அங்குசம் பார்வையில் ‘ஹிட் லிஸ்ட்’
அங்குசம் பார்வையில் ‘ஹிட் லிஸ்ட்’ தயாரிப்பு: ‘ஆர்.கே.செல்லுலாய்ட்ஸ்’ கே.எஸ்.ரவிக்குமார், இணைத்தயாரிப்பு: ஆர்.ஜி.சி.ரமேஷ் கிராண்ட் கிரியேஷன்ஸ். டைரக்ஷன்: சூர்யகதிர் காக்கள்ளர் & கே.கார்த்திகேயன். நடிகர்—நடிகைகள்: சரத்குமார், விஜய் கனிஷ்க்கா [அறிமுகம்] சமுத்திரக்கனி, சித்தாரா, கெளதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, அபி நக்ஷத்ரா, கே.ஜி.எஃப்.ராம், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, அனுபமா குமார், பாலசரவணன். தொழில்நுட்பக் கலைஞர்கள்—இசை: சி.சத்யா, ஒளிப்பதிவு: கே.ராம்சரண், எடிட்டிங்: ஜான் ஆபிரகாம்.
தனது குருநாதர் டைரக்டர் விக்ரமனுக்கு நன்றிக் கடன் செலுத்தும்விதமாக, அவரது மகன் கனிஷ்க்காவை ஹீரோவாக அறிமுகப்படுத்துவதற்காகவே தனது சொந்த பேனரில் படம் தயாரித்ததற்காக டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரை முதலில் பாராட்டுவோம். மேலும் இப்படத்தின் மூலம் தனது மூன்று மகள்களையும் தயாரிப்பாளர்களாக்கியுள்ளார் ரவிக்குமார்.
இப்ப ‘ஹிட் லிஸ்ட்’ கதைக்கு வருவோம். தாய் சித்தாரா, தங்கை அபி நக்ஷத்ராவுடன் வசிக்கும் விஜய் கனிஷ்க்கா ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார். [ கவனிக்க… கனிஷ்கா அல்ல, கனிஷ்க்கா. ஏன்னா நியூமராலஜியில் அதீதி நம்பிக்கை உள்ளவர் டைரக்டர் விக்ரமன்] நிகழ்ச்சி ஒன்றில் போலீஸ் அதிகாரி சரத்குமார் முன்பு, “அடுத்த உயிர்கள் மீது இரக்கம் காட்டுவது தான் புனிதமானது” என்ற வள்ளலாரிசம் பேசி கவனம் ஈர்க்கிறார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் அவரது தாயையும் தங்கையையும் கடத்தி வைத்திருப்பதாக ஒரு மர்மக்குரல் விஜய்யின் போனில் சொல்கிறது.
இதனால் பதறித்துடிக்கும் விஜய், சரத்குமாரிடம் சொல்ல, போலீஸ் படை மூலம் அந்த மர்மக்குரலுக்குச் சொந்தக்காரனைத் தேடுகிறார். விஜய்யின் சட்டைப் பட்டனில் கேமராவை வைத்தும் அவரது டூவீலரில் ஜிபிஎஸ்ஸை வைத்தும் ஃபாலோ பண்ணுகிறார்கள் சரத்தும் போலீஸ் படையும். இதனால் மாஸ்க் அணிந்த ஒரு மனிதன் வாட்ஸ்-அப் வீடியோ காலில் தென்படுகிறான்.
போனில் வரும் மாஸ்க் மேன் சொன்னபடியெல்லாம் பயந்து நடுங்கியபடியே செய்கிறார். ஒருகட்டத்தில் வடசென்னையையே கலக்கும் பெரிய தாதா கே.ஜி.எஃப்.ராமை குளோஸ் பண்ணச் சொல்கிறான் அவன். அதற்கடுத்து ஒரு கொலை அசைன்மெண்ட். இப்படியே இந்த ஹிட்லிஸ்ட் நீள்கிறது. அந்த மாஸ்க் மேன் யார்? அவன் சொன்னபடியெல்லாம் விஜய் செய்வது ஏன்? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘ஹிட்லிஸ்ட்’.
விக்ரமன் படங்களின் சாஃப்ட் நேச்சர் ஹீரோ போலத்தான் அவரது மகன் விஜய் கனிஷ்க்காவும் இருக்கிறார். களையான முகம், நல்ல உயரம், அளவான பாடிலாங்குவேஜ், என மூன்றும் சரிவிகிதத்தில் கலந்த கலவையாக இருக்கிறார் விஜய் கனிஷ்க்கா. ஹீரோ என்பதற்காக சக்திக்கு மீறிய சண்டைக்காட்சிகள் இல்லாமல், கே.ஜி.எஃப்.ராமிடம் செமத்தியாக அடிவாங்கி, ரத்தம் வழிய காட்டிய வகையில் இரட்டை இயக்குனர்களைப் பாராட்டலாம். இது முதல் படம் என்பதால் விஜய் கனிஷ்க்காவின் நடிப்பைப் பற்றி அதிகம் விமர்சிக்கத் தேவையில்லை. அடுத்தடுத்த படங்களில் அவரின் அப்பா பட ஹீரோக்கள் போல தன்னம்பிக்கையுடன் பயணிக்கட்டும். அதன் பிறகு அவரின் நடிப்பையும் மற்ற அம்சங்கள் பற்றியும் விமர்சிப்போம், எழுதுவோம்.
படத்தின் ஹீரோன்னா அது சரத்குமார் தான். அசிஸ்டெண்ட் கமிஷனராக எண்ட்ரியாகும் முதல் சீனிலேயே தாதா கே.ஜி.எஃப்.ராமிடம் போலீஸ் கெத்து காட்டியிருக்கார் சரத்குமார். முகத்தில் முதிர்ச்சி தெரிந்தாலும் ஆக்ஷன் சீக்வென்ஸில் அதிரடி காட்டுகிறார் சரத்.
டைட்டில் கார்டு போடும் போதும் ஐஸ்வர்யா தத்தா என்ற பேர் போட்டார்கள். அவரு தான் ஹீரோயினாக இருக்க முடியும்னு நினைச்சோம். ஆனால் படத்தின் ஆரம்பத்தில் அவருக்கு மொத்தமே மூன்று சீன்கள் தான். இன்னும் சொல்லப் போனால் இரண்டரை சீன்கள் தான். அதுக்கு மேல இந்த ஹிட்லிஸ்ட்ல தேவைப்படல போல. ஸ்மிருதி வெங்கட் தான் மனதில் நிற்கிறார். சித்தாராவுக்கும் அபி நக்ஷத்ராவுக்கும் கொஞ்சம் அதிகமான வேலை கொடுத்திருக்கிறார்கள் டைரக்டர்கள்.
இடைவேளை வரை டெட்ஸ்லோவாக இருக்கும் திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்த உதவியிருக்கிறார்கள் மியூசிக் டைரக்டர் சத்யாவும் கேமராமேன் ராம்சரணும்.
கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்களைத் திருடி தனியார் ஆஸ்பத்திரிகள் கொள்ளையடித்ததைக் கண்டெண்டாக எடுத்துக் கொண்ட வகையில் இரட்டை இயக்குனர்களை பாராட்டலாம் தான். ஆனால் எக்ஸ்பயர் டேட் முடிந்த பின் பயன்படுத்தியிருப்பதால் முக்கால்வாசி திரைக்கதை பெட் அட்மிஷனிலேயே இருக்கிறது.
–மதுரை மாறன்