தற்காலிக ஆசிாியா்கள் பணி நிரவலை கைவிட ஐபெட்டோ அண்ணாமலை வலியுறுத்தல்!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பணி நிரவல் இந்த ஆண்டு இல்லை என்று அறிவிக்கிறார். ஆனால் தொடக்கக்கல்வி இயக்குனர் சூலை மூன்றாம் தேதி திட்டமிட்டபடி பணி நிரவல் நடைபெறும் என்று அறிவிக்கிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு தீர்வு என்ன..? தீர்வு என்ன..? தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை கேள்வி ஏழுப்பிவுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சூலை மூன்றாம் தேதி நடைபெற உள்ள மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கு பணி நிரவல் நடைபெறாது என்று திட்டவட்டமாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஊடகங்களிலும் அனைத்து நாளேடுகளிலும் கல்வி அமைச்சர் அளித்த பேட்டி வெளிவந்துள்ளது.

காரணம் ஆசிரியர் சங்கங்கள் சொல்வது போல் நாடு முழுவதும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பெரும்பான்மையான ஒன்றியங்களில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நூற்றுக்கு மேல் உள்ளன. அதனால் பணி நிரவலை இந்த ஆண்டு நிறுத்தி விடுகிறேன் என்று அறிவித்தார்கள்.
ஆசிரியர்கள் மத்தியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு மீது ஒரு நல்ல உணர்வு நிரம்பி வழிந்தது. ஆனால் தொடக்க கல்வி இயக்குனர் முனைவர் பூ.ஆ. நரேஷ், இணை இயக்குனர் சாமிநாதன் கூகுள் மீட்டிங்கை கூட்டி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மத்தியில் திட்டமிட்டபடி ஜூலை மூன்றாம் தேதி பணி நிரவல் நடைபெறும் என்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் உடனடியாக வட்டார கல்வி அலுவலர்களுக்கு தகவல் கொடுத்து பணி நிரவலில் கலந்து கொள்ளச் சொல்லி நேர்முகமாக குறிப்பாணை வழங்கியுள்ளார்.

61 பிள்ளைகள் ஒரு வகுப்பில் இருந்தாலும் மூன்று ஆசிரியர்கள் இருந்தால் ஒருவர் பணி நிரவல் என்று அறிவித்திருக்கிறார். இடம் காலியாக இருந்தாலும் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது என்று அறிவித்திருக்கிறார்.
ஆசிரியர்கள் மத்தியில் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு பணி நீட்டிப்பு இல்லை என புலனப் பதிவுகளில் மூலம் கவலைகளை தெரிவித்து வந்தார்கள். ஆனால் தொடக்கக்கல்வி இயக்குனரை பொறுத்தவரையில் அவர் கொடுத்து வருகிற மறைமுக அழுத்தத்தில் பல மாவட்டங்களில் இரண்டு ஆசிரியர்கள் மூன்று ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் கூட பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டு வருகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களை கேட்டால் தொடக்கக்கல்வி இயக்குனர்கள் அறிவுரைப்படி தான் நாங்கள் செயல்படுகிறோம் என்று தெரிவிக்கிறார்கள்.
அரசாணை தெளிவாக இருந்தும் தொடக்கக் கல்வி துறையை ரெக்கவரி துறையாக மாற்றி அன்றாடம் செயல்பட்டு வருகிறார். முதலமைச்சர் தலைவர் கலைஞர் மு கருணாநிதி அவர்கள் காலத்திலிருந்து ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணப் பயனுக்கெல்லாம் தணிக்கை துறையினை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார். வெளிப்படையாக எழுத வேண்டும் என்றால் தொடக்கக் கல்வி ஆசிரியர்களை பழிவாங்கவே தொடக்கக்கல்வி இயக்குனர் பொறுப்பினை ஏற்று உள்ளது போல் அவரது நடவடிக்கை அமைந்துள்ளது. அவருடைய பணிக்காலத்தில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக ஒரு நாள் கூட பணியாற்றாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாக மாறுதலை நிறுத்தி விட்டதாக எங்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதி அளித்தார். ஆனால் தொடர்ந்து நிர்வாக மாறுதல் நடைபெற்று வருகிறது. பணி நிரவலினையும் விருப்பப்பட்டவர்களுக்கு விருப்பப்பட்ட இடங்களை அளிப்பதில் பேரம் பேசி முடித்து விட்டதாக எங்களுக்கு ஆதாரப்பூர்வமாக தெரிகிறது. தொடக்கக்கல்வி இயக்குனருக்கு வேண்டியவருக்கு தேவையான இடத்தில் பணி நிரவல் செய்து கொடுப்பது, அவர் பரிந்துரையில் இடம் பெறாதவர்களை அப்படியே விட்டு விடுவது என்று செயல்படுகிறார்.
தொடக்கக் கல்வித் துறை வரலாற்றில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவிப்பினை உடன் புறந்தள்ளுவதும், அலட்சியப்படுத்துவதும், தன்னாட்சி நிர்வாகத்தினால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற உறுதியில் நடத்தி வருகிற இயக்குனர் ஒருவரை இவரைத் தவிர நாங்கள் இதுவரை எவரையும் கண்டதில்லை. தொடக்கக்கல்வித் துறையில் ஒரு வரலாற்று பிழையினையே இந்த அரசுக்கு ஏற்படுத்தி வருகிறார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உடன் தலையிட்டு பணி நிரவலினை நிறுத்துவதுடன் பணிநீட்டிப்பு, தன்னாட்சி நிர்வாகத்திற்கு உடன் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டுமாய் சங்கங்களின் மூத்த தலைவர் என்ற முறையிலும் , அரசின் மீது அக்கறை கொண்டு உள்ளவர் என்ற முறையிலும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பணி நிரவல் நாளை நடைபெற்றால் பணி நீட்டிப்பு தொடர்ந்து நிறுத்தப்பட்டால் கலந்தாய்வு மையங்களுக்கு முன்பு தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பிலும் ஏனைய சங்கங்களின் சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.