வனத்துறை, காவல்துறை, வருவாய் துறை பெண்கள் மீது 1992ஆம் ஆண்டு நடத்திய பாலியியல் வல்லுறவு – குற்றவாளிகளின் மனுக்கள் தள்ளுபடி
-ஆதவன்
வனத்துறை, காவல்துறை, வருவாய் துறை பெண்கள் மீது 1992ஆம் ஆண்டு நடத்திய பாலியியல் வல்லுறவு
குற்றவாளிகளின் மனுக்கள் தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தர்மபுரி வாச்சாத்தி வன்முறை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறைச் சம்பவம். சந்தன கடத்தல் வீரப்பன், சந்தக்கட்டைகளைத் வாசாத்தியில் வைத்திருக்கிறார் என்று சூன் 20-22, 1992 தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டுக் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம மக்கள் மீது நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே நிகழ்வே வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது. இந்த வன்முறைக்கு எதிராக வாச்சாத்தி மக்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கை முன்னின்று நடத்தியது ஜனநாயக மாதர் சங்கம்தான்.
தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான குக்கிராமமே வாச்சாத்தி கிராமமாகும். 1992 சூன் 20ம் தேதி அங்கு 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது. வாச்சாத்தி கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாக புகுந்து சோதனை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தினர். பின்னர் கொடுமையாக அவர்களை நடத்தி சரமாரியாக அடித்தனர். பின்னர் 18 பெண்களை அருகே இருந்த வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். காவல் துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த வன்முறைச் செயலில் 34 பேர் உயிரிழந்தார்; 18 பெண்கள் வன்புண்வு செய்யப்பட்டனர். 28 சிறார்களும் பாதிக்கப்பட்டனர்.
கிராம மக்கள் சார்பில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை 1992-ம் ஆண்டு அரூர் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்தார்.ஆயினும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதநிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வாச்சாத்தி கிராமத்தில் முழுமையான விசாரணை நடத்தவும், விசாரணைக்கு பின் நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்து வற்புறுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 1996ஆம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கூட்டுக்குழுவை சேர்ந்த அனைவரையும் கைது செய்து சேலம் சிறைக்கு கொண்டு சென்று அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.
அதே ஆண்டில் இந்த வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு சனவரி மாதத்தில் சி.பி.ஐ. தரப்பு வழக்குரைஞர் வாதம் தொடங்கி நடந்தது.
2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வாச்சாத்தி பலாத்கார சம்பவத்தின் போது தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் ஆகியோரை வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்த 7 பேர் தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட்டது.
இந்த வன்செயல் தொடர்பாக 269 பேர் மீது காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இவர்களில் 155 பேர் வனத்துறையினர், இவர்களில் 4 பேர் ஐஎப்எஸ் அதிகாரிகள். 108 பேர் காவல் துறையினர், இவர்களில் ஒரு துணை ஆய்வாளர்ரும் அடக்கம். வருவாய்த்துறையினர் 6 பேர். வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 107 பேர். இவர்களில் நால்வர் மட்டுமே ஆண்கள் ஆவர். வழக்கு விசாரணையில் இருந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 54 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு கோர்ட்டில் சூலை 5,2011 முதல் நடந்தது. இருதரப்பினரின் வாதமும் முடிவடைந்தநிலையில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் 2011 செப்டெம்பர் 29 தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
தண்டனை பெற்றவர்கள் அனைவரும் அரசு ஊழியர் என்பதால் தண்டனையை இரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் மேல்முறையீடு தொடர்பாக தீர்ப்பு இன்று (29.09.2023) வழங்கியது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. மாவட்ட நீதிபதி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளிகள் அனைவரும் ஜாமீன் பெற்று வெளியில் இருப்பதால் அனைவரையும் மாவட்ட நீதிமன்றம் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் தமிழ்நாடு இழப்பீடு தொகையாக ரூ.10 இலட்சம் வழங்கவேண்டும். இதில் ரூ.5 இலட்சம் குற்றவாளிகளிடமிருந்து வசூல் செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும். அல்லது சுயத்தொழில் தொடங்க தமிழ்நாடு அரசு வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்றும் உத்தரவு இட்டுள்ளது.
காவல்துறை, வனத்துறை, வருவாய் அலுவலர்கள் என அனைவரும் சேர்ந்து நடத்திய அரச பயங்காரவாதத்திற்கு வழங்கப்பட்டட தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வேல்முருகன் அவர்கள் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது அரசை விழிப்படைய செய்யவேண்டும். இதுபோன்ற அரச பயங்கரவாதத்தை அரசு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே சமூக நல ஆர்வலர்களின் வேண்டுகோளாகும்.