ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பில் என்னென்ன பாடங்கள் இருக்கும் ? ஹோட்டல் துறை என்றொரு உலகம் பகுதி – 6
படிக்கும் போதே கோட்டு சூட்டு போட்டு படிப்பது ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவாக்க தொழில்நுட்பக் கல்வி. ஆனால், சமையல் கலைஞர்கள் போடும் கோட்டுக்கு பெயர் CHEF COAT ஆகும். படித்து முடித்ததற்கு அப்புறம் கோட்டு போடணும்னா கிட்சன் அல்லாத மற்ற டிபார்ட்மென்ட்ல இருக்கணும்.
அதுவும் ஒரு ஹோட்டல் ஜெனரல் மேனேஜர் அதாவது பொது மேலாளர் பதவி மிகப்பெரிய பதவி. அந்த பதவிக்கு செல்லும்போது கோட்டு அவசியமாகிறது. முதலாளிகளுக்கு அடுத்து முழு பொறுப்பும் கடமையும் அதிகாரமும் இருக்கும் பதவி அந்த பொறுப்புக்கு செல்வதற்கு சர்வீஸ் டிபார்ட்மெண்ட் அனுபவம் இருந்தால்தான் தேர்ந்தெடுக்கிறோம்.
குறிப்பாக நகரங்களில் இருக்கும் நட்சத்திர விடுதிகளுக்கு சர்வீஸ் துறை அனுபவம் உள்ள மேனேஜர்களை ஜெனரல் மேனேஜர் ஆக தேர்ந்தெடுப்போம். நான் பல ஜெனரல் மேனேஜர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் இருப்பதால் சர்வீஸ் அனுபவம் எந்த அளவுக்கு ஜெனரல் மேனேஜர் பதவிக்கு தேவை என்பதை உணர்ந்து செயல்படுவேன். காரணம் வாடிக்கையாளர்களிடம் அதிகமாக உரையாட வாய்ப்புள்ளவர்கள் இவர்கள்தான்.
இதனால் வாடிக்கையாளர்களின் தேவையை நன்றாக புரிந்து நடந்து கொண்டு அவர்களின் சேவை திருப்திகரமாக செய்வதற்கான இவர்களுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் கேளிக்கை விடுதி அதாவது ரிசார்ட்களில் Front Office அனுபவம் இருப்பவர்கள் அதிகமாக தேர்ந்தெடுப்பார்கள். என்ன இது? என்னமோ சொல்கிறார் என்று நீங்கள் நினைக்கலாம், இந்த படிப்பில் என்னென்ன பாடங்கள் இருக்கிறது என்பதை நாம் முதலில் பார்த்துவிடுவோம்
Food Production (Basic, Quantity & Advanced – theory & practical), F&B Service (Food, Beverage & Advanced – theory & practical), Front Office– theory & practical, Housekeeping– theory & practical, Hotel Engineering, Hotel Accounts, Food Science & Microbiology, Computer Applications, Food & Beverage Management, Communicative English, Tourism, Marketing, Human Resources, Facility Planning and six months training,என பல பாடங்கள் வாழ்க்கைக்கும் வேலைக்கும் உதவியாக ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பில் உள்ளன.
இவ்வளவு பாடங்கள் இருப்பதால் நாம் பயப்படத் தேவை இல்லை. இவை அனைத்தும் எளிமையாகவும், ஆர்வத்தைத் தூண்டுபவையாகவும் இருக்கும். சமயோசித புத்தியும் அன்றாட வாழ்வியலையும் ஒருங்கினைத்தே இந்த பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பாடங்களைக் கற்பதன் மூலம் ஹோட்டல் துறைக்கு வேலைக்கு செல்வது மட்டுமல்லாமல், பல்வேறு வாடிக்கையாளர் சேவைத்துறையிலும் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது.
இப்படி பல பாடங்களை படிப்பதால் எந்த பாடத்தை வேண்டுமானாலும் நமக்கு பிடித்த பாடமாக தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். சமைப்பதை விட அதை நன்முறையில் பரிமாறி வாடிக்கையாளரிடம் நல்லமுறையில் சேர்ப்பது சர்வீஸ் துறையாகும். நான் எங்கு போனாலும் ஹோட்டல் முதலாளிகளும் மேலாளர்களும் என்னிடம் கேட்பது சர்வீஸ் டிபார்ட்மெண்ட்க்கு ஆள் இருந்தா சொல்லுங்க அப்படினுதான். அது பெரிய பைவ்ஸ்டார் ஹோட்டல் ஆக இருக்கட்டும் … இல்ல ஒரு சின்ன உணவகமாக இருக்கட்டும் … எல்லோருக்கும் சர்வீஸ் டிபார்ட்மெண்ட்க்கு ஆளில்லைன்னுதான் ஆள் தேடிட்டு இருக்காங்க.
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புல; கிச்சன், சர்வீஸ், ஃப்ரண்ட் ஆபீஸ், ஹவுஸ்கீப்பிங் இந்த நாலு துறையும் முக்கியமான துறையா இருக்கும்.
பொதுவாவே, கேட்டரிங் படிச்சா உங்களுக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் தான். அதுவும் கப்பல்ல வேலை செய்வதற்கு நம்ம மக்களுக்கு நிறைய பிடிக்கும். காரணம் அதிக சம்பளம், குறைவான செலவுதான். கேட்டரிங் படிச்சாலே கப்பல்ல வேலை கிடைக்கும்னு ஒரு முடிவுக்கு வந்துருவாங்க. அப்படி கப்பல்ல வேலை செய்யும்போது நிறைய நாடுகளுக்கு சுற்ற முடியும். அது மட்டும் இல்லாம டாலர் சம்பாதிக்கவும் முடியும்.
கபிலன் என்ற இந்த ஏகலைவனின் துரோணாச்சாரியார், விருந்தோம்பல் கல்வியின் அரசன், 50 ஆண்டுகாலம் விருந்தோம்பல் துறையின் சேவை புரிந்த, மரியாதைக்குரிய ஐயா. பொன்னிளங்கோ சொல்வார்… ”மனிதனுக்கு உணவு என்ற ஒன்று தேவைப்படும் வரை, பயணம் என்ற ஒன்று உள்ளவரை கடைசி மனிதன் ஒருவன் வாழும் வரை, அவனுக்கு பசி என்று ஒன்று இருக்கும் வரை, இந்த துறை என்றுமே அழியாது, உனக்கு வேலை வாய்ப்பு என்றுமே இருந்து கொண்டிருக்கும்” என்று சொல்வார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், அவர் கூறுகையில் உங்களது மாணவர்கள் எங்கெல்லாம் பணியாற்றுகிறார்கள் என்று கேட்கும் பொழுது உலக உருண்டையை சுத்திவிட்டு எங்கு வேண்டுமானாலும் விரலைத்தொடுங்கள், அது எந்த நாட்டில் இருந்தாலும் அங்கு என் மாணவன் ஒருவன் பணியாற்றி கொண்டிருப்பான் என்பார். நாங்கள் ஒரு படி மேலே சென்று சொல்வோம் ஐயா அந்த விரல் ஒரு சமுத்திரத்தின் மேல் பட்டாலும் அந்த சமுத்திரத்தில் போய்க்கொண்டிருக்கும் கப்பலிலும் உங்கள் மாணவர்கள் இருப்பார்கள் என்று பணிவுடன் சொல்வோம்.
இப்படி கேட்டரிங் படிப்பவர்களுக்கு உலகெங்கும் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் பற்றி அடுத்தடுத்த தொடர்களில் பார்ப்போம். அதற்கு முன்பாக ஜனவரியில் இருந்து மத்திய அரசு கேட்டரிங் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் தொடங்கிவிடும் என்பதால், அடுத்த பகுதியில் இந்த படிப்புக்கு எந்தெந்த கல்லூரிகள் சிறந்த கல்லூரிகளாக இன்றைக்கு இருக்கிறது? எப்படி நாம் விண்ணப்பிக்க வேண்டும்? என்பதையெல்லாம் பார்த்து விடுவோம்.
தொடரும்.
— கபிலன்.