அங்குசம் பார்வையில் ‘ஹைக்கூ’
தயாரிப்பு:’ விஷன் சினிமா ஹவுஸ்’ டாக்டர்.டி.அருளானந்து& மேத்யூ அருளானந்து, டைரக்டர்: யுவராஜ் சின்னசாமி, ஆர்டிஸ்ட்: ஏகன், ஸ்ரீதேவி அப்பல்லா, ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன், ஆதிரா லட்சுமி, எக்ஸ்கியூட்டிவ் புரொடியூஸர்: ஏகன், கூடுதல் திரைக்கதை: ஹரிகிருஷ்ணன் ராம், ஒளிப்பதிவு: பிரியேஷ் குருசாமி, இசை: சித்து குமார், எடிட்டிங்: சக்தி பிரணேஷ், காஸ்ட்யூம்: தினேஷ் மனோகரன், கமலி கனகராஜ், பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்.
கோவை இன்ஜியரிங் காலேஜில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மனோகர்[ஏகன்] ஒரு பிரச்சனைக்காக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இவரின் அப்பா [மைம் கோபி சலூன் கடை வைத்திருக்கிறார். அம்மா இந்துமதி மணிகண்டன் குடும்பத் தலைவி. அம்மா-அப்பாவுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்பதற்காக பல காலேஜ்களில் முயற்சித்தும் சீட் கிடைக்காமல், அதுவரை பெண்கள் காலேஜாக மட்டும் இருந்து, இருபாலரும் படிக்கும் காலேஜாக மாற்றப்பட்ட ஆண்டில் முதல் மாணவனாக சேர்கிறார் மனோகர்.
அங்கே தான் கொடியை [ஸ்ரீதேவி அப்பல்லா]சந்திக்கிறார். வகுப்பறையில் கொடியின் செல்போன் அடிக்க, லேடி புரொபசரின் விசாரணையில் தனது செல்போன் தான் என மனோ ஏற்றுக் கொண்டதால், மனோவின் மீது லவ்வாகிறார் கொடி. புது செல்போனும் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால் தினமும் காலேஜுக்கு கொடியை வண்டியில் கொண்டு வந்து இறக்கிவிடும் கொடியின் அப்பாவோ அடாவடி பேர்வழி. இதையும் மீறி இருவரும் லவ் பண்ணுகிறார்கள். படிப்பு முடிந்து சென்னையில் வேலைக்குச் சேர்கிறார் மனோ. ஒரு சின்ன சம்பவத்தில் கொடி மீது லைட்டாக சந்தேகப்படுகிறார் மனோ. இதனால் இருவரின் காதலில் விரிசல் விழுகிறது. வேறொருவனை கல்யாணம் பண்ணுகிறார் கொடி.
லவ்வில் விரிசல் விழுந்ததற்கான காரணம் என்ன? அதன் பிறகு மனோவின் மனநிலை என்ன? இதான் இந்த ‘ஹைக்கூ’.
முதலில் ஒரு பெண்ணை லவ் பண்ணுவது, அந்த லவ் புட்டுக்கிட்டதும் தாடி வளர்ப்பது, தண்ணி அடிப்பது, நடுரோட்டில் நின்னுக்கிட்டு சோகப்பாட்டு பாடுவது, விரும்புனவ கிடைக்கலேன்னதும் விஷம் குடிச்சு சாவது இதையெல்லாம் இத்தனை வருஷ தமிழ் சினிமாவுல பார்த்த்திருக்கோம். இதெல்லாம் இல்லாமல் இருப்பது தான் இந்த ‘ஹைக்கூ’வின் ஸ்பெஷல்.
ஆனால் சீன்களில் எந்த ஃப்ரெஷ்னஸும் இல்லாமல் இருப்பது தான் இந்த ‘ஹைக்கூ’வின் வீக்னெஸ். ஹீரோ ஏகன் தன்னால் முடிந்த வரை சமாளித்து திரையில் நடிப்பை கொண்டு வந்துள்ளார். சில சீன்களில் கொஞ்சம் தடுமாறியிருப்பதும் திரையில் நன்றாகத் தெரிகிறது. இன்னும் கூடுதல் முயற்சியும் நல்ல பயிற்சியும் எடுத்தால், எல்லோரும் விரும்பும் ஹீரோவாக ஏகன் வருவதற்கு ஏகப்பட்ட வாய்ப்பு இருக்கு. வேலைபார்க்கும் இடத்தில் செம ஸ்மார்ட்டாக இருக்கும் ஏகன், காலேஜில் படிக்கும் போது பரட்டைத் தலையும் தாடியுமாக ஏன் இருக்கார்னு தெரியல. ஒருவேளை இந்தக் காலத்து காலேஜ் பயலுக அப்படித்தான் இருக்காய்ங்கன்னு நினைச்சுட்டாரு போல. இந்த கெட்டப்பெல்லாம் ரவுடி ஸ்டூண்ட்டுக்கு ஓகே. ஹீரோவுக்கு சரிப்பட்டு வராது ப்ரோ.
ஏகன் வேலை பார்க்கும் இடத்தில் இண்டென்ஷிப்புக்காக வந்து சேரும் நிவேதா [ஃபெமினா ஜார்ஜ்]வுக்கு ஒரு லவ்வர். அவனும் இவளை புரொடக்ட் பண்ணுவதாக நினைத்து சந்தேகப்பட்டு அடித்துத் துன்புறுத்துகிறான். அப்போது ஆறுதல் சொல்லும் ஏகன் மீது ஃபெமினாவுக்கு லவ் அஃபெக்ஷன் ஆகிறது. இருவரும் லிவிங்டுகெதர் ஸ்டைலில் வாழ்கிறார்கள். ஒரு நாள் சரக்கு போதையில் இருக்கும் போது ஸ்ரீதேவியின் பெயரை வாய்குழறி சொல்கிறார் ஏகன். இதனால் அதிர்ச்சியாகும் ஃபெமினா, ஸ்ரீதேவியைச் சந்தித்து, ஏகனுடன் என்ன பிரச்சனை? என விசாரித்துஅதிர்ச்சியாகிறார். இப்போது ஏகனுக்கும் ஃபெமினாவுக்குமிடையே பிரச்சனை ஆரம்பிக்குது. இந்த இருவருமாவது இணைந்தார்களா?
இப்படியே க்ளைமாக்ஸ் வரை சுவாரஸ்யமாக கொண்டு போய் தித்திப்பாய் முடித்திருக்கிறார் டைரக்டர் யுவராஜ் சின்னச்சாமி. என்ன ஒண்ணு, இரண்டேகால் மணி நேரப்படத்துல மிஞ்சிப்போனா அரை மணி நேரம்தான் மூன்று கேரக்டர்களான ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஆகியோர் நின்னு நிதானமாகப் பேசுகிறார்கள். மற்றதெல்லாம் மாண்டேஜ் மாதிரி தான் இருக்கு. ஒன்லி லேடீஸ் காலேஜில் ஏகன் எண்ட்ரியான பிறகு எவ்வளவு கலர்ஃபுல்லா, ஜிலுஜிலுன்னு சீன்களை கொண்டு போயிருக்கணும்? ஆனா எல்லாத்தையும் டைரக்டர் மிஸ் பண்ணியது ஏகனுக்கும் நமக்கும் ஏமாற்றம் தான்.
இடைவேளை வரை ஸ்ரீதேவி அப்பல்லாவும் இதற்குப் பின் ஃபெமினாவும் ஸ்கிரீன் பெர்ஃபாமென்ஸுக்கு சம போட்டியாளர்களாக இருந்தாலும் முக வசீகரத்தில் ஸ்ரீதேவி மனம் கவர்கிறார். இவர்களுக்கு அடுத்து மனம் கவர்கிறார்கள், ஸ்ரீதேவியின் காலேஜ் தோழியாக வந்து ஏகனை தியேடரில் கலாய்க்கும் அந்த இளம் பெண்ணும், ஃபெமினாவுக்கு உற்ற துணையாக இருந்து நல்ல ஆலோசனை சொல்லும் அந்த இளம் பெண்ணும். [ இருவரின் பெயரும் நமக்குத் தெரியலங்கிறதுக்காக ஸாரி மக்களே].
படம் கொஞ்சம் டல்லடிக்கும் போதெல்லாம் பூஸ்ட் ஏத்துகிறார் மியூசிக் டைரக்டர் சித்துகுமார். குறிப்பாக மெலோடிகளில் வைப் ஏத்துகிறார்.
‘ஹைக்கூ’ தலைப்புக்கேத்த மாதிரி நச்சுன்னு வசீகரிக்கவில்லை என்றாலும் விரும்பத்தக்கது.
அங்குசம் பார்வையில் ‘ஹைக்கூ’ 49/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.