அங்குசம் பார்வையில் ‘இதயம் முரளி’
தயாரிப்பு & டைரக்டர்: டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன். தமிழ்நாடு ரிலீஸ்: இன்பன் உதயநிதியின் ‘ரெட் ஜெயண்ட். ஆர்டிஸ்ட்: அதர்வா முரளி, ப்ரீத்தி முகுந்தன், ஃபகத் பாசில், கயாது லோஹர், நிஹரிகா, ஏஞ்சலின் ( அறிமுகம்) நட்டி, ‘பரிதாபங்கள்’ சுதாகர், எஸ்.தமன், ரக்ஷன், டிராவிட், ஆடுகளம் நரேன், காளி வெங்கட், ராம்கி, ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா & சி.எச்.சாய், இசை: எஸ்.தமன், எடிட்டிங்: பிரதீப் ராகவ், வசனம்: ரமணகிரி வாசன், காஸ்ட்யூம்: பல்லவி சிங்& மீனாட்சி, பிஆர்ஓ: சதீஷ் ( எய்ம்)
பள்ளியில் படிக்கும் போது இதயாவுக்கு ( அதர்வா முரளி) டீச்சர் ஜொனிடா மீது ஒரு ‘இது’ . அப்புறம் பாலிடெக்னிக் கில் படிக்கும் போது ப்ரீத்தி முகுந்தன் மீது லவ். இதை ப்ரீத்தியிடம் சொல்லப் போகும் போது, ஒரு ட்விஸ்ட் வந்து கிராஸாகி சொல்ல முடியாமல் போகிறது. அதே கதை தான் டாக்டர் கயாது லோஹரிடமும். இதனால் அப்செட்டாகும் அதர்வாவின் மாமா நட்டி, அமைச்சர் மகள் மாளவிகா மனோஜுக்கு நிச்சயம் பண்ணுகிறார். ஓல்டு லவ்வரை அதர்வா கரம் பிடித்தாரா? இல்ல மாளவிகா மனோஜை கல்யாணம் பண்ணினா ரா? இதான் இந்த ‘இதயம் முரளி’ க்ளைமாக்ஸ்.
1991-ல் அதர்வாவின் அப்பா முரளியின் ‘இதயம்’ வந்தது. நேர்கோட்டில் பயணித்த கதை, இதயத்தை இதமாக்கிய இசைஞானியின் இசை, முரளி, ஹீராவின் மிகையில்லா நடிப்பு, இதெல்லாம் அந்த இதயத்தை இனிக்க வைத்து, ரசிக்க வைத்தது, உருக வைத்தது. ஆனால் இந்த ‘இதயம் முரளி’யில் அந்த ‘இதயம்’ கதை போல சொல்ல நினைத்த டைரக்டர் ஆகாஷ் பாஸ்கரன், ப்ரீத்தி முகுந்தன் ட்வின்ஸ் என்ற ட்விஸ்டை மட்டுமே வைத்துக் கொண்டு, மற்றதையெல்லாம் டீலில் விட்டதால் நூல் அறுந்த பட்டம் போல வானத்தில் அல்லாடுகிறது இந்த ‘இதயம் முரளி’.
ஒரு வேளை அதர்வா கேரக்டருக்கு இதயான்னு வச்சு இதயம் முரளி ஆகிட்டாரோ என்னவோ…. ? மூன்று பருவங்களில் அதர்வா நன்றாகவே ஸ்கோர் பண்ணிவிட்டார். ப்ரீத்தி முகுந்தன் செம பியூட்டி. நடிப்பிலும் நல்ல டியூட்டி பார்த்திருக்கிறார். காஸ்ட்யூம் சும்மா ஜில்லுனு இருக்கு. கயாது லோஹருக்கு நான்கு சீன்கள் தான் என்றாலும் நான்கிலும் அழகுப் பதுமையாக மட்டும் வராமல் அருமையான நடிப்பையும் வழங்கி நம்மை வசீகரிக்கிறார். அதிலும் ரயில்வே ஸ்டேஷனில் அதர்வாவிடம் காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் மனப் போராட்டத்தை கண்களாலேயே பேசி நம்மை வசியம் செய்துவிட்டார் கயாது லோஹர்.
அதைவிட அந்த சீனில் நம்மை பெரிதும் வசியம் செய்தது “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா” என்ற இசைஞானியின் ‘இதயம்’ பட பாடல் தான். இந்த படத்தின் மூலம் நம்பிக்கை தருபவர்கள் அதர்வாவின் நண்பர்களாக வரும் பரிதாபங்கள் சுதாகரும் மியூசிக் டைரக்டர் தமனும் தான். டைமிங் காமெடியால் தியேட்டரை கலகலப்பாக்குகிறார்கள். அறிமுகம் ஏஞ்சலின்னு டைட்டிலில் போட்ட அளவுக்கு படத்தில் அவ்வளவு ஒர்த் இல்லை.
கெஸ்ட் ரோலில் வந்தாலும் ஃபகத் பாசில் பெஸ்ட் தான். “இளிச்சவாயன் கிடைச்சுட்டான், அவன்ட்ட் உங்க ஃப்ளாஷ் பேக்கை இறக்கி வைக்கலாம்னு பார்க்குறீங்களா?” ஃபர்ஸ்ட் ஃப்ளைட் சீனில் ஆரம்பித்து க்ளைமாக்ஸில் மாளவிகா மனோஜுக்கு ‘தம்’ கொடுத்து தம்ஸ் -அப் காட்டுவது வரை ஃபகத் நடிப்பில் ஒரு துள்ளல். மனோஜ் பரமஹம்சாவும் எச்.சாயும் தங்கள் கேமராவால் ‘இதயம் முரளி’யை ரசிக்க வைக்கிறார்கள். சென்னை சாலைகளில் ஃபைட் சீன் யார் கேமரா மேன்னு தெரியல. சூப்பர் ஃபைட், சூப்பர் ஒளிப்பதிவு. தமனின் பாடல்கள் சுமார் ரகம் தான்.
ஆனால் பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார். ப்ரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ஏஞ்சலின், நிஹரிகான்னு இளசுகள் ஜில்லுனு ஜிவ்வுன்னு இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனா ட்வின்ஸ் ப்ரீத்தி முகுந்தன் என்ற இந்த ஒத்த ட்விஸ்டை வச்சுக்கிட்டு கதையை ஆரம்பித்த ஆகாஷ் பாஸ்கரன், அமெரிக்கா, நாசா, ஸ்பேஸ் ரிசர்ச்சுன்னு ஆகாயத்துலேயே சுத்தி தரையில் கதையை லேண்ட் பண்ண ரொம்பவே படாதபாடுபட்டு இடைவேளைக்கு பிறகு இழு இழுன்னு நிப்பாட்டிருக்காரு….
அங்குசம் பார்வையில் ‘இதயம் முரளி’ 50/100
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.