனியாக இருந்த ராஜலட்சுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த வளையல் ஒன்று மற்றும் பீரோவில் இருந்த நகைகள் என சுமார் 17 1/2 சவரன் நகைகள் கொள்ளையடித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே இந்த வழக்கானது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு, இக்குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவரையும் விக்கிரமங்கலம் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 17 1/2 சவரன் நகைகள் மற்றும் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்தனர். மேலும் கொலையாளிகள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் இவ்வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிசிடிவி கேமரா பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது. எனவே பொதுமக்கள் மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமராவை பொருத்தி உங்கள் பாதுகாப்பினை உறுதி செய்திட மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.