விட்டால் வரியை வசூலிக்க ரோபோட்டை கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள் போல ! IFHRMS மென்பொருள் யார் ?
இந்த IFHRMS மென்பொருள் யார் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது? ஏன் இத்தனை குளறுபடிகள்? இந்த IFHRMS இல் திரும்பத் திரும்ப குளறுபடிகள் ஏன் நீடித்து வருகிறது?
விட்டால் வரியை வசூலிக்க ரோபோட்டை கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள் போல ! வருமான வரி பிடித்தம் இந்த நிதியாண்டிலிருந்து IFHRMS மென்பொருள் வழியாக தானாகவே கணக்கீடு செய்து பிடித்தம் செய்யும் முறையில் உள்ள குளறுபடிகளை நீக்கி எப்போதும் போல ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் புதிய முறைப்படியோ? அல்லது பழைய முறைப்படியோ? வருமான வரி கணக்கீடு செய்து தாக்கல் செய்யும் முறையினை மீண்டும் அமல்படுத்திட வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் அரசுப் பணியாளர்களுக்கு IFHRMS மென்பொருள் வழியாக ஊதியப் பட்டியல் பெறப்பட்டு மாதாந்திர ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. வருமான வரிப் பிடித்தம் ஏற்கனவே ஆசிரியர்கள் அரசுப் பணியாளர்கள் அவர்களுக்கு வரக்கூடிய வரியின் அடிப்படையில் மாதம் தோறும் வருமான வரியும் அதற்கான செஸ் வரியும் பிடிக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி மாத ஊதியத்தில் அவர்களுக்கான ஊதியத்தில் மீதமுள்ள வருமான வரிப்பிடித்தம் செய்யப்பட்டுள்ள நடைமுறையே இதுவரையில் இருந்து வந்தது. ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் அவர்கள் விரும்பிய பழைய முறைப்படியோ? அல்லது புதிய வரி விதிப்பு முறைப்படியோ? கணக்கீடு செய்து வருமான வரி தாக்கல் செய்து வந்துள்ளார்கள். இதில் எவ்விதமான குழப்பமும் இல்லை. இந்தியத் திருநாட்டிலேயே வருமான வரியை மிகச் சரியாக செலுத்தி வருபவர்கள் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான் என்பதை அனைவரும் அறிவார்கள்.
ஆனால், ஏப்ரல் மாதத்தில் இருந்து வருமான வரியினை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை IFHRMS மென்பொருள் தானாகவே மாதம்தோறும் கணக்கிடப்பட்டு பிடித்தம் செய்யப்பட இருக்கிறது. இப்படி தானாகவே வருமான வரி கணக்கீடு செய்து வழங்கப்படக்கூடிய இந்த முறையில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. சென்ற ஆண்டு மொத்தமே ₹18500/- வருமான வரி கட்டிய ஆசிரியர் ஒருவருக்கு, இந்த ஒரு மாதத்திற்கு மட்டுமே ₹10,500/- வருமான வரிப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அவர் எப்படி மாதம் தோறும் குடும்பத்தை நடத்துவது?
பழைய முறையில் வரி பிடித்தம் செய்யப்படுவர்களுடைய வீட்டுக் கடன், மருத்துவ காப்பீடு, படிப்பு கட்டணம் ஆகிய எவற்றையும் கவனத்தில் கொள்ளாமல் புதிய முறைப்படி உள்ளவர்களுக்கு எவ்வாறு கணக்கிடப்படுகிறதோ, அதேபோல் இவர்களுக்கும் கணக்கிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது.
அதிகமாக பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரியினை திரும்பப் பெறுவது என்பது சாதாரண காரியம் அல்ல என்பதை எல்லா ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் கடந்த காலங்களில் அனுபவப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஊதியத்திற்காக உருவாக்கப்பட்ட IFHRMS மென்பொருளில் வருமான வரிப்பிடித்தம் செய்யும் தொகை இருமடங்கு அதிகமாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த IFHRMS மென்பொருள் யார் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது? ஏன் இத்தனை குளறுபடிகள்? இந்த IFHRMS இல் திரும்பத் திரும்ப குளறுபடிகள் ஏன் நீடித்து வருகிறது? என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கேள்விக்கணைகளை தொடுத்து வருகிறார்கள்.
மாண்புமிகு நிதித் துறை அமைச்சர் உடனடியாக ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களை பாதிக்கக்கூடிய இந்த மாதம்தோறும் வருமான வரிப்பிடித்தம் செய்யும் முறையினை ரத்து செய்துவிட்டு எப்போதும் போல ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் புதிய முறைப்படியோ? அல்லது பழைய முறைப்படியோ? வருமான வரி கணக்கீடு செய்து தாக்கல் செய்யும் பழைய நடைமுறையினை மீண்டும் அமல்படுத்திட வேண்டுமாறு தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.” என்பதாக நிதித்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார், ஐபெட்டோ அண்ணாமலை.
– அங்குசம் செய்திப்பிரிவு.