“எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை, அங்கீகாரம்” – ‘கூழாங்கல்’ பிரஸ்மீட்டில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி !
“எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை, அங்கீகாரம்” – ‘கூழாங்கல்’ பிரஸ்மீட்டில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி !
நயன்தாரா- விக்னேஷ்சிவனின் ரெளடி பிக்சர்ஸ் வழங்கும் அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்ஜர் ராஜா இசையில் ‘கூழாங்கல்’ படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி நேரடியாக வெளியாகி இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.
இயக்குநரும் தயாரிப்பாளருமான விக்னேஷ்சிவன், “’ரெளடி பிக்சர்ஸ்’ என்ற பேனரை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த போது நாங்கள் எடுத்த முதல் படம் ‘கூழாங்கல்’தான். இயக்குநர் ராம் சார் என் குரு போன்றவர். அவர் தான் இந்தப் படம் குறித்து என்னிடம் கூறினார். இந்தப் படம் பார்த்ததும் எங்களுக்கும் பிடித்திருந்தது. உலகளவில் பல திரைப்பட விருது விழாக்களில் பார்வையாளர்களுக்குத் திரையிட்ட போது அவர்களுக்குப் பிடித்திருந்தது. எங்களுக்கு அதிக பெருமையை ஈட்டிக் கொடுத்தப் படம் இது.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக எங்களின் முதல் படம் தேர்வாகி இருந்ததன் மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது. அதேபோல, ஸ்பிரிட் அவார்டிலும் இந்தப் படம் நாமினேட் ஆனது. இப்படி பலவற்றை இந்தப் படம் சாதித்துக் கொடுத்தது. எங்கள் முதல் படத்திற்கே இத்தனை அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பது பெருமை. இதை உருவாக்கிய இயக்குநர் வினோத்திற்கும், படத்தில் நடித்த கருத்தடையான், செல்லபாண்டி ஆகியோருக்கும் நன்றி. பல திரைப்பட விருது விழாக்களுக்கும் சென்ற பிறகே வெளியிட வேண்டும் என முடிவு செய்திருந்தோம்.
திரையரங்கில் வெளியிட வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், அதற்கான நேரம் தாண்டி போய்க் கொண்டே இருந்ததால் சோனி லிவ் ஓடிடியில் இப்போது வெளியிடுகிறோம். மிகப்பெரிய இயக்குநர்கள், நடிகர்களின் அறிமுகம் கிடைக்கவும் இந்தப் படம் உதவியது. இதை சாத்தியப்படுத்திக் கொடுத்த இயக்குநர் வினோத்திற்கு நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும்” என்றார்.
இயக்குநர் வினோத்ராஜ் பேசியதாவது, “’கூழாங்கல்’ படத்தை முடித்து விட்டு அடுத்து இதை எப்படி எடுத்து செல்லலாம் என பார்த்துக் கொண்டிருந்தபோது, ராம் அண்ணன் கோவா திரைப்பட விழாவில் படத்தைப் பார்த்துவிட்டு ஊக்கப்படுத்தி எங்களை நயன் மேம் விக்னேஷ் சிவன் சாரிடம் அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கும் படம் பிடித்துப் போய் பல உயரங்களுக்கு ‘கூழாங்கல்’லை எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கும் என் படக்குழுவினருக்கும் நன்றி. படம் பார்த்து விட்டு நீங்கள் என்ன கருத்து சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறோம். நன்றி!” என்றார்.