அங்குசம் பார்வையில் ‘ஐ நோபடி’
தயாரிப்பு: சுப்ரியா மேனன், முகேஷ் மேத்தா, விஜயராகவன், டைரக்டர்: நிஜாம் பஷீர், கதை: சமீர் அப்துல், ஆர்டிஸ்ட்: பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து, ஹக்கீம் ஷாஜகான், அசோகன், விஜயராகவன், பேபி நட்சத்திரா, ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன், இசை: ஜேக்ஸ் பிஜாய், எடிட்டிங்: எம்பி.ரமீஸ், காஸ்ட்யூம்: தான்யா பாலகிருஷ்ணன், ஸ்டண்ட்: யானிக் பென் & அமித் ஜாலிபாஸ்டின், ஆர்ட் டைரக்டர்: அர்ஷத் நக்கோத், பிஆர்ஓ: யுவராஜ்.
கைத்துப்பாக்கியுடன் ஒரு வங்கிக்குள் நுழைகிறார் ராஜீவன் [ பிருத்விராஜ் சுகுமாரன்]. அதே வங்கிக்குள் ஏற்கனவே புகுந்திருந்த கொள்ளைக்கும்பல், 17 கோடியை கொள்ளையடித்துவிட்டு, ராஜீவனுக்கு முகமூடி போட்டு, ஒரு வேனில் அவரையும் கடத்திக் கொண்டு போகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனஸ்[ ஹக்கீம் ஷாஜகான்] அவர்களை மடக்கும் போது, துப்பாக்கியால் சுட்டு தப்பிவிடுகிறது அந்தக் கும்பல். அந்த 17 கோடி எங்கே? ராஜீவனைத் தூக்கி வந்து போலீஸ் விசாரித்தும் உண்மையான கொள்ளையர்களையும் அந்த பணத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் சாலைவிபத்தில் மூன்று பேர் செத்து, அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த போது தான் அவர்கள் தான் வங்கிக் கொள்ளையர்கள் என போலீஸ் கண்டு பிடிக்கிறது. அப்படின்னா அந்த 17 கோடியை பதுக்கியது யார்? இதான் இந்த ‘ஐ நோபடி’யின் விறுவிறுப்பான க்ரைம் த்ரிலிங் ஆட்டம்.
அந்த 17 கோடி ரூபாய் ராஜீவனிடம் தான் இருக்கிறது என்பதைச் சொல்லிவிட்டு, அதன் பின் கதாசிரியர் சமீர் அப்துலும் டைரக்டர் நிஜாம் பஷீரும் சேர்ந்து ஆடும் சேஸிங் கேம் அடி தூள் போட வைக்கிறது.
மலையாள சினிமாக்களுக்கே உரிய நேர்கோட்டில் பயணிக்கும் கதை, வம்படியாக ட்விஸ்ட் வைக்காமல், அதன் போக்கிலேயே பயணிக்கும் திரைக்கதை இவை தான் ‘ஐ நோபடி’யின் பெரும் பலம். கொள்ளைக்கும்பலுடன் இன்ஸ்பெக்டர் ஆனஸுக்கு இருக்கும் லிங்க், 17 கோடியை தனது வீட்டிலேயே மறைத்து வைத்து, பிருத்விரஜ் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் இதெல்லாம் செம ஜோர். பிருத்விராஜின் மனவியாக பார்வதி திருவோத். தனது வீட்டிற்குள்ளேயே போலீஸ் வந்து விசாரிக்கும் போதும், தனது மூத்த மகள் கடத்தப்பட்ட பிறகு எஸ்.பி.ஆபீசில் கலங்கி நிற்பது, போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, வீதிக்கு வந்து போராடுவது என பார்வதி திருவோத்து, அசுரத்தனமாக நடித்திருக்கிறார்.
இவரு இப்படின்னா பிருத்விராஜ் சுகுமாரன் சும்மா இருப்பாரா? தனது வீட்டுக்குள் பணம் இருப்பதை மோப்பம் பிடித்துவிட்ட வாட்ச்மேன் ஜேக்கப்பை [ அசோகன்] சரிக்கட்டும் ஐடியா, ஹக்கீம் ஷாஜகானின் மச்சான்கள் தான் தனது மகளைக் கடத்தி வைத்திருக்கிறார்கள் எனத் தெரிந்து அதிரடியாக அவர்கள் வீட்டிற்குள் புகுந்து மகளையும் பணத்தையும் மீட்பது, முதல்வர் விஜயராகவனிடம் ‘ ஐ நோபடி’ என தெனாவெட்டாகச் சொல்வது, என பிருத்விராஜும் பின்னிவிட்டார்.
கடைசி அரை மணி நேரம் வந்தாலும் முதல்வராக விஜயராகவன் [ தயாரிப்பாளர்களில் ஒருவர்] செம அப்ளாஷ் அள்ளிவிட்டார்.
வில்லன் கும்பலுடன் பஸ்சுக்குள் பிருத்விராஜ் போடும் ஃபைட் சீக்வென்ஸில் சிலிர்க்க வைக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென். அந்த சீனை மேலும் சிலிர்க்க வைத்திருப்பவர் கேமராமேன் நம்ம ஊரு தினேஷ் புருஷோத்தமன் தான். பொலிடிக்கல் & க்ரைம் த்ரில்லிங் எஃபெக்ட்டை நமக்குள் கச்சிதமாக கடத்துகிறது ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை.
எவெரிபடி லைக் திஸ் ‘ஐ நோபடி’.
அங்குசம் பார்வையில் ‘ஐ நோபடி’ ( I Nobody) 67/100
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.