இலக்கிய புரவலர் எஸ்.என்.எம். உபயதுல்லாவுக்கு இதய அஞ்சலி !
இலக்கிய புரவலருக்கு இதய அஞ்சலி!
சமகாலத்தில் தஞ்சையின் ஆகச் சிறந்த அரசியல், கலை இலக்கிய ஆளுமைகளில் ஒருவர் எஸ்.என்.எம். உபயதுல்லா. கடந்த 19.2.2023 அன்று தஞ்சையில் அவர் இயற்கை எய்தி விட்டார். ராமநாதபுரம் மாவட்டம் அபிராமபுரம் கிராமத்தில் 1941ல் பிறந்தவர். பின்னர் அவர்களது குடும்பம் தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்து வந்து விடுகிறது. அவரது இளம் பருவத்தில் இருந்தே திராவிட முன்னேற்றக் கழகம் எனும் இயக்கத்தின் மீது பெரும் ஈர்ப்பு. 1962ல் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி தேர்தலில் தி.மு.கழகம் சார்பாகக் கலைஞர் போட்டியிடுகிறார். அப்போது உபயதுல்லாவுக்கு வயது 21. அந்தத் தேர்தலில் வெற்றிக்காக அரும்பாடுபட்டவர்களில் ஒருவர் உபயதுல்லா.
அப்போதே கலைஞரின் இதயத்தில் இடம் பிடித்துவிட்டார் அவர். 27ஆண்டுகளாக திமு.க.வின் தஞ்சை நகரச் செயலாளராகத் தொடர்ந்து இயங்கிய வர். சட்டமன்றத் தேர்தல்களில் 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2006 – 2011ல் தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறை அமைச்ச ராகவும் பணியாற்றியவர். தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் 2020ல் கலைஞர் விருது பெற்றவர். தமிழ் மொழி இலக்கியம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காகச் சிறப்பாகப் பணியாற்றியதால் அரசு விழாவில் 2022ல் பேரறிஞர் அண்ணா விருது பெற்றவர்.
“எப்போதும் புன்னகை. மேடைக்குக் கீழே முன் வரிசையில் இருக்கை. மேடையின் பேச்சில் கூர்ந்திருப்பார். நல்ல பேச்சுக்கு தலையசைப்பார். மேடைக்கு அழைத்தால் மறுத்து விடுவார். பேசுவோர் முரணை மெல்ல உரைத்திடுவார் பிறர் அறிந்திடாதவாறு. அரசியல் களம் தான் அவரென்றாலும் எதிலும் ஆழ்ந்து வாசிப்பார். அதையே அழகாகப் பேசுவார். சுட்டுதல், குட்டுதல், தட்டுதல் செய்வார் இனிய உளவாக. இலக்கிய விருட்சங்களை .எங்கும் வளர்த்து ஏற்றமுரைத்தவர். அண்ணாவென்றும் அய்யாவென்றும் நாங்கள் அழைப்போம். சிரித்திடுவார். எல்லாம் போயின இயமன் கைப்பிடிக்குள். இன்று நீங்கள். நாளை நாங்கள். வேறென்ன அய்யாவே.” என்று மனம் கலங்கிக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் தஞ்சாவூர் ஹரணி.
“மனித நேயம் மிக்க மாண்பாளர். உபயதுல்லா அவர்களின் மறைவு பேரிழப்பாகும். கனிந்த பார்வையாளர். இனிய சொல்லர். ஆன்றவிந்த கொள்கைச் சான்றோர். சமய நல்லிணக்கம் போற்றிய பண்பாளர். குறள்நெறிச் செல்வர். தஞ்சையின் தமிழ் அமைப்புகளுக்கு அவர் உள்ளம் தான் ஒரு சரணாலயம். திருக்குறள் நெறி பரப்பிய நேசர். எப்போதும் புத்தகங்களுடன் பயணித்தவர். தஞ்சை முத்தமிழ் மன்றத்தின் தலைவர். தஞ்சை தமிழிசை மன்றத்தின் நிறுவனர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் உலகத் திருக்குறள் பேரவையின் துணைத் தலைவர். இப்படி பல்வேறு பொறுப்புகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தஞ்சைத் தரணியின் இலக்கிய வீதி அன்னாரை இழந்து விட்ட சோகத்தில் மூழ்கியுள்ளது.” எனச் சொல்கிறார் உலகத் திருக்குறள் பேரவையின் துணைத் தலைவர் திருச்சி “
“சம காலத்தில் அரசியல் முகம் கொண்டும் இந்தளவுக்கு ஒரு கலை இலக்கியப் புரவலர், திருக்குறள் வாழ்நெறிச் சிந்தனைகளே அவருக்கு வேதம் போல, தான் பேசுகின்ற மேடைகளில் எதிரொலித்தவர். தஞ்சை மண்ணில் தமிழ் இலக்கிய அமைப்புகளுக்கு அவரது விசாலமான மனம் தான் தாய் வீடு. தஞ்சையில் அவரது முரசு புத்தக நிலையத்தில், வேறெங்கும் கிடைக்காத புத்தகங்கள் கூட வாசகர்களுக்கு அங்கே கிடைக்கும். அந்தளவுக்குப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படிப்பார். தேடித் தேடி புத்தகங்களைத் தமது முரசு புத்தக நிலையத்துக்கு வாங்கி வருவார்.
தஞ்சையில் முத்தமிழ் இலக்கிய முற்றம் நடத்தியவர். இலக்கிய அமைப்புகளுக்கும் அதன் நிகழ்ச்சிகளுக்கும் வெளியே தெரியாமல் நிதியுதவி அள்ளித் தந்துள்ளவர். கம்பனுக்கு ஒரு சடையப்ப வள்ளல் போல, தஞ்சை தமிழ் அமைப்புகளுக்கு ஒரு உபயதுல்லா என்றால் அது மிகையல்ல. தமிழ் அமைப்புகளுக்கும் தமிழ் மொழி ஆர்வலர்களுக்கும் ஒரு ஒளி வட்டமாகத் திகழ்ந்தவர். பொதுவுடமைப் பூங்காற்று தோழர் ஜீவா அவர்களின் வார்த்தைகளைத் தயங்காமல் மேற்கோள்காட்டி உரையாற்றியவர்.
எந்தக் கூட்டத்திலும் அவர் இலக்கியம் கலக்காமல் பேச மாட்டார். அவரது நினைவாகத் தஞ்சையில் அவரது பெயரில் ஒரு நூலகம் அமைத்திட வேண்டும் தமிழ்நாடு அரசு. அதற்கு அரசியல் உணர்வுகள் கடந்து ஏகோபித்த ஆதரவு தஞ்சை மண்ணில் உண்டு.” என்று கோரிக்கையும் வைக்கிறார் தஞ்சாவூர் வழக்கறிஞர் வெ. ஜீவக்குமார்.
-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு