ஹான்ஸ் பான்பராக் போதை பாக்கு வியாபாரம் – தாறுமாறான வங்கி பரிமாற்றம் – தம்பியால் சிக்கலில் பிரபல செய்தி சேனலின் செய்தி ஆசிரியர் !
ஹான்ஸ் பான்பராக் போதை பாக்கு வியாபாரம் – தாறுமாறான வங்கி பரிமாற்றம் – தம்பியால் சிக்கலில் பிரபல செய்தி சேனலின் செய்தி ஆசிரியர் !
தமிழகம் முழுவதுமே கஞ்சா உள்ளிட்டபோதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கண்டிப்பு காட்டி வந்தாலும், கள்ளச் சந்தையில் போதை பொருட்களின் விற்பணை கட்டுப்படுத்த முடியாத நிலைதான் நீடிக்கிறது.
இன்னும் சொல்லப்போனால், எந்தளவுக்கு போலீசின் கெடுபடி அதிகமாகிறதோ, அந்தளவுக்கு போதை பொருட்களின் விலை உயர்த்தி விற்கப்படுகிறது. ஹைடெக் போதை பொருட்களாக கருதப்பட்ட ஹெராயின், கோகைன், கஞ்சா, கஞ்சா ஆயில் இதெல்லாம் இன்று சர்வ சாதாரணமாக குக்கிராமத்திலும் கிடைக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஸ்விக்கு, சோமேட்டோ போல இதற்கென்று தனியே ஆப் உருவாக்கி விற்பணை செய்வது என்றளவில் விரிவடைந்திருக்கிறது.
இதுவொருபுறமிருக்க, சித்தாள் கொத்தனாரிலிருந்து அரசு ஊழியர்கள் வரையிலான நபர்களிடம் ஹான்ஸ், பான்பராக், கூலிப் போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கமும் தொடரத்தான் செய்கிறது. என்னதான் தடை என்றாலும், எங்கு கிடைக்கும் என்று தேடிச்சென்று, பங்கு சந்தையைப் போல, அன்றைய நாளில் அவன் என்ன விலை சொன்னாலும் வாங்கி வந்து பயன்படுத்தத்தான் செய்கின்றனர்.
சரி விசயத்துக்கு வருவோம். திருச்சி மாவட்டத்தில் மிக சமீபத்தில், திருவெறும்பூர் அருகேயுள்ள சோழமாதேவி பகுதியில் ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி விற்பணையில் ஈடுபட்டுவந்த அசரப் அலி என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்திருந்தனர்.
எஸ்.ஐ.வினோத்குமார் தலைமையில், எஸ்.எஸ்.ஐ. வேலு அழகன், காவலர்கள் இளையராஜா, அறிவழகன் ஆகியோரை கொண்ட தனிப்படை போலீசார் அதிரடியாக செயல்பட்டு, சுமார் 182 கிலோ எடையுள்ள ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். அசரப் அலி கொடுத்த தகவலின் அடிப்படையில், மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த தஞ்சை பாபநாசம் அருகே உள்ள பசுபதி கோவிலை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை அடுத்து கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள், இரண்டு செல்போன்கள் மற்றும் 28 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றோடு அவ்விரு குற்றவாளிகளையும் நவல்பட்டு போலீசாரிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்துள்ளனர். நவல்பட்டு போலீசாரும் இவ்விருவர் மீதும் உரிய வழக்குகள் பதிவு செய்து சிறையிலடைத்துள்ளனர்.
இதெல்லாம் போலீசாரின் வழக்கமான நடவடிக்கைகள்தானே, இதில் என்ன இருக்கிறது என நினைக்கிறீர்களா? ஆம், இருக்கிறது. இதற்குப்பிறகுதான் செய்தியே ஆரம்பமாகிறது.
கஞ்சா விற்றவனுக்கும் போதை பொருள் கடத்தியவனுக்கும் ஆதரவாக ஒரு அரசியல்வாதி போலீசாரிடம் சமரசம் பேச வருகிறார் என்றால் கூட, அதையும் சகஜமான ஒன்று என்று கடந்து சென்றுவிடலாம். தமிழகத்தின் பிரபலமான செய்தி சேனல் ஒன்றின் செய்தி ஆசிரியராக இருக்கும் நபர் ஒருவரே, நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார் என்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
போதை பொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், செய்தி ஆசிரியர் தலையீடு செய்தாரா? என்ற கேள்வியோடு, தனிப்படையின் பொறுப்பு அதிகாரி எஸ்.ஐ.வினோத்குமார் அவர்களை தொடர்புகொண்டோம். ”எங்களுக்கு கிடைத்த தகவலை ஃபாலோ செய்து குற்றவாளிகளையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நவல்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்ததோடு எங்களது கடமை முடிந்தது. நாங்கள் அவர்களிடம் ஒப்படைக்கும் வரையில் என்னிடம் யாரும் அவ்வாறு பேசவில்லை.” என்கிறார்.
நவல்பட்டு இன்ஸ்பெக்டர் குமார் அவர்களை தொடர்புகொண்டோம். விசயத்தை ஆரம்பித்ததுமே, “யார் வேனும். ராங் நம்பர்” என்று இணைப்பை தடாலடியாக துண்டித்துவிட்டார்.
திருவெறும்பூர் டி.எஸ்.பி. அறிவழகன் அவர்களை தொடர்புகொண்டோம். கேள்வியை கேட்டதும் கோபப்பட்டவர், “அந்த மாதிரி தலையீடு எதுவுமில்லை. அப்படி இருந்தால், அவர்கள் இருவரையும் ரிமாண்ட் செய்திருப்போமா?” என்று நம்மையே எதிர்கேள்வி கேட்டவர், “திருச்சி எஸ்.பி. இந்த விசயத்தில் மிக கண்டிப்புடன் இருக்கிறார். எங்கிருந்து எந்த தலையீடு வந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க சொல்லியிருக்கிறார்.
அதன்படிதான் நாங்களும் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்து வருகிறோம்.” என்றார்.
திருச்சி எஸ்.பி வருண் குமார் வழக்கம் போலவே, இந்தமுறையும் நமது அழைப்பை ஏற்று பேசவில்லை. வாட்சப்பில் கேள்வியை முன்வைத்திருக்கிறோம். அதற்கும் இதுவரை பதிலில்லை.
மளிகை கடை நடத்தி வரும் விக்னேஸ்வரன் கடந்த மூன்றாண்டுகளாகவே, மளிகை கடை வியாபாரத்தோடு இந்தத் தொழிலையும் சேர்த்து பார்த்து வந்திருக்கிறார். 15 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் பண்டல் ஒன்றை விற்பணை செய்தால் ரூ.4000; 7 கிலோ எடை கொண்ட விமல் பாக்கு விற்றால் ரூ 5000 – 6000 ; அதிகபட்சமாக ’கூலிப்’ ஒரு பாக்கெட் விற்றால் ரூ8000 வரை இலாபம் கிடைக்கும் என்கிறார்கள்.
போலீசு கெடுபிடி, மார்க்கெட்டில் செம டிமாண்ட் என சூழலுக்கு ஏற்ப இவர்கள் நிர்ணயிப்பதுதான் விலை என்கிறார்கள். இதில் ருசி கண்ட விக்னேஸ்வரன் இடையில் மூன்று முறை வழக்கில் சிக்கியிருந்தாலும் விடாமல் தொடர்ந்திருக்கிறார். தற்போது, வகையாய் சிக்கிவிட்டார் என்கிறார்கள்.
விக்னேஸ்வரனின் உடன் பிறந்த சகோதர்தான், அந்த முன்னணி செய்தி சேனலின் ஆசிரியர் என்கிறார்கள். விக்னேஸ்வரனின் வங்கிக் கணக்கில் சகட்டு மேனிக்கு குறுக்கும் நெடுக்குமாக பல இலட்சங்கள் பண பரிவர்த்தனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். முதல் கட்டமாக அந்த வங்கி கணக்கை முடக்கியிருக்கிறார்கள். இந்த பண பரிவர்த்தனைகளை தோண்ட ஆரம்பித்தால், செய்தி ஆசிரியர் என்ற பெயரில் தான் நடத்திய ’வியாபார டீலிங்’களும் அம்பலமாகிவிடும் என்பதால் தான், தம்பி விசயத்தில் அண்ணன் அளவுக்கு அதிகமாக ஆர்வம் காட்டியதாகவும் இப்போ அவருக்கே அது பெரிய சிக்கலில் சிக்க வைத்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். போலீசார்தான், இதெற்கெல்லாம் விடை சொல்ல வேண்டும்!
– ஆதிரன்.