அங்கும் பார்வையில் ‘சந்திரமுகி-2’ படம் எப்படி இருக்கு ?
அங்கும் பார்வையில் ‘சந்திரமுகி-2’
தயாரிப்பு: லைக்கா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன். லைக்கா தலைமை: ஜிகேஎம். தமிழ்க்குமரன். டைரக்டர்: பி.வாசு. ஆர்ட்டிஸ்ட்: ராகவா லாரன்ஸ், கங்கனா ரணவத், ராதிகா சரத்குமார், வைகைப்புயல் வடிவேலு, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், சுரேஷ் மேனன் ‘சிருஷ்டி டாங்கே, சுபிக் ஷா, ராவ் ரமேஷ், ஒய்.ஜி.மகேந்திரா, ரவி மரியா, விக்னேஷ், பேபி மானஸ்வி, மாஸ்டர் சஞ்சீவ், தர்ஷித். டெக்னீஷியன்கள்: இசை: எம்.எம்.கீரவாணி, ஒளிப்பதிவு: ஆர்டி ராஜசேகர், ஆர்ட் டைரக்டர்: தோட்டா தரணி, எடிட்டர்: ஆண்டனி. பிஆர்ஓ: யுவராஜ்
மிகப்பெரிய கோடீஸ்வரியான ராதிகா சரத்குமாரின் பஞ்சு மில் திடீரென தீப்பற்றி எரிகிறது. அவரது மூத்த மகள் இஸ்லாமியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் வீட்டைவிட்டு விலக்கி வைக்கப்படுகிறார். இளைய மகள் லட்சுமி மேனன் கார் விபத்தில் சிக்கி கால்களை இழக்கிறார். இப்படி வரிசையாக துயர சம்பவம் நடப்பதால் தங்களின் குடும்ப குருஜி( ராவ் ரமேஷ்) யிடம் ஆலோசனை கேட்கிறார் ராதிகா. உங்கள் குல தெய்வத்தை நீண்ட காலம் வழிபடாததால் தான் இவ்வளவு துயரங்கள். எனவே குல தெய்வம் கோவிலுக்குப் போய் விளக்கேற்றி துர்காஷ்டமி அன்று சிறப்பு யாகம் செய்தால் எல்லா துஷ்டங்களும் விலகும் என்கிறார் குருஜி.
அந்த குல தெய்வம் துர்க்கை அம்மன் வேட்டையபுரத்தில் இருப்பதால் ஆன்லைன் மூலமாக அங்கிருக்கும் அரண்மனையை புக் செய்து அங்கு போய்ச் சேர்கிறது ராதிகா குடும்பம். அந்த அரண்மனை முருகேசனுக்கு ( வைகைப்புயல் வடிவேலு) சொந்தமானது. புதர் மண்டிக்கிடக்கும் அந்த கோவிலைச் சுத்தம் செய்யும் போதே சில உயிர்ப்பலி கள் நடக்கின்றன. இதெற்கெல்லாம் காரணம் சந்திரமுகி தான் என்கிறார் ஒரு அகோரி சாமியார். இதற்கிடையே லட்சுமி மேனன் உடலுக்குள் புகுந்து இம்சை கொடுக்கிறார் சந்திரமுகி.
எல்லாவற்றையும் சமாளித்து துர்க்கை அம்மனுக்கு பூஜை நடந்ததா? ராதிகா குடும்பம் நிம்மதி அடைந்ததா? என்பதற்கு விடை தான் இந்த ‘சந்திரமுகி-2’. பொதுவாக ஒரு சினிமாவின் இரண்டாம் பாகம் என்றால் முதல் பாகத்தின் க்ளைமாக்ஸிலிருந்து ‘லீட்’ எடுத்து கண்டினியூ பண்ணுவார்கள். ஆனால் ரஜினியின் சந்திரமுகியில் அதற்கான க்ளைமாக்ஸ் இல்லாமல் படம் முடிந்துவிட்டதால் இரண்டாம் பாகம் கதைக்கு ரொம்பவே யோசித்திருக்கிறார் பி.வாசு. அதன் எஃபெக்ட், இடைவேளை வரையிலான ஒன்றரை மணி நேரம் பிரம்மாண்ட அரண்மனை, அதில் நடிகர் நடிகைகள் கூட்டம், இடையிடையே தெற்குப் பக்கம் போகாதீங்க, சந்திரமுகி இருக்கா என திகில் சீக்வென்ஸ்லேயே படம் போகிறது.
இடைவேளைக்கு பிறகு கங்கனா ரணவத் எண்ட்ரியான பின்னர் தான் கதைக் களம் சூடு பிடிக்கிறது. சந்திரமுகி மீது வேட்டையன் காதல் கொள்வது, அவளை கவர்ந்து வர தனது நண்பன் செங்கோட்டையனை( ராகவா லாரன்ஸ் தான்) அனுப்புவது, கவரப் போன செங்கோட்டையனே சந்திரமுகியின் ஸ்பரிசத்தால் வீழ்வது, இதனால் காமம் தலைக்கேறி தனது நண்பனும் அரசனுமான வேட்டையன் தலையை செங்கோட்டையன் சீவுவது என ஜெட் வேகத்தில் ஸ்கிரிப்டை உருவாக்கியிருக்கார் பி.வாசு. ஆனால் கடைசி அரைமணி நேரம் ரொம்பவே திணறியிருக்கார்.
ராகவா லாரன்ஸின் ‘இண்ட்ரோ’ சீன் மெகா ஃபைட் நம்ம கற்பனைக்கும் அப்பாற்ப்பட்டது. அதே போல் அவருக்கு இம்புட்டு ஒசரமான ‘விக்’கும் செட்டாகல. ‘காஞ்சனா’ வை நான்கு பாகங்களாக எடுத்ததாலோ என்னவோ, இதில் வேட்டையனாக வரும் சீன்கள் உட்பட பல சீன்களில் அதே மாடுலேஷனிலேய டயலாக் பேசுகிறார் ராகவா லாரன்ஸ். முதல் பாகத்தில் தோட்டக்காரர் பேத்தியாக நயன்தாரா. இதில் பால்க் கார் மகளாக மஹிமா நம்பியார்.
கங்கனா ரணவத்தை கண் இமை மூடாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பாலில் முக்கியெடுத்த சீனிக்கிழங்கு மாதிரி சிக்குன்னு இருக்கார் கங்கனா. ராகவா லாரன்ஸுடனான வாள் சண்டையிலும் ஆக்ரோஷமாக பொளந்து கட்டியுள்ளார். அதேபோல் படத்தின் முக்கியமான கேரக்டர் லட்சுமி மேனன் தான். சந்திரமுகி யின் ஆவி தனது உடலுக்குள் புகுந்ததும் வெறி கொண்டு நடக்கிறாரே ஒரு நடை, செம. படத்தில் வைகைப்புயல் வடிவேலு குறுக்கும் நெடுக்குமாக வருகிறார் அவ்வளவு தான்.
முகம் முத்தல் விழுந்து பாடி ஷேப்பும் டோட்டலா சேஞ்ச் ஆகிட்டதால காமெடி சுத்தமா ஒர்க் அவுட் ஆகல. இனிமேல் புயலுக்கு மாமன்னன் மாதிரியான கேரக்டர் தான் செட்டாகும். ஆஸ்கர் விருது வென்ற கீரவாணியா இந்தப் படத்துக்கு இசை? என்று தான் கேட்கத் தோன்றுகிறது. இதில் கடினமான பங்களிப்பு என்றால் கேமரா மேன் ஆர்.டி.ராஜசேகருக்கும் ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணிக்கும் தான்.
” விதியை யாரால் வெல்ல முடியும்” என்ற டயலாக்குடன் படத்தை முடிக்கிறார் டைரக்டர் பி.வாசு. ஏன் இதை சொன்னார்? யாருக்குச் சொன்னார்? —
-மதுரை மாறன்