அப்பன் சொத்தில் பிள்ளை கடை நடத்தினாலும் 18% வாடகை வரி கட்டியாக வேண்டும் ! ஜி.எஸ்.டி. பரிதாபங்கள் – 05
கடந்த செப்-23 ஆம் தேதியன்று கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள், கடை வாடகை தொகையில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரியை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என்பதாக முடிவெடுத்திருப்பது வணிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே, கமர்சியல் பயன்பாட்டிற்கான அலுவலகம் மற்றும் தொழில், பொது பயன்பாட்டிற்காக லீசுக்கு விடுதல் போன்றவற்றுக்கு வாடகைக்கு விடப்படும் சொத்துக்களுக்கே மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், தாத்தா, பாட்டி, தாய், தந்தை பெயரில் உள்ள கட்டிடங்களில் குடும்ப உறுப்பினர்கள் வர்த்தக நிறுவனங்களை நடத்தி வந்தாலும் அவர்களும் 18% வாடகை வரி செலுத்த வேண்டும் என்பதாக மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.
மிக முக்கியமாக, ஆண்டொன்றுக்கு 20 இலட்சத்துக்கும் குறைவாக வாடகை வருமானம் கொண்டிருக்கும் கட்டிட உரிமையாளர்களுக்கும்; 40 இலட்சம் வரை விற்று வரவு செய்கின்ற சிறு வணிகர்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், இனி அவர்களும் 10-10-2024 அன்று முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு எண்.9/2024 அறிவிப்பின்படி சிறு குறு மற்றும் நடுத்தர வணிகர்களும் வாடகை மீதான ஜிஎஸ்டி சேவை வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு சிறு வணிகர்களையும் அச்சம் கொள்ள வைத்திருக்கிறது.
பொதுவில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால் வர்த்தகம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் சூழலில், இதுபோன்று முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் குறைந்தபட்சம் சம்பந்தபட்ட வணிகர் அமைப்புகளின் பிரதிநிதிகளைக்கூட கலந்தாலோசிப்பதில்லை என்பதை கண்டனமாக பதிவு செய்திருக்கிறார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா.
மேலும், ஜிஎஸ்டி வரி சட்டங்கள் அறிவிக்கப்பட்டு அமல்படுத்த நாளில் இருந்து இதுவரை 907 முறை திருத்தத்திற்குள்ளாகியிருப்பதை சுட்டிக்காட்டி வரிவிதிப்பிலேயே எண்ணற்ற குளறுபடிகள் இருப்பதாகவும்; இச்சட்ட நடைமுறைகளை படித்து தெரிந்து ஆய்வு செய்து பின்பற்றுவதற்கு கல்வி பின்புலம் கொண்டவர்களுக்கே மிகக் கடினமான ஒன்று என்பதோடு ஜி.எஸ்.டி. இணையதளமும் அவ்வப்பொழுது சேவை நடைமுறையில் குறைபாடுகளை கொண்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார் அவர்.
“கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்திருப்பது வாடகை இடத்தில் வாணிபம் செய்யும் ஏழை, நடுத்தர வணிகர்கள் மீது தொடுத்துள்ள மோசமான தாக்குதல் இது என்பதாக கடுமையாக சாடியிருக்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்.
”சிறு குறு தொழில்களை வளர்க்க வேண்டும்; அதன்வழியே சமூகத்தில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கத்தில் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன. நடைமுறையில் பல்வேறு காரணங்களால், சிறு தொழில்கள் மெல்ல நலிவடைந்து வருகின்றன. குறிப்பாக, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்ட பிறகு பல்வேறு வகையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். ஏற்கெனவே சொத்தின் மீதான வரியை உயர்த்தினார்கள். அதனை காரணம் காட்டி கட்டிட உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தினார்கள்.
தற்போது, வாடகைக்கும் மாதம் தோறும் ஜி.எஸ்.டி. கட்டியாக வேண்டுமென்றால், மீண்டும் வாடகை உயரவே செய்யும். இப்பொழுதே, வங்கியில் கடன் வாங்கி இயந்திர உபகரணங்களோடு சிறு குறு தொழிற்சாலைகளை அமைத்தவர்கள் தொடர்ந்து நடத்த முடியாமல், அவற்றை அப்படியே வேறொரு நபருக்கு வாடகைக்கு விட்டு அதிலிருந்து வரும் வருவாயை வைத்து காலத்தை ஓட்டி வருகிறார்கள்.
வங்கிக்கடனுக்கான தவணைகளை செலுத்தி வருகிறார்கள். அந்த வாடகையும்கூட, முறையாக வருவதில்லை. இந்த நிலையில் இந்த அறிவிப்பானது, இதுபோன்றவர்களையும் குறிப்பாக சிறு குறு தொழிலை நம்பி இருப்பவர்களையெல்லாம் பாதிப்படைய செய்திருக்கிறது.” என்கிறார், அரியமங்கலம் சிப்கோ தொழிற்பேட்டை தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் ஆர்.சண்முகம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சரக்கு மற்றும் சேவை வரி மாற்றங்கள் கொண்டு வரும்போதும் வரி சம்பந்தமாக முடிவுகள் எடுக்கும் முன்னரும் வணிகர்கள் சார்ந்த அமைப்புகளின் நிர்வாகிகளோடு கலந்தாய்வு செய்து பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகவே தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.
(பரிதாபங்கள் தொடரும்)
— ஆதிரன்.
G.S.T. பரிதாபங்கள் தொடா்4- ஜ படிக்க click