புத்தக ராயல்டி விவகாரம் – பூனைக்கு மணி கட்டிய எழுத்தாளர் தமயந்தி !

0

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

”பல சூழல்களினால் பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளேன். எனது முந்தைய பதிப்பகத்தார் எனது ராயல்டி தொகையை தந்தால் நலமாயிருக்கும்.” என்ற எழுத்தாளர் தமயந்தியின் முகநூல் பதிவு ராயல்டி விவகாரத்தில் முன்னணி பதிப்பகங்களின் அட்ராசிட்டியை அம்பலமாக்கியிருக்கிறது.

இவரது பதிவுக்கு பதிலளித்திருந்த டிஸ்கவரி பதிப்பகத்தை சேர்ந்த வேடியப்பன் முனுசாமி, ”தங்களுக்கான ராயல்டி தொகை வரவேண்டும் என நினைத்தால் தயங்காமல் நேரில் வரலாம்” என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றியிருந்த எழுத்தாளர் தமயந்தி, “எழுநூற்று சொச்சம் ராயல்டி தொகையை வாங்குவதற்கு, ரயிலேறி ஆயிரத்து ஐநூறு சொச்சம் செலவு செய்து சென்னை வரவேண்டுமா?” என எதிர் கேள்வியெழுப்பிருக்கிறார்.

2

”பதிப்பகத்தை நேரடியாக அணுகாமல் முகநூலில் பதிவிடலாமா?”, ” இது உங்களுக்கும் பதிப்பகத்தார்களுக்கும் உள்ள பிரச்சினைதானே. பொது வெளியில் பகிர்வது சரியா?” என்ற கேள்விகள் தொடங்கி, “அப்படியில்லம்மா நான் ஐந்து பதிப்பகங்களை விட்டு விலகி ஆறாவது பதிப்பாளரிடம் பதிப்பிக்கிறேன். வெளியே சொன்னால் நமக்கு காரியம் ஆகணும். காசு கைக்கு வரணுமே.” என்பன போன்ற அங்கலாய்ப்புகளே பெரும்பாலும் பதிலாகக் கிடைத்தன. அதுவும் பிரபலமான – முன்னணி எழுத்தாளர்களிடமிருந்து!

வீடியோ லிங்:

3

அரசுப் பணியிலோ அல்லது தனியார் நிறுவனத்திலோ பணியாற்றிக் கொண்டு, நூல் பதிப்பிக்கும் எழுத்தாளர்களுக்கு ராயல்டி என்பது என்றைக்கும் பிரச்சினையாக இருக்க போவதில்லை. எழுதுவதையே முழுநேர தொழிலாக கொண்டவர்களுக்கு ராயல்டி என்ற பெயரில் பதிப்பகங்கள் தரும் பங்குத்தொகைதான் வாழ்க்கைக்கான ஆதாரமாக அமைந்திருக்கிறது.

4

விற்பணையில் இத்தனை சதவிகிதம் ராயல்டியாக தந்துவிட வேண்டும் என்று பொதுவில் ஒப்பந்தம் போட்டுக்கொண்டிருந்தாலும்கூட, எத்தனை பிரதிகள் அச்சிடுகிறார்கள்? எத்தனை பிரதிகள் விற்றுத் தீர்ந்தன? எத்தனை பிரதிகள் கைவசமிருக்கின்றன? என்பதை கண்காணிப்பதற்கான எந்தஒரு ஏற்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. பதிப்பகத்தாரின் நம்பிக்கை சார்ந்தும், தார்மீகக்கடமை என்பதாகக் கடந்து செல்வதாகவே இருக்கிறது.

7

எழுத்தாளர் தமயந்தி விவகாரத்தில், அவரது சிறுகதைகள் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் பாடத்திட்டங்களாக அமைந்திருக்கின்றன. ஆனாலும், சில நூறு படிகள் மட்டுமே விற்பணை ஆகியிருக்கிறது என்ற பதிப்பகங்களின் பதில் ஏற்புடையதாக இல்லை என தெரிவிக்கிறார். குறிப்பாக, ஒரு பதிப்பகம் இதற்குமுன்னர் 100 பிரதிகள் விற்றுள்ளன என தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதாவது முகநூல் பதிவிற்கு பிறகு 200 பிரதிகள் விற்றிருப்பதாக சொல்கிறார்கள் என இந்த முரண்பாட்டை சுட்டிக்காட்டுகிறார், எழுத்தாளர் தமயந்தி.

மதரீதியான தடைகள், குடும்ப ரீதியான எதிர்ப்புகள் எல்லாவற்றையும் கடந்து எழுத்துத்துறையில் தனக்கான இடத்தை அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொண்ட தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர் தமயந்தி. எழுத்தாளர், ஊடகவியலாளர், பாடலாசிரியர், இயக்குநர், பண்பலை தொகுப்பாளர் என பண்முகத்தன்மை கொண்டவர். அப்படி இருந்தும்கூட, ராயல்டி விவகாரத்தில் விரல்விட்டு எண்ணத்தக்க சிலரை தவிர, பெரும்பாலான – பிரபலமான எழுத்தாளர்களிடமிருந்து ஆதரவு கிடைக்காதது வருந்தத்தக்க ஒன்று.

ஆயினும், ”ராயல்டி” விவகாரத்தில் பூனைக்கு மணியை கட்டிவிட்டிருக்கிறார் எழுத்தாளர் தமயந்தி. சமூக அவலங்கள் குறித்தும், பல்வேறு போக்குகள் குறித்தும் வரிந்து கட்டிக்கொண்டு வக்கனையாக எழுதும் ”எழுத்தாளர்கள்” எனப்படுவோர், ”ராயல்டி” விவகாரத்தில் எவ்வாறு விணைபுரிகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

வீடியோ லிங்:

– இளங்கதிர்

Leave A Reply

Your email address will not be published.