குட்கா கடத்தல் திருச்சி பாஜ.க நிர்வாகி கைது
குட்கா கடத்தல் திருச்சி பாஜ.க நிர்வாகி கைது
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே வட இந்தியாவில் இருந்து ரயில்கள் மூலம் போதை பொருட்கள் கடத்திவரப்பட்டு தமிழகம் முழுவதும் ரவுடிகள் உதவியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதை மோப்பம் பிடித்த தமிழக போலிஸ் தொடர்ச்சியாக போதை பொருட்கள் கடத்தலை தடுப்பதற்கு கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
துறையூரில் தேர்தல் பறக்கும் படையினர் பாஜ.க நிர்வாகி எடுத்துச் சென்ற சுமார் 4கிலோ குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒப்படைத்ததின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
நிஜாமுதீனில் இருந்து மதுரை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில், செகந்திராபாத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 09.02.2022 அன்று திருச்சி வந்தபோது அதில் ஏறி ரெயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது ராமேஸ்வரம் சென்ற ரெயிலில் கதவு ஓரம் இருந்த வெள்ளை நிற பையில் 11 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை கடத்தி வந்தது யார்? என தெரியவில்லை.
அவற்றை பறிமுதல் செய்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.35 ஆயிரத்து 500 இருக்கும் என தெரிகிறது.
இந்த நிலையில் துறையூர் பாலக்கரை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட 4 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் எடுத்துச் சென்றது தெரிந்தது. விசாரணையில் ஒ. கிருஷ்ணாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் செந்தில்குமார் (37) என்றும் இவர் பாஜக வில் திருச்சி புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ளதும் தெரிந்தது. குட்கா, புகையிலை பொருட்கள் டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் துறையூர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனர்.
- ஜோஸ்